புலம்பல் 4 : 1 (OCVTA)
* இந்த அதிகாரம் ஒரு அகரவரிசை கவிதை, இதன் வசனங்கள் எபிரெய எழுத்துக்களின் அடுத்தடுத்த எழுத்துக்களுடன் தொடங்குகின்றன. தங்கம் எவ்வளவாய் தன் ஒளியை இழந்து, சுத்தத் தங்கமும் எவ்வளவாய் மங்கிப்போயிற்றே! பரிசுத்த இடத்தின் இரத்தினக் கற்கள் தெருவின் முனைகளிலும் சிதறுண்டு கிடக்கின்றன.
புலம்பல் 4 : 2 (OCVTA)
ஒருகாலத்தில் சுத்தத் தங்கத்தின் மதிப்பிற்கு ஒப்பாயிருந்த, விலைமதிப்புமிக்க சீயோன் மகன்கள், இப்போது மண் பாத்திரங்களாய் எண்ணப்படுகிறார்கள். குயவனின் கைவேலையாக மதிக்கப்படுகிறார்கள்.
புலம்பல் 4 : 3 (OCVTA)
நரிகளும் தங்கள் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். ஆனால் என் மக்களோ பாலைவனத்திலுள்ள தீக்கோழிகளைப்போல, கொடூர மனமுள்ளவர்களானார்கள்.
புலம்பல் 4 : 4 (OCVTA)
தாகத்தினால் குழந்தையின் நாவு அதன் மேல்வாய் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்கிறது; பிள்ளைகள் உணவுக்காக கெஞ்சுகின்றனர், ஆனால் அதைக் கொடுப்பவர் ஒருவருமில்லை.
புலம்பல் 4 : 5 (OCVTA)
சுவையான உணவை ஒருகாலத்தில் உண்டவர்கள் வீதிகளில் ஆதரவற்றுத் திரிகிறார்கள். மென்பட்டு உடை அணிந்து முன்பு வாழ்ந்தவர்கள் இப்போது சாம்பல் மேடுகளில் இருக்கிறார்கள்.
புலம்பல் 4 : 6 (OCVTA)
உதவும் கரம் எதுவுமின்றி ஒரு நொடியில் கவிழ்க்கப்பட்ட சோதோமின் தண்டனையைவிட, என் மக்களின் தண்டனை பெரிதாயிருக்கிறது.
புலம்பல் 4 : 7 (OCVTA)
அவர்களின் இளவரசர்கள்[† இளவரசர்கள் அல்லது நசரேயர்கள். நியா. 13: 5 ] உறைபனியைப் பார்க்கிலும் பிரகாசமாயும், பாலைவிட வெண்மையாயும் இருந்தார்கள். அவர்களின் உடல்கள் பவளத்தைவிட சிவப்பாகவும், அவர்களின் தோற்றம் நீல மாணிக்கக் கற்களைப்போலவும் இருந்தன.
புலம்பல் 4 : 8 (OCVTA)
ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடுப்புக்கரியைவிடக் கறுப்பாயிருக்கிறார்கள்; வீதிகளில் அவர்கள் இன்னார் என அறியப்படாதிருக்கிறார்கள். அவர்களுடைய தோல், எலும்புகளின்மேல் சுருங்கி காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.
புலம்பல் 4 : 9 (OCVTA)
பஞ்சத்தால் சாகிறவர்களைவிட, வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களின் நிலை மேலானது; பஞ்சத்தால் சாகிறவர்களோ வயல்களின் விளைச்சல் குறைவுபட்டதால் பசியினால் துன்பப்பட்டு உருக்குலைந்து போகிறார்கள்.
புலம்பல் 4 : 10 (OCVTA)
இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால் தங்கள் சொந்தப் பிள்ளைகளைச் சமைத்தனரே, என் மக்கள் அழிக்கப்படுகையில் பிள்ளைகள் அவர்களுக்கு உணவானார்களே!
புலம்பல் 4 : 11 (OCVTA)
யெகோவா தமது கோபத்தை முழுமையாய் வெளிப்படுத்தினார்; அவர் தமது கடுங்கோபத்தை ஊற்றிவிட்டார். அவர் சீயோனில் நெருப்பை மூட்டினார். அது அவளின் அஸ்திபாரங்களை எரித்துப்போட்டது.
புலம்பல் 4 : 12 (OCVTA)
பகைவர்களும் எதிரிகளும், எருசலேமின் வாசல்களுக்குள் புகுவார்கள் என்று, பூமியின் அரசர்களோ உலகத்தின் எந்த மக்களோ நம்பவில்லை.
புலம்பல் 4 : 13 (OCVTA)
ஆனால் அது நடந்தது. அவளுடைய இறைவாக்கு உரைப்போரின் பாவங்களினாலும், ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இது நடந்தது. அவர்களால் எருசலேமுக்குள் நேர்மையானவர்களின் இரத்தம் சிந்தப்பட்டது.
புலம்பல் 4 : 14 (OCVTA)
இப்பொழுதோ அவர்கள் குருடரான மனிதரைப்போல் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் இரத்தத்தினால் கறைப்பட்டிருப்பதால், அவர்களுடைய உடைகளைத் தொடுவதற்குக்கூட ஒருவரும் துணியவில்லை.
புலம்பல் 4 : 15 (OCVTA)
“விலகிப்போங்கள். நீங்கள் அசுத்தமானவர்கள். விலகுங்கள்! விலகுங்கள்! எங்களைத் தொடாதிருங்கள்” என்று மனிதர் அவர்களைப் பார்த்து கத்துகிறார்கள். அவர்கள் தப்பியோடி அலையும்போது அங்குள்ள மக்கள், “இவர்கள் இனிமேலும் இங்கே இருக்கமுடியாது” என்கிறார்கள்.
புலம்பல் 4 : 16 (OCVTA)
யெகோவாவே அவர்களைச் சிதறடித்தார்; அவர் அவர்கள்மேல் கண்காணிப்பாய் இருப்பதில்லை. ஆசாரியரைக் கனம்பண்ணுவதுமில்லை, முதியோருக்கு தயவு காண்பிப்பதுமில்லை.
புலம்பல் 4 : 17 (OCVTA)
அத்துடன் உதவிக்காக வீணாய் பார்த்திருந்தும் எங்கள் கண்கள் மங்கிப்போயின; எங்கள் காவல் கோபுரங்களிலிருந்து, எங்களைக் காப்பாற்ற முடியாத ஒரு நாட்டிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமே!
புலம்பல் 4 : 18 (OCVTA)
மனிதர் எங்கள் ஒவ்வொரு அடிச்சுவடையும் பதுங்கிப் பின்தொடர்ந்தார்கள், அதனால் வீதிகளில் எங்களால் நடக்க முடியவில்லை. எங்கள் முடிவு நெருங்கியிருந்தது, ஏனெனில் எங்களுக்கு எண்ணப்பட்ட நாட்கள் முடிந்தன, எங்கள் முடிவும் வந்துவிட்டது.
புலம்பல் 4 : 19 (OCVTA)
எங்களைப் பின்தொடர்ந்தவர்கள், ஆகாயத்தில் பறக்கும் கழுகுகளைப் பார்க்கிலும் வேகமாய் இருந்தார்கள்; அவர்கள் மலைகளில் எங்களைத் துரத்தி பாலைவனத்தில் எங்களுக்காய் பதுங்கியிருக்கிறார்கள்.
புலம்பல் 4 : 20 (OCVTA)
யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட, எங்கள் உயிர்மூச்சான அரசனும், அவர்களுடைய கண்ணிகளில் அகப்பட்டுக்கொண்டான். அவனுடைய நிழலின்கீழ், நாடுகளின் மத்தியில் நாங்கள் வாழ்வோம் என்று நினைத்திருந்தோம்.
புலம்பல் 4 : 21 (OCVTA)
ஊத்ஸ் நாட்டில் வாழுகின்ற ஏதோமின் மகளே, நீ மகிழ்ந்து சந்தோஷப்படு. ஆனால் உனக்குங்கூட இறை கோபத்தின் பாத்திரம் கொடுக்கப்படும்; நீ குடித்து வெறிகொண்டு, ஆடையில்லாமல் கிடப்பாய்.
புலம்பல் 4 : 22 (OCVTA)
சீயோன் மகளே, உனது தண்டனை முடிவுறும்; உன் சிறையிருப்பை அவர் நீடிக்கமாட்டார். ஆனால் ஏதோமின் மகளே, அவர் உன் பாவங்களைத் தண்டித்து உன் கொடுமைகளை வெளிப்படுத்துவார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22