லேவியராகமம் 4 : 1 (OCVTA)
பாவநிவாரண காணிக்கை மேலும் யெகோவா மோசேயிடம்,
லேவியராகமம் 4 : 2 (OCVTA)
“நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், ‘யாராவது தவறுதலாகப் பாவம் செய்து, யெகோவாவினுடைய கட்டளைகளால் தடைசெய்யப்பட்ட எதையேனும் செய்தால், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாவன:
லேவியராகமம் 4 : 3 (OCVTA)
“ ‘அபிஷேகம் பண்ணப்பட்ட தலைமை ஆசாரியன் மக்கள்மேல் குற்றம் சுமரும்படி பாவஞ்செய்தால், அவன் தான் செய்த பாவத்திற்கான பாவநிவாரண காணிக்கையாக, குறைபாடற்ற ஒரு இளங்காளையை யெகோவாவிடம் கொண்டுவர வேண்டும்.
லேவியராகமம் 4 : 4 (OCVTA)
அவன் அந்தக் காளையைச் சபைக்கூடார வாசலில், யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும். அவன் அதன் தலையின்மேல் தன் கையை வைத்து, யெகோவா முன்பாக அதை வெட்டிக் கொல்லவேண்டும்.
லேவியராகமம் 4 : 5 (OCVTA)
பின்பு அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன், பலியிடப்பட்ட காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை, சபைக் கூடாரத்திற்குள் எடுத்துச்செல்ல வேண்டும்.
லேவியராகமம் 4 : 6 (OCVTA)
அவன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த இடத்தில் இருக்கும் திரைச்சீலைக்கு முன்பாக, யெகோவாவின் முன்னிலையில் அதில் கொஞ்சத்தை ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
லேவியராகமம் 4 : 7 (OCVTA)
பின்பு சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் நறுமண தூபபீடத்தின் கொம்புகளின்மேல், ஆசாரியன் கொஞ்சம் இரத்தத்தைப் பூசவேண்டும். காளையின் மீதமுள்ள இரத்தத்தை, சபைக்கூடார வாசலில் இருக்கும் தகன பலிபீடத்தின் அடியிலே ஊற்றவேண்டும்.
லேவியராகமம் 4 : 8 (OCVTA)
அவன் பாவநிவாரண காணிக்கைக்கான காளையிலிருந்து கொழுப்பு முழுவதையும் அகற்றவேண்டும்: உள்ளுறுப்புகளை மூடியிருக்கிற அல்லது அவற்றை இணைத்திருக்கிற கொழுப்பையும்,
லேவியராகமம் 4 : 9 (OCVTA)
விலாவுக்குக் கீழ்புறத்தின் அருகேயிருக்கிற இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்பையும் அகற்றவேண்டும்.
லேவியராகமம் 4 : 10 (OCVTA)
சமாதான காணிக்கையாகச் செலுத்தப்பட்ட மாட்டிலிருந்து கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, இதிலிருந்தும் அகற்றப்படவேண்டும். பின்பு ஆசாரியன் அவற்றைத் தகன பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
லேவியராகமம் 4 : 11 (OCVTA)
ஆனாலும் அக்காளையின் தோலையும், இறைச்சி முழுவதையும், தலையையும், கால்களையும், உள்ளுறுப்புகளையும், குடலையும்,
லேவியராகமம் 4 : 12 (OCVTA)
அதாவது, காளையின் மீதமுள்ள பாகங்கள் யாவற்றையும் அவன் முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமாக எண்ணப்படுகிற சாம்பல் கொட்டுகிற இடத்திற்கு கொண்டுவந்து, சாம்பல் குவியலின்மேல், விறகினால் எரிக்கப்பட்ட நெருப்பில்போட்டு எரிக்கவேண்டும்.
லேவியராகமம் 4 : 13 (OCVTA)
“ ‘இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினரும் தவறுதலாகப் பாவஞ்செய்து, யெகோவாவினுடைய கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாகிலும் செய்யக்கூடும். அப்படிச் செய்திருந்தால் அந்தச் செயலைக்குறித்து அச்சமுதாயத்தினர் அறியாதிருந்தாலும், அவர்கள் குற்றவாளிகளே.
லேவியராகமம் 4 : 14 (OCVTA)
தாங்கள் செய்த பாவத்தை அவர்கள் அறியவரும்போது, சபையார் ஒரு இளங்காளையைப் பாவநிவாரண காணிக்கையாக சபைக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.
லேவியராகமம் 4 : 15 (OCVTA)
சபையின் தலைவர்கள் யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையின் தலையின்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும். பின்பு அந்தக் காளை யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லப்படவேண்டும்.
லேவியராகமம் 4 : 16 (OCVTA)
பின்பு அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை சபைக் கூடாரத்திற்குள் எடுத்துச்செல்ல வேண்டும்.
லேவியராகமம் 4 : 17 (OCVTA)
ஆசாரியன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, திரைச்சீலைக்கு எதிரே யெகோவாவின் முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
லேவியராகமம் 4 : 18 (OCVTA)
அவன் அந்த இரத்தத்தில் கொஞ்சத்தை, சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளில் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தை அவன் சபைக்கூடார வாசலில் உள்ள தகன பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.
லேவியராகமம் 4 : 19 (OCVTA)
அவன் அதிலிருந்து எல்லா கொழுப்பையும் அகற்றி, அதைப் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
லேவியராகமம் 4 : 20 (OCVTA)
தனது பாவநிவாரண காணிக்கைக்கான காளைக்குச் செய்ததுபோலவே, இந்தக் காளைக்கும் செய்யவேண்டும். இவ்விதமாய், ஆசாரியர் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.
லேவியராகமம் 4 : 21 (OCVTA)
பின்பு காளையின் மீதமுள்ள பாகங்களை முகாமுக்கு வெளியே கொண்டுபோய், அங்கே ஆசாரியனின் பாவநிவாரணப் பலியைச் சுட்டெரித்ததுபோல் இதையும் எரிக்கவேண்டும். இதுவே சமுதாயத்தினருக்கான பாவநிவாரண காணிக்கை.
லேவியராகமம் 4 : 22 (OCVTA)
“ ‘ஒரு தலைவன் தவறுதலாகப் பாவஞ்செய்து, தன் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் குற்றவாளி.
லேவியராகமம் 4 : 23 (OCVTA)
அவன் செய்த பாவத்தை அவனுக்குத் தெரிவிக்கும்போது, அவன் குறைபாடற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவை தன் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்.
லேவியராகமம் 4 : 24 (OCVTA)
அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவின் தலையில் தன் கையை வைத்து, யெகோவா முன்னிலையில் தகன காணிக்கை வெட்டப்படும் இடத்தில் அதை வெட்டிக் கொல்லவேண்டும். இது ஒரு பாவநிவாரண காணிக்கை.
லேவியராகமம் 4 : 25 (OCVTA)
பின்பு ஆசாரியன், பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, அதைத் தகன காணிக்கை பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தை, அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.
லேவியராகமம் 4 : 26 (OCVTA)
சமாதான காணிக்கையின் கொழுப்பை எரித்ததுபோலவே, கொழுப்பு முழுவதையும் அவன் பீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இவ்விதமாய், ஆசாரியன் அந்த மனிதனின் பாவத்திற்கான பாவநிவிர்த்தியைச் செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான்.
லேவியராகமம் 4 : 27 (OCVTA)
“ ‘சமுதாய அங்கத்தினரில் ஒருவன் தவறுதலாகப் பாவம் செய்து, யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் குற்றவாளி.
லேவியராகமம் 4 : 28 (OCVTA)
அவன் செய்த பாவத்தை அவனுக்குத் தெரிவிக்கும்போது, அவன் தான் செய்த பாவத்திற்கான தன் காணிக்கையாக குறைபாடற்ற ஒரு வெள்ளாட்டு பெண்குட்டியைக் கொண்டுவர வேண்டும்.
லேவியராகமம் 4 : 29 (OCVTA)
அவன் தன் கையைப் பாவநிவாரண காணிக்கை மிருகத்தின் தலைமேல் வைத்து, தகன காணிக்கைக்கான இடத்தில் அதை வெட்டிக் கொல்லவேண்டும்.
லேவியராகமம் 4 : 30 (OCVTA)
பின்பு ஆசாரியன் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, அதைத் தகன காணிக்கை பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.
லேவியராகமம் 4 : 31 (OCVTA)
சமாதான காணிக்கையின் கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, அதன் கொழுப்பு முழுவதையும் அகற்றவேண்டும். ஆசாரியன் அதைப் பலிபீடத்தில் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக எரிக்கவேண்டும். இவ்விதம் ஆசாரியன் அவனுக்காக பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான்.
லேவியராகமம் 4 : 32 (OCVTA)
“ ‘அவன் பாவநிவாரண காணிக்கையாக ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொண்டுவருவானேயாகில், அவன் குறைபாடற்ற பெண்ணாட்டுக்குட்டியையே கொண்டுவர வேண்டும்.
லேவியராகமம் 4 : 33 (OCVTA)
அவன் அதன் தலைமேல் தன் கையை வைத்து, தகன காணிக்கை வெட்டப்படும் இடத்தில் பாவநிவாரண காணிக்கையாக அதை வெட்டிக் கொல்லவேண்டும்.
லேவியராகமம் 4 : 34 (OCVTA)
பின்பு ஆசாரியன், பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன் விரலினால் எடுத்து, தகன பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அதைப் பூசவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிடவேண்டும்.
லேவியராகமம் 4 : 35 (OCVTA)
சமாதான பலியின் செம்மறியாட்டுக் குட்டியிலிருந்து கொழுப்பு அகற்றப்பட்டது போலவே, கொழுப்பு முழுவதையும் அவன் அகற்றவேண்டும். ஆசாரியன் அதைப் பலிபீடத்தில் நெருப்பினால் யெகோவாவுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளின்மேல் வைத்து எரிக்கவேண்டும். இவ்விதமாய், ஆசாரியன் அவன் செய்த பாவத்திற்காக, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான்.
❮
❯