லூக்கா 9 : 1 (OCVTA)
இயேசு பன்னிரண்டு பேர்களை அனுப்புதல் இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒன்றாய்க் கூப்பிட்டு, பிசாசுகளையெல்லாம் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்தார்.
லூக்கா 9 : 2 (OCVTA)
அத்துடன், இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களை குணமாக்கவும், அவர் அவர்களை அனுப்பினார்.
லூக்கா 9 : 3 (OCVTA)
இயேசு அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஊன்றுகோலையோ, பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ, கொண்டுபோக வேண்டாம்.
லூக்கா 9 : 4 (OCVTA)
நீங்கள் எந்த வீட்டிற்குள் போகிறீர்களோ, அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை, அங்கேயே தங்கியிருங்கள்.
லூக்கா 9 : 5 (OCVTA)
அங்கேயுள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிப் போடுங்கள்” என்றார்.
லூக்கா 9 : 6 (OCVTA)
அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமங்கள்தோறும், எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து, மக்களைச் சுகப்படுத்தினார்கள்.
லூக்கா 9 : 7 (OCVTA)
சிற்றரசன் ஏரோது, நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவான் இறந்தோரிலிருந்து உயிரோடு திரும்பவும் எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான்.
லூக்கா 9 : 8 (OCVTA)
வேறுசிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர்பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக்கொண்டார்கள்.
லூக்கா 9 : 9 (OCVTA)
ஆனால் ஏரோது, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேனே. இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, அவரைப் பார்க்க முயற்சி செய்தான்.
லூக்கா 9 : 10 (OCVTA)
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்தல் அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார்.
லூக்கா 9 : 11 (OCVTA)
ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, குணமடைய வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
லூக்கா 9 : 12 (OCVTA)
மாலை வேளையானபோது பன்னிரண்டு பேர்களும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய், சாப்பாட்டையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். நாம் சற்று தூரமான ஒரு இடத்தில் இருக்கிறோமே” என்றார்கள்.
லூக்கா 9 : 13 (OCVTA)
அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். அவர்கள் அதற்கு, “எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. இல்லையென்றால், நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கவேண்டும்” என்றார்கள்.
லூக்கா 9 : 14 (OCVTA)
அங்கே ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். ஆனால் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார்.
லூக்கா 9 : 15 (OCVTA)
சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.
லூக்கா 9 : 16 (OCVTA)
அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பங்கிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.
லூக்கா 9 : 17 (OCVTA)
அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
லூக்கா 9 : 18 (OCVTA)
பேதுருவின் அறிக்கை ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், அவருடனே இருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
லூக்கா 9 : 19 (OCVTA)
அவர்கள் அதற்கு பதிலாக, “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகுகாலத்திற்கு முன்வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர்பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள்.
லூக்கா 9 : 20 (OCVTA)
அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் கிறிஸ்து!” என்றான்.
லூக்கா 9 : 21 (OCVTA)
இயேசு தமது மரணத்தைக் குறித்து அறிவித்தல் இயேசு அவர்களிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார்.
லூக்கா 9 : 22 (OCVTA)
பின்பு இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும். நான் யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படவும், கொல்லப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழும்பவும் வேண்டும்” என்றார்.
லூக்கா 9 : 23 (OCVTA)
பின்பு இயேசு, அவர்கள் எல்லோரையும் நோக்கி, “யாராவது என் பின்னே வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தினந்தோறும் தம் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
லூக்கா 9 : 24 (OCVTA)
ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் யாரும் அதை இழந்துபோவார்கள். என் நிமித்தம் தம் உயிரை இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
லூக்கா 9 : 25 (OCVTA)
யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவர்களுக்குப் பலன் என்ன?
லூக்கா 9 : 26 (OCVTA)
யாராவது என்னைக்குறித்தும் என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் எனது மகிமையிலும் எனது தந்தையின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன்.
லூக்கா 9 : 27 (OCVTA)
“இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசைக் காணும்முன் மரணமடைய மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்” என்றார்.
லூக்கா 9 : 28 (OCVTA)
இயேசு மறுரூபமடைதல் இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குபின், அவர் பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் தன்னுடனே கூட்டிக்கொண்டு, மன்றாடும்படி ஒரு மலைக்குச் சென்றார்.
லூக்கா 9 : 29 (OCVTA)
அவர் மன்றாடிக்கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள், வெண்மையாய் மின்னியது.
லூக்கா 9 : 30 (OCVTA)
மோசே, எலியா ஆகிய இரண்டுபேர்களும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
லூக்கா 9 : 31 (OCVTA)
எருசலேமில் சீக்கிரமாய் இயேசு நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக் குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
லூக்கா 9 : 32 (OCVTA)
பேதுருவும் அவனுடைய கூட்டாளிகளும், கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தூக்கம் தெளிந்து விழித்தபோது, அவருடைய மகிமையையும், அவருடன் நின்ற இரண்டுபேரையும் கண்டார்கள்.
லூக்கா 9 : 33 (OCVTA)
அவ்விருவர் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது, நாம் இங்கு மூன்று கூடாரங்களை அமைப்போம். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்” என்றான். அவன் தான் சொல்வது என்னவென்று அறியாமல் சொன்னான்.
லூக்கா 9 : 34 (OCVTA)
பேதுரு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் சூழ்ந்தபோது அவர்கள் பயந்தார்கள்.
லூக்கா 9 : 35 (OCVTA)
அப்பொழுது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிந்துகொண்டவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
லூக்கா 9 : 36 (OCVTA)
அந்தக் குரலைக் கேட்டபொழுது, இயேசு மட்டும் இருப்பதை சீடர்கள் கண்டார்கள். அவர்களோ, இந்த சம்பவத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்கள். தாங்கள் கண்டதை அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை.
லூக்கா 9 : 37 (OCVTA)
தீய ஆவி பிடித்த சிறுவனை இயேசு குணமாக்குதல் மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது.
லூக்கா 9 : 38 (OCVTA)
மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரைக் கூப்பிட்டு, “போதகரே, என் பிள்ளையை வந்து பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை.
லூக்கா 9 : 39 (OCVTA)
ஒரு தீய ஆவி அவனைப் பிடித்துக் கொள்கிறது. அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாய் நுரைக்கிறது. அது அவனைவிட்டுப் போகாமல் அலைக்கழிக்கிறது.
லூக்கா 9 : 40 (OCVTA)
அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர்களால் முடியவில்லை” என்றான்.
லூக்கா 9 : 41 (OCVTA)
அப்பொழுது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்று அந்த பிள்ளையின் தகப்பனிடம் சொன்னார்.
லூக்கா 9 : 42 (OCVTA)
அந்தச் சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பிசாசு அவனை வலிப்புக்குள்ளாக்கித் தரையில் தள்ளி வீழ்த்தியது. இயேசுவோ அந்த அசுத்த ஆவியை அதட்டி சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார்.
லூக்கா 9 : 43 (OCVTA)
அவர்கள் எல்லோரும், இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு தமது மரணத்தைக் குறித்து இரண்டாம்முறை முன் அறிவித்தல் இயேசு செய்த எல்லாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தனது சீடர்களிடம்,
லூக்கா 9 : 44 (OCVTA)
“நான் உங்களுக்குச் சொல்லப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்” என்றார்.
லூக்கா 9 : 45 (OCVTA)
அவர்களோ அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததினால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக்குறித்து அவரிடம் கேட்கவும் தயங்கினார்கள்.
லூக்கா 9 : 46 (OCVTA)
சீடர்களுக்கிடையில் தங்களில் யார் பெரியவன் என்பதை பற்றி ஒரு வாக்குவாதமும் எழுந்தது.
லூக்கா 9 : 47 (OCVTA)
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறுபிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார்.
லூக்கா 9 : 48 (OCVTA)
பின்பு அவர் சீடர்களிடம், “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்கிறவர்கள் யாரோ, அவர்கள் என்னையே ஏற்றுக்கொள்கிறார்கள்; என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்கள். உங்கள் எல்லோரிலும் மிகவும் சிறியவராய் இருக்கிறவர்களே மிகப்பெரியவர்களாய் இருக்கிறார்கள்” என்றார்.
லூக்கா 9 : 49 (OCVTA)
அப்பொழுது யோவான் இயேசுவிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பிசாசுகளைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் நம்மில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.
லூக்கா 9 : 50 (OCVTA)
அதற்கு இயேசு, “அவனைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கிறான்” என்றார்.
லூக்கா 9 : 51 (OCVTA)
சமாரியர்கள் எதிர்ப்பு இயேசு தான் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, மனவுறுதியோடு அவர் எருசலேமை நோக்கிப் புறப்பட்டார்.
லூக்கா 9 : 52 (OCVTA)
அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்பாகவே சீடர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள்.
லூக்கா 9 : 53 (OCVTA)
அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை.
லூக்கா 9 : 54 (OCVTA)
அவருடைய சீடரான யாக்கோபும், யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்ததுபோல், இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள்.
லூக்கா 9 : 55 (OCVTA)
ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார்.
லூக்கா 9 : 56 (OCVTA)
அவர்கள் அதற்குப் பின்பு வேறு கிராமத்திற்குச் சென்றார்கள்.
லூக்கா 9 : 57 (OCVTA)
இயேசுவைப் பின்பற்றுவதற்கான விலை அவர்கள் வழியில் நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
லூக்கா 9 : 58 (OCVTA)
இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு பதுங்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
லூக்கா 9 : 59 (OCVTA)
அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான்.
லூக்கா 9 : 60 (OCVTA)
அப்பொழுது இயேசு அவனிடம், “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார்.
லூக்கா 9 : 61 (OCVTA)
இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப்போய், எனது குடும்பத்தாரிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றான்.
லூக்கா 9 : 62 (OCVTA)
அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னே திரும்பிப் பார்க்கிற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்குத் தகுதியற்றவன்” என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62