நியாயாதிபதிகள் 7 : 1 (OCVTA)
கிதியோன் மீதியானியரைத் தோற்கடித்தல் அதிகாலையில் கிதியோன் என்னும் யெருபாகாலும் அவனுடைய எல்லா மக்களும் ஆரோத் என்னும் நீரூற்றின் அருகில் முகாமிட்டார்கள். மீதியானியரின் முகாமோ இவர்களுக்கு வடக்கே, மோரே மலைக்கு அருகே பள்ளத்தாக்கில் இருந்தது.
நியாயாதிபதிகள் 7 : 2 (OCVTA)
யெகோவா கிதியோனிடம், “நான் மீதியானியரை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு நீ அளவுக்கதிகமானவர்களை வைத்திருக்கிறாய். நாங்கள் எங்கள் பெலத்தில் எங்களை மீட்டுக்கொண்டோம் என்று இஸ்ரயேலர் எனக்கெதிராக பெருமைபாராட்டக் கூடுமே.
நியாயாதிபதிகள் 7 : 3 (OCVTA)
ஆகையால் நீ மக்களுக்கு, ‘உங்களுக்குள் பயத்தினால் நடுங்குபவர்கள் இருந்தால் கீலேயாத் மலையை விட்டுப் போய்விடலாம்’ என்று அறிவி” என்றார். எனவே இருபத்து இரண்டாயிரம்பேர் கீலியாத் மலையை விட்டுப் போனார்கள். பத்தாயிரம் பேர் மட்டும் எஞ்சியிருந்தார்கள்.
நியாயாதிபதிகள் 7 : 4 (OCVTA)
தொடர்ந்து யெகோவா கிதியோனிடம், “மனிதர் இன்னும் அளவுக்கதிகமாயிருக்கிறார்கள். அவர்களை தண்ணீர் அருகே கொண்டுபோ; நான் அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரலாம்’ என்றால் அவன் உன்னுடன் வரட்டும். நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரக்கூடாது’ என்றால் அவன் வரக்கூடாது” என்றார்.
நியாயாதிபதிகள் 7 : 5 (OCVTA)
எனவே கிதியோன் அந்த மனிதரைத் தண்ணீர் அருகே அழைத்துச் சென்றான். அப்பொழுது யெகோவா அவனிடம், “நாக்கால் நக்கி நாயைப்போல் தண்ணீர் குடிப்போரை ஒரு பக்கமும், முழங்கால்களை ஊன்றி தண்ணீர் குடிப்போரை மற்ற பக்கமுமாக நிறுத்திவை” என்றார்.
நியாயாதிபதிகள் 7 : 6 (OCVTA)
அவ்வாறு தண்ணீரை தங்கள் கைகளால் அள்ளி நாயைப்போல நாக்கால் நக்கி குடித்தவர்கள் முந்நூறுபேர். எஞ்சியோர் தங்கள் முழங்கால்களை ஊன்றி வாயைத் தண்ணீரில் வைத்துக் குடித்தனர்.
நியாயாதிபதிகள் 7 : 7 (OCVTA)
யெகோவா கிதியோனிடம், “நக்கிக் குடித்த முந்நூறுபேருடனே நான் உங்களை மீட்டு மீதியானியரை உங்கள் கையில் தருவேன். மற்றெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகட்டும்” என்றார்.
நியாயாதிபதிகள் 7 : 8 (OCVTA)
எனவே கிதியோனும், முந்நூறுபேரும் உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு, எஞ்சியிருந்த இஸ்ரயேலரை அவர்களுடைய கூடாரத்திற்கு அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது மீதியானியரின் முகாம் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.
நியாயாதிபதிகள் 7 : 9 (OCVTA)
அதே இரவில் யெகோவா கிதியோனிடம், “இப்பொழுதே நீ எழுந்து அவர்களுடைய முகாமிற்கு எதிராக போ, ஏனெனில் நான் அதை உன் கையில் கொடுக்கப்போகிறேன்.
நியாயாதிபதிகள் 7 : 10 (OCVTA)
தாக்குவதற்கு நீ பயந்தால், உனது பணியாளான பூராவுடன் மீதியானியரின் முகாமுக்குப்போ.
நியாயாதிபதிகள் 7 : 11 (OCVTA)
அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நீ கேள். அதற்குப்பின் அந்த முகாமைத் தாக்குவதற்கு நீ துணிவுகொள்வாய்” என்றார். அவ்வாறே அவனும் அவன் பணியாளன் பூராவும் முகாமின் காவல் அரண் இருக்கும் இடம்வரைக்கும் போனார்கள்.
நியாயாதிபதிகள் 7 : 12 (OCVTA)
அந்தப் பள்ளத்தாக்கிலே மீதியானியர், அமலேக்கியர், கிழக்கு நாட்டு மக்கள் எல்லோரும் வெட்டுக்கிளிக் கூட்டம்போல தங்கியிருந்தனர். அவர்களுடைய ஒட்டகங்கள் கணக்கிடமுடியாத கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தன.
நியாயாதிபதிகள் 7 : 13 (OCVTA)
கிதியோன் முகாமை வந்துசேர்கையில் ஒருவன் தான் கண்ட கனவை தன் சிநேகிதனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். “நான் ஒரு கனவு கண்டேன்; கனவில் சுடப்பட்ட ஒரு வட்டமான வாற்கோதுமை அப்பம் உருண்டு மீதியானியரின் முகாமின்மேல் வந்தது. அது மிகவும் வல்லமையுடன் வந்து கூடாரத்தைத் தாக்கியபோது கூடாரம் மறுபக்கமாக புரட்டி வீழ்த்தப்பட்டது,” எனச் சொன்னான்.
நியாயாதிபதிகள் 7 : 14 (OCVTA)
அப்பொழுது அவனுடைய சிநேகிதன், “இது இஸ்ரயேலனான யோவாசின் மகன் கிதியோனின் வாளேயல்லாமல் வேறொன்றுமல்ல. இறைவன் மீதியானியரையும், இந்த முகாம் முழுவதையுமே அவனுடைய கைகளில் ஒப்படைத்திருக்கிறார்” என்று சொன்னான்.
நியாயாதிபதிகள் 7 : 15 (OCVTA)
கிதியோன் இந்த கனவையும் அதன் விளக்கத்தையும் கேட்டபோது, இறைவனை வழிபட்டான். அவன் இஸ்ரயேலரின் முகாமுக்குள் திரும்பிப்போய், “எழும்புங்கள், யெகோவா மீதியானியருடைய முகாமை உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறார்” என்று கூப்பிட்டுச் சொன்னான்.
நியாயாதிபதிகள் 7 : 16 (OCVTA)
எனவே அவன் அந்த முந்நூறுபேரையும் மூன்று பிரிவாகப் பிரித்து அவர்கள் எல்லோருடைய கைகளிலும் எக்காளங்களையும், வெறுமையான பானைக்குள் தீப்பந்தங்களையும் வைத்துக் கொடுத்தான்.
நியாயாதிபதிகள் 7 : 17 (OCVTA)
பின் அவன் அவர்களிடம், “என்னைக் கவனித்து என் வழியைப் பின்பற்றுங்கள். நான் முகாமின் அருகில் சென்று செய்வதைப்போலவே ஒன்றும்விடாமல் நீங்களும் செய்யுங்கள்.
நியாயாதிபதிகள் 7 : 18 (OCVTA)
நானும் எனது பகுதியில் இருப்பவர்களும் எங்கள் எக்காளங்களை ஊதியவுடன், நீங்கள் எல்லோரும் முகாமைச் சுற்றி உங்கள் எக்காளத்தை ஊதி, ‘யெகோவாவுக்காவும் கிதியோனுக்காகவும்’ என்று சத்தமிடுங்கள்” எனச் சொன்னான்.
நியாயாதிபதிகள் 7 : 19 (OCVTA)
நள்ளிரவு காவல் தொடங்கும் நேரத்தில், அவர்கள் காவலர்களை மாற்றிய சிறிது நேரத்தில், கிதியோனும் அவனுடன் நின்ற நூறுபேரும் முகாமின் அருகே போய்ச்சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் எக்காளங்களை ஊதி, கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
நியாயாதிபதிகள் 7 : 20 (OCVTA)
அந்த மூன்று பிரிவினரும் எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்தார்கள். அவர்கள் தீப்பந்தங்களை இடதுகையில் இறுக்கி பிடித்துக்கொண்டு, தாங்கள் ஊதப்போகிற எக்காளங்களைத் தங்கள் வலதுகையில் பிடித்துக்கொண்டு, “யெகோவாவுக்கு ஒரு வாள் கிதியோனுக்கு ஒரு வாள்” என்று பெரிய சத்தமிட்டார்கள்.
நியாயாதிபதிகள் 7 : 21 (OCVTA)
ஒவ்வொருவனும் முகாமைச் சுற்றி தன் நிலையில் நின்றான். அப்பொழுது மீதியானியர் எல்லோரும் கதறிக்கொண்டு தப்பியோடினார்கள்.
நியாயாதிபதிகள் 7 : 22 (OCVTA)
முந்நூறுபேரும் எக்காளங்களை ஒலித்துக் கொண்டிருந்தபோதே யெகோவா முகாம் முழுவதிலும் உள்ள மனிதர் ஒருவரையொருவர் தாக்கும்படி செய்தார். செரேராவை நோக்கி பெத் சித்தாவுக்கும் சாபாத்திற்கும், தேபாவுக்கும் அருகேயுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரைக்கும் மீதியானியரின் யுத்தபடை தப்பி ஓடியது.
நியாயாதிபதிகள் 7 : 23 (OCVTA)
நப்தலி, ஆசேர், மனாசே ஆகிய இஸ்ரயேலரும் அழைக்கப்பட்டு ஒன்றுகூடினர். அவர்கள் மீதியானியரைத் துரத்திச் சென்றனர்.
நியாயாதிபதிகள் 7 : 24 (OCVTA)
கிதியோன் எப்பிராயீம் மலை நாடெங்கும் தூதுவரை அனுப்பி, “மீதியானியருக்கு எதிராக இறங்கி வாருங்கள்; வந்து அவர்களுக்குமுன் பெத் பாராவுக்குப் போய் யோர்தானுக்கு முன்னே துறைகளைக் கைப்பற்றுங்கள்” என்றான். அதன்படி எப்பிராயீம் மனிதர்கள் எல்லோரும் வந்து, பெத் பாரா வரையிருக்கும் யோர்தானுக்கு முன்னேயுள்ள துறைகளை கைப்பற்றினார்கள்.
நியாயாதிபதிகள் 7 : 25 (OCVTA)
அதோடு அவர்கள் மீதியானியரின் இரண்டு தலைவர்களான ஓரேப், சேப் என்பவர்களையும் பிடித்தார்கள்; அவர்கள் ஓரேபை, ஓரேப் என்னும் கற்பாறையிலும், சேபை சேப் என்னும் திராட்சை ஆலையிலும் கொலைசெய்தார்கள். பின் மீதியானியரைத் துரத்திச்சென்று ஓரேப், சேப் ஆகியோரின் தலைகளை யோர்தான் அருகேயிருந்த கிதியோனிடம் கொண்டுபோனார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25