நியாயாதிபதிகள் 21 : 1 (OCVTA)
பென்யமீனியருக்கு மனைவிகள் மேலும் இஸ்ரயேலர்கள் மிஸ்பாவிலே இருக்கும்போது: “நம்மில் ஒருவனும் தன்னுடைய மகளை பென்யமீனியருக்குத் திருமணம் செய்துகொடுக்கமாட்டோம்” என்று ஆணையிட்டிருந்தார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 2 (OCVTA)
மக்கள் பெத்தேலுக்குச் சென்று, அன்று சாயங்காலம்வரை இறைவனுக்கு முன்பாக அமர்ந்திருந்து, உரத்த சத்தமாய் மனங்கசந்து அழுதனர்.
நியாயாதிபதிகள் 21 : 3 (OCVTA)
“யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, இஸ்ரயேலுக்கு ஏன் இப்படி நடந்தது? இன்று இஸ்ரயேலில் ஒரு கோத்திரத்தை இழக்க நேரிட்டது ஏன்?” என அவர்கள் புலம்பினார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 4 (OCVTA)
மக்கள் அடுத்தநாள் அதிகாலையில் ஒரு பலிபீடத்தைக் கட்டித் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 5 (OCVTA)
அப்பொழுது இஸ்ரயேலர், “எங்கள் எல்லா கோத்திரங்களிலுமிருந்து யெகோவாமுன் ஒன்றுகூடி வரத் தவறினவர்கள் யார்?” என்று விசாரித்தார்கள். ஏனெனில் யெகோவா முன்பாக மிஸ்பாவுக்கு ஒன்றுகூடி வரத் தவறுகிற எவனாயினும் நிச்சயம் கொல்லப்படவேண்டும் என்று ஏற்கெனவே அவர்கள் ஒரு கடுமையான ஆணையிட்டிருந்தார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 6 (OCVTA)
இப்பொழுது இஸ்ரயேலர், “இஸ்ரயேலில் இருந்து ஒரு கோத்திரம் இன்று அறுப்புண்டு போய்விட்டதே” எனத் தங்கள் சகோதரர்களான பென்யமீனியருக்காக மனம் வருந்தினார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 7 (OCVTA)
அத்துடன், “மீதியாயிருக்கும் இவர்களுக்கு நாம் மனைவியரை எப்படிக் கொடுக்கமுடியும்? இவர்களுக்கு எங்கள் பெண் பிள்ளைகளைக் கொடுப்பதில்லை என்று யெகோவாவுக்கு முன்பாக நாம் தீர்மானித்தோமே” எனச் சொல்லிக்கொண்டார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 8 (OCVTA)
பின்பு அவர்கள், “இஸ்ரயேல் கோத்திரங்களில் எது மிஸ்பாவிலே யெகோவா முன்பாக ஒன்றுகூடத் தவறியது” எனக் கேட்டார்கள். அப்பொழுது யாபேஸ் கீலேயாத்திலுள்ளவர்கள் ஒருவரும் சபை கூடுதலுக்கான முகாமுக்கு வரவில்லை எனக் கண்டுகொண்டார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 9 (OCVTA)
அவர்கள் மக்களைக் கணக்கெடுத்தபோது யாபேஸ் கீலேயாத்திலிருந்து ஒருவரும் அங்கு இல்லாதிருந்ததைக் கண்டார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 10 (OCVTA)
எனவே அங்கு கூடியிருந்தவர்கள் போர் வீரர்களில் பன்னிரெண்டாயிரம்பேரை, யாபேஸ் கீலேயாத்திலுள்ள பெண்கள் பிள்ளைகள் உட்பட எல்லோரையும் வாளால் வெட்டும்படி அனுப்பினார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 11 (OCVTA)
“நீங்கள் செய்யவேண்டியது இதுவே. எல்லா ஆண்களையும், கன்னியாயிராத எல்லாப் பெண்களையும் கொலைசெய்யவேண்டும்” எனச் சொன்னார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 12 (OCVTA)
அவர்கள் யாபேஸ் கீலேயாத்தில் வசித்தவர்களுள் ஒரு ஆணுடன் உறவுகொள்ளாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டார்கள். அவர்களைக் கானான் நாட்டிலுள்ள சீலோவிலிருந்த முகாமுக்குக் கொண்டுவந்தார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 13 (OCVTA)
அதன்பின் முழு இஸ்ரயேல் சபையாரும் ரிம்மோன் மலையிலிருந்த பென்யமீனியரிடம் ஒரு சமாதான உடன்படிக்கையை அனுப்பினார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 14 (OCVTA)
எனவே பென்யமீனியர் அவ்வேளையில் அங்கே திரும்பி வந்தார்கள்; யாபேஸ் கீலேயாத்திலுள்ள கொலைசெய்யப்படாமல் கொண்டுவந்த அந்த பெண்களை அவர்களுக்கு இவர்கள் கொடுத்தார்கள். ஆனாலும் அங்கிருந்த ஆண்கள் எல்லோருக்கும் பெண்கள் போதாதிருந்தனர்.
நியாயாதிபதிகள் 21 : 15 (OCVTA)
இஸ்ரயேல் கோத்திரங்களில் இப்படியானதொரு பிரிவை யெகோவா ஏற்படுத்தியதால், மக்கள் பென்யமீனியருக்காகத் துக்கப்பட்டார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 16 (OCVTA)
அந்த சபையிலுள்ள முதியவர்கள், “பென்யமீன் பெண்கள் அழிந்திருப்பதால் நாங்கள் எப்படி மிகுதியாய் இருக்கும் மனிதருக்கு மனைவிகளைக் கொடுக்கலாம்?
நியாயாதிபதிகள் 21 : 17 (OCVTA)
இஸ்ரயேலில் ஒரு கோத்திரம் அழிந்துபோகாதபடிக்கு, தப்பியிருக்கும் பென்யமீனியருக்கு வாரிசுகள் இருக்கவேண்டுமே.
நியாயாதிபதிகள் 21 : 18 (OCVTA)
ஆனால் எம்மில் ஒருவனும் எங்கள் பெண்பிள்ளைகளை அவர்களுக்கு மனைவியாகக் கொடுக்க முடியாது. ஏனெனில், ‘பென்யமீனியருக்கு மனைவியாகப் பெண் கொடுப்பவன் சபிக்கப்படுவான்’ என்று இஸ்ரயேலராகிய நாமே ஆணையிட்டிருக்கிறோம்.
நியாயாதிபதிகள் 21 : 19 (OCVTA)
ஆனாலும் இதோ சீலோவில் கொண்டாடும் யெகோவாவின் வருடாந்த விழா நடக்கிறது. அது பெத்தேல் நகருக்கு வடக்காகவும், தெற்காகவும், பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற வழியில் கிழக்கிலும், லிபோனாவுக்கு தெற்கிலும் இருக்கிற சீலோவிலே நடைபெறும் அல்லவோ!” என்றார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 20 (OCVTA)
எனவே அவர்கள் எஞ்சியிருந்த பென்யமீனியரிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “நீங்கள் போய் திராட்சைத் தோட்டத்திற்குள் மறைந்திருந்து பாருங்கள்;
நியாயாதிபதிகள் 21 : 21 (OCVTA)
அங்கே சீலோவிலே உள்ள பெண்கள் வெளியே நடனமாட வருவதைக் காண்பீர்கள்; அப்பொழுது திராட்சைத் தோட்டத்திலிருந்து நீங்கள் விரைவாக வெளியே வந்து, ஒவ்வொருவரும் உங்களுக்கேற்ற சீலோவியப் பெண்ணை மனைவியாக்கும்படி தூக்கிக்கொண்டு உங்கள் பென்யமீன் நாட்டிற்குத் திரும்பி ஓடிப்போங்கள்.
நியாயாதிபதிகள் 21 : 22 (OCVTA)
பின்பு அப்பெண்களின் தகப்பன்மாரோ, சகோதரரோ வந்து எங்களிடம் முறையிட்டால், நாங்கள் அவர்களிடம், ‘அவர்களை மன்னியுங்கள். நாங்கள் போர்முனையில் மனைவியரை எடுப்பது போலவே செய்திருக்கிறார்கள். நீங்களோ அவர்களுக்குப் பெண் கொடுக்கவில்லை. அதனால் நீங்கள் குற்றமற்றவர்கள்’ எனச் சொல்வோம்” என்றார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 23 (OCVTA)
எனவே அவ்வாறே பென்யமீனியர் செய்தார்கள். பெண்கள் நடனமாடிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெண்ணை தனக்கு மனைவியாக்கும்படி தூக்கிச்சென்றான். அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச்சென்று தங்கள் பட்டணங்களைத் திரும்பவும் கட்டி அங்கே வாழ்ந்துவந்தனர்.
நியாயாதிபதிகள் 21 : 24 (OCVTA)
அந்த நேரத்தில் இஸ்ரயேலரும் அவரவர் கோத்திரங்களின்படியும், வம்சங்களின்படியும் தங்கள் சொந்த இடங்களிலுள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
நியாயாதிபதிகள் 21 : 25 (OCVTA)
அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. ஒவ்வொருவனும் தன் பார்வைக்குச் சரியானதையே செய்து வந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25