லேவியராகமம் 27 : 1 (OCVTA)
யெகோவாவுக்குரியது மீட்கப்படுதல் மீண்டும் யெகோவா மோசேயிடம்,
லேவியராகமம் 27 : 2 (OCVTA)
“நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஒருவன் ஆட்களுக்குரிய சரியான மதிப்பைச் செலுத்துவதின்மூலம், அவர்களை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதற்காக, ஒரு விசேஷ நேர்த்திக்கடனை செய்தால், கொடுக்கவேண்டிய மதிப்பாவது:
லேவியராகமம் 27 : 3 (OCVTA)
இருபது வயதிற்கும் அறுபது வயதிற்கும் இடைப்பட்ட, ஆணுக்குரிய மதிப்பு பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி ஐம்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும்.
லேவியராகமம் 27 : 4 (OCVTA)
அது ஒரு பெண்ணாயிருந்தால் அவளுக்குரிய மதிப்பு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும்.
லேவியராகமம் 27 : 5 (OCVTA)
ஐந்து வயதிற்கும் இருபது வயதிற்கும் இடைப்பட்ட ஒரு நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு இருபது சேக்கலும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கலும் ஆகும்.
லேவியராகமம் 27 : 6 (OCVTA)
ஒரு மாதத்திற்கும், ஐந்து வருடத்திற்கும் இடைப்பட்ட ஆண் பிள்ளைக்குரிய மதிப்பு ஐந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண் பிள்ளைக்குரிய மதிப்பு மூன்று சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும்.
லேவியராகமம் 27 : 7 (OCVTA)
அறுபது வயதிற்கும் அதற்கும் மேற்பட்ட நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு பதினைந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும்.
லேவியராகமம் 27 : 8 (OCVTA)
நேர்த்திக்கடனை செய்கிறவன் குறிப்பிடப்பட்ட தொகையைச் செலுத்தமுடியாத அளவு ஏழையாயிருந்தால், அவன் அந்த நபரை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். நேர்த்திக்கடனைச் செய்கிற மனிதனின் தகுதிக்கேற்ப அவனுடைய மதிப்பை ஆசாரியன் நிர்ணயிப்பான்.
லேவியராகமம் 27 : 9 (OCVTA)
“ ‘ஒருவன் நேர்த்திக்கடன் செய்தது யெகோவாவுக்குக் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு மிருகமானால், யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட அந்த மிருகம் பரிசுத்தமாயிருக்கிறது.
லேவியராகமம் 27 : 10 (OCVTA)
அவன் அதை மாற்றி எடுக்கக்கூடாது. கெட்டவைக்காக நல்லதையோ, நல்லவைக்காக கெட்டதையோ பதிலீடு செய்யக்கூடாது. ஒரு மிருகத்திற்காக வேறொரு மிருகத்தை பதிலீடு செய்தால், அதுவும் பதிலீடு செய்யப்பட்ட மிருகமான இரண்டும் பரிசுத்தமாகின்றன.
லேவியராகமம் 27 : 11 (OCVTA)
ஆனாலும், யெகோவாவுக்குக் காணிக்கையாக நேர்த்திக்கடன் செய்யப்பட்ட மிருகம் ஏற்றுக்கொள்ளத் தகாததானால், சம்பிரதாயப்படி அசுத்தமான அது, அவனால் ஆசாரியன் முன் கொண்டுவந்து நிறுத்தப்படவேண்டும்.
லேவியராகமம் 27 : 12 (OCVTA)
ஆசாரியன் அது நல்லதோ, கெட்டதோ என்று அதன் தன்மையை மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும்.
லேவியராகமம் 27 : 13 (OCVTA)
அதன் உரிமையாளன் அந்த மிருகத்தை மீட்டுக்கொள்ள விரும்பினால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.
லேவியராகமம் 27 : 14 (OCVTA)
“ ‘ஒருவன் தன் வீட்டை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அர்ப்பணித்தால், அது நல்லதோ, கெட்டதோ என அதன் தரத்தை ஆசாரியன் மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும்.
லேவியராகமம் 27 : 15 (OCVTA)
தன் வீட்டை அர்ப்பணிக்கிற மனிதன் அதை மீட்டுக்கொள்வதானால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அந்த வீடு திரும்பவும் அவனுக்குரியதாகும்.
லேவியராகமம் 27 : 16 (OCVTA)
“ ‘ஒருவன் தன் குடும்ப நிலத்தின் ஒரு பகுதியை யெகோவாவுக்கு அர்ப்பணித்தால், அதற்குத் தேவையான விதைத் தானியத்தின் அளவுக்கேற்றபடி அதன் மதிப்பைத் தீர்மானிக்கவேண்டும். ஒரு ஓமர்* அதாவது, ஒரு ஓமர் என்பது சுமார் 135 கிலோகிராம் அளவு வாற்கோதுமை விதைக்கு ஐம்பது சேக்கல் வெள்ளிக்காசுகள் † அதாவது, சுமார் 600 கிராம் வெள்ளி என மதிக்கப்பட வேண்டும்.
லேவியராகமம் 27 : 17 (OCVTA)
அவன் தனது வயலை யூபிலி வருடத்தில் அர்ப்பணிப்பதானால், தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அப்படியே இருக்கும்.
லேவியராகமம் 27 : 18 (OCVTA)
ஆனால் அவன் தன் வயலை யூபிலி வருடத்திற்குப்பின் அர்ப்பணிப்பதானால், அடுத்த யூபிலி வருடம்வரை மீதமுள்ள வருடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசாரியன் அதன் மதிப்பைத் தீர்மானிக்கப்பட்ட மதிப்பிலிருந்து குறைக்கவேண்டும்.
லேவியராகமம் 27 : 19 (OCVTA)
அந்த வயலை அர்ப்பணிக்கிறவன் அதை மீட்க விரும்பினால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அந்த வயல் திரும்பவும் அவனுக்குரியதாகும்.
லேவியராகமம் 27 : 20 (OCVTA)
ஆனாலும் அவன் அந்த வயலை மீட்டுக்கொள்ளாவிட்டால் அல்லது வேறொருவனுக்கு விற்றால், அந்த வயலை ஒருபோதும் மீட்கமுடியாது.
லேவியராகமம் 27 : 21 (OCVTA)
யூபிலி, வருடத்தில் அந்த வயல் திருப்பிக் கொடுக்கப்படும்பொழுது, யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வயலைப்போல அது பரிசுத்தமாகும். அது ஆசாரியர்களின் சொத்தாகும்.
லேவியராகமம் 27 : 22 (OCVTA)
“ ‘ஒருவன் தன் குடும்ப நிலத்தின் பங்கு அல்லாத வயலை வாங்கி, அதை யெகோவாவுக்கு அர்ப்பணித்தால்,
லேவியராகமம் 27 : 23 (OCVTA)
ஆசாரியன் அதன் மதிப்பை யூபிலி வருடம் வரைக்கும் தீர்மானிப்பான். அந்த மனிதன் அந்த நாளிலே அதன் மதிப்பை யெகோவாவுக்கு பரிசுத்தமானதாகச் செலுத்தவேண்டும்.
லேவியராகமம் 27 : 24 (OCVTA)
அந்த வயல் யாருக்குச் சொந்தமாய் இருந்து, யாரிடத்தில் வாங்கப்பட்டதோ அது யூபிலி வருடத்தில் அவனுக்கே திரும்பவும் சேரும்.
லேவியராகமம் 27 : 25 (OCVTA)
எல்லா மதிப்பும் பரிசுத்த இடத்தின் சேக்கலுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும். இருபது கேரா ஒரு சேக்கல்.
லேவியராகமம் 27 : 26 (OCVTA)
“ ‘தலையீற்று ஏற்கெனவே யெகோவாவுக்கு சொந்தமாய் இருக்கிறது. ஆகையால் ஒருவனும் ஒரு மிருகத்தின் தலையீற்றை அர்ப்பணிக்கக் கூடாது. அது மாடானாலும் சரி, செம்மறியாடானாலும் சரி, அது யெகோவாவுக்கே உரியது.
லேவியராகமம் 27 : 27 (OCVTA)
அது அசுத்த மிருகங்களில் ஒன்றானால், அதற்காக மதிப்பிடப்பட்ட மதிப்பையும், அதன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுத்து, அவன் அதைத் திரும்ப வாங்கலாம். அவன் மீட்காவிட்டால் அதற்காக தீர்மானித்த மதிப்புக்கு அது விற்கப்படவேண்டும்.
லேவியராகமம் 27 : 28 (OCVTA)
“ ‘மனிதனானாலும், மிருகமானாலும், குடும்ப நிலமானாலும் ஒரு மனிதனுக்கு உரிமையாயிருப்பது அர்ப்பணிக்கப்பட்டால், அது விற்கப்படவோ, மீட்கப்படவோ கூடாது. அவை ஒவ்வொன்றும் யெகோவாவுக்கு மிகவும் பரிசுத்தமானது.
லேவியராகமம் 27 : 29 (OCVTA)
“ ‘அழிவுக்காக நியமிக்கப்பட்ட எவனும் மீட்கப்படக்கூடாது. அவன் கொல்லப்படவேண்டும்.
லேவியராகமம் 27 : 30 (OCVTA)
“ ‘மண்ணின் தானியமும், மரங்களின் பழங்களுமான நிலத்தின் எல்லா பலனிலும் பத்தில் ஒரு பங்கு யெகோவாவுக்குச் சொந்தமானது. இது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
லேவியராகமம் 27 : 31 (OCVTA)
யாராவது தனது பத்தில் ஒரு பங்கை மீட்டுக்கொள்வதானால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக்கொடுத்தே அதை மீட்கவேண்டும்.
லேவியராகமம் 27 : 32 (OCVTA)
மேய்ப்பனின் கோலின்கீழ் கடந்துபோகிற ஒவ்வொரு பத்தாவது மிருகமும், மாட்டு மந்தையிலிருந்தும், ஆட்டு மந்தையிலிருந்தும் எடுக்கப்படும் முழுமையான பத்தில் ஒரு பங்காக யெகோவாவுக்கு பரிசுத்தமாகும்.
லேவியராகமம் 27 : 33 (OCVTA)
அவன் கெட்டதிலிருந்து நல்லதைத் தெரிந்தெடுக்கவோ அல்லது பதிலீடு எதையும் செய்யவோ கூடாது. அப்படி அவன் பதிலீடு செய்தால், அந்த மிருகமும், பதிலீடு செய்யப்பட்ட மிருகமான இரண்டும் பரிசுத்தமானதாகும். அவற்றை மீட்கமுடியாது’ ” என்றார்.
லேவியராகமம் 27 : 34 (OCVTA)
யெகோவா இஸ்ரயேலருக்காக, சீனாய் மலையில் மோசேக்குக் கொடுத்த கட்டளைகள் இவையே.
❮
❯