லூக்கா 12 : 1 (OCVTA)
எச்சரிப்புகளும் புத்திமதிகளும் அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி, ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு, முதலாவதாக தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் வெளிவேஷமாகிய புளித்தமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள்.
லூக்கா 12 : 2 (OCVTA)
மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
லூக்கா 12 : 3 (OCVTA)
நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து இரகசியமாய் பேசியது, வீட்டின் கூரையின்மேல் அறிவிக்கப்படும்.
லூக்கா 12 : 4 (OCVTA)
“என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். அதற்குப் பிறகு, அவர்களால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது.
லூக்கா 12 : 5 (OCVTA)
ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள்.
லூக்கா 12 : 6 (OCVTA)
ஐந்து சிட்டுக் குருவிகளை இரண்டு காசுக்கு விற்பதில்லையா? ஆனால், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை.
லூக்கா 12 : 7 (OCVTA)
உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
லூக்கா 12 : 8 (OCVTA)
“நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கிறவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மானிடமகனாகிய நான் ஏற்றுக்கொள்வேன்.
லூக்கா 12 : 9 (OCVTA)
ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
லூக்கா 12 : 10 (OCVTA)
யாராவது மானிடமகனாகிய எனக்கு எதிராய்ப் பேசுகிற வார்த்தை, அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது அவர்களுக்கு மன்னிக்கப்பட மாட்டாது.
லூக்கா 12 : 11 (OCVTA)
“நீங்கள் ஜெப ஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, என்னத்தைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள்.
லூக்கா 12 : 12 (OCVTA)
ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்லவேண்டும் என்பதை, உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரே போதிப்பார்” என்றார்.
லூக்கா 12 : 13 (OCVTA)
மூடனான பணக்காரனின் கதை கூடியிருந்த மக்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, எங்கள் உரிமைச்சொத்தை என்னுடன் பிரித்துக்கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான்.
லூக்கா 12 : 14 (OCVTA)
அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார்.
லூக்கா 12 : 15 (OCVTA)
பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.
லூக்கா 12 : 16 (OCVTA)
மேலும் அவர், அவர்களுக்கு இந்த கதையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது.
லூக்கா 12 : 17 (OCVTA)
அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
லூக்கா 12 : 18 (OCVTA)
“பின்பு அவன், ‘நான் ஒன்றுசெய்வேன்; என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைத்து.
லூக்கா 12 : 19 (OCVTA)
பின்பு நான், என் ஆத்துமாவிடம், உனக்கென்று பல வருடங்களுக்குப் போதுமான நல்ல பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீ வாழ்வை அனுபவி; சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான்.
லூக்கா 12 : 20 (OCVTA)
“அப்பொழுது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார்.
லூக்கா 12 : 21 (OCVTA)
“தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கிறது” என்றார்.
லூக்கா 12 : 22 (OCVTA)
கவலைப்பட வேண்டாம் பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவோம் என்று உங்கள் வாழ்வைக்குறித்தும் அல்லது எதை உடுப்போம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானது.
லூக்கா 12 : 23 (OCVTA)
ஏனெனில், வாழ்க்கை உண்பதிலும், உடுத்துவதிலும் மட்டுமல்ல; அதிலும் மேலான காரியங்களைக் கொண்டுள்ளது.
லூக்கா 12 : 24 (OCVTA)
காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனால், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்பு வாய்ந்தவர்களாய் இருக்கிறீர்களே!
லூக்கா 12 : 25 (OCVTA)
கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டுவான்?
லூக்கா 12 : 26 (OCVTA)
இல்லையே! இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்யமுடியாதிருக்கிறதே. அப்படியிருக்க, பெருங்காரியங்களைக் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
லூக்கா 12 : 27 (OCVTA)
“காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை.
லூக்கா 12 : 28 (OCVTA)
விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு உடுத்துவிப்பார்.
லூக்கா 12 : 29 (OCVTA)
விசுவாசம் குறைந்தவர்களே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்; என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக்குறித்து கவலைப்படாதிருங்கள்.
லூக்கா 12 : 30 (OCVTA)
ஏனெனில், இறைவனை அறியாதவர்கள் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவை எல்லாம் உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார்.
லூக்கா 12 : 31 (OCVTA)
எனவே முதலாவதாக இறைவனுடைய அரசைத் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குகூடக் கொடுக்கப்படும்.
லூக்கா 12 : 32 (OCVTA)
“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார்.
லூக்கா 12 : 33 (OCVTA)
உங்கள் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுங்கள். இவ்விதமாய் பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் உங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தையும் பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை.
லூக்கா 12 : 34 (OCVTA)
ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
லூக்கா 12 : 35 (OCVTA)
விழிப்பாயிருங்கள் “பணிசெய்வதற்கு ஆயத்தமாய், உங்கள் உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி, உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள்.
லூக்கா 12 : 36 (OCVTA)
திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும்.
லூக்கா 12 : 37 (OCVTA)
எஜமான் வரும்போது, அவனுடைய வேலைக்காரர் விழிப்பாயிருப்பதை அவன் கண்டால், அது அவர்களுக்கு நல்லது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எஜமான் உடையை உடுத்திக்கொண்டு, தன் வேலைக்காரர்களைச் சாப்பாட்டுப் பந்தியில் உட்காரச்செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணிசெய்வான்.
லூக்கா 12 : 38 (OCVTA)
அந்த எஜமான் இரவு ஒன்பது மணிக்கு அல்லது நள்ளிரவு வந்தாலும், அவனுடைய வேலையாட்கள் ஆயத்தமாயிருப்பதை அவன் காண்பானானால், அது அவர்களுக்கு நல்லது.
லூக்கா 12 : 39 (OCVTA)
இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே.
லூக்கா 12 : 40 (OCVTA)
நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்” என்றார்.
லூக்கா 12 : 41 (OCVTA)
அப்பொழுது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குத் தான் சொல்கிறீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கிறீரோ?” என்று கேட்டான்.
லூக்கா 12 : 42 (OCVTA)
கர்த்தர் அதற்கு மறுமொழியாக, “உண்மையும் ஞானமும் உள்ள நிர்வாகி யார்? அந்த எஜமான், அவனையே தன்னுடைய வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும்படி, அவர்களுக்கு மேலாக வைப்பான்.
லூக்கா 12 : 43 (OCVTA)
தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
லூக்கா 12 : 44 (OCVTA)
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான்.
லூக்கா 12 : 45 (OCVTA)
ஆனால் அந்த நிர்வாகி, ‘என் எஜமான் வருவதற்கு நீண்டகாலம் ஆகிறதே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால்,
லூக்கா 12 : 46 (OCVTA)
அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, உண்மையற்றவர்களுக்குரிய இடத்திலே அவனைத் தள்ளிவிடுவான்.
லூக்கா 12 : 47 (OCVTA)
“வேலைக்காரன் தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும், தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருந்தால், அவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
லூக்கா 12 : 48 (OCVTA)
ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய், தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கிறவனோ, சில அடிகளே அடிக்கப்படுவான். அதிகமாய் கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரிடத்திலிருந்தும் அதிகமாய்க் கேட்கப்படும்; அப்படியே அதிகம் கொடுக்கப்பட்டவனிடமிருந்து, இன்னும் அதிகமாய் கேட்கப்படும்.
லூக்கா 12 : 49 (OCVTA)
சமாதானத்தை அல்ல பிரிவினையே “பூமியிலே நெருப்பைப்போட வந்தேன். அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
லூக்கா 12 : 50 (OCVTA)
ஆனால், நான் கட்டாயமாக பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று இருக்கிறது. அது நிறைவேறும்வரை, நான் எவ்வளவு மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.
லூக்கா 12 : 51 (OCVTA)
பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன்.
லூக்கா 12 : 52 (OCVTA)
இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்றுபேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டுபேர் மூன்றுபேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.
லூக்கா 12 : 53 (OCVTA)
தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராகத் தாயும், மருமகளுக்கு எதிராக மாமியாரும், மாமியாருக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.
லூக்கா 12 : 54 (OCVTA)
காலங்களைப்பற்றிய விளக்கம் மேலும் இயேசு கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் உடனே, ‘இதோ மழை பெய்யப் போகிறது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது.
லூக்கா 12 : 55 (OCVTA)
தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது.
லூக்கா 12 : 56 (OCVTA)
வேஷக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் அறியாமல் இருப்பது எப்படி?
லூக்கா 12 : 57 (OCVTA)
“சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்?
லூக்கா 12 : 58 (OCVTA)
நீங்கள் உங்களது பகைவருடன் நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்; இல்லையெனில் அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக்கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையிலே போடக்கூடும்.
லூக்கா 12 : 59 (OCVTA)
உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59