யோசுவா 4 : 1 (OCVTA)
முழு இஸ்ரயேல் நாடும் யோர்தானைக் கடந்ததும் யெகோவா யோசுவாவிடம்,
யோசுவா 4 : 2 (OCVTA)
“மக்களிலிருந்து கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு மனிதரைத் தெரிந்துகொள்.
யோசுவா 4 : 3 (OCVTA)
நீ அவர்களிடம் யோர்தான் நதியின் நடுவிலே ஆசாரியர்கள் நின்ற அதே இடத்திலிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து, அவற்றை உங்களுடன் சுமந்துகொண்டுபோய், நீங்கள் இன்றிரவு தங்கும் இடத்தில் வையுங்கள் என்று சொல்” என்றார்.
யோசுவா 4 : 4 (OCVTA)
எனவே யோசுவா இஸ்ரயேலரிலிருந்து கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகத் தெரிந்துகொண்டு பன்னிரண்டு பேரையும் அழைத்தான்.
யோசுவா 4 : 5 (OCVTA)
அவன் அவர்களிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் யோர்தானின் நடுவே போங்கள். இஸ்ரயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கல்லை எடுத்துத் தோளில் சுமந்துகொண்டு வரவேண்டும்.
யோசுவா 4 : 6 (OCVTA)
இந்தக் கற்கள் ஒரு அடையாளமாக உங்கள் மத்தியில் இருக்கும். எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம், ‘இங்கிருக்கும் இக்கற்களின் கருத்து என்ன?’ எனக் கேட்கும்போது,
யோசுவா 4 : 7 (OCVTA)
நீங்கள் அவர்களிடம், யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னால் யோர்தானின் நீரோட்டம் பிரிக்கப்பட்டது. இந்த உடன்படிக்கைப்பெட்டி யோர்தானைக் கடந்தபோது, யோர்தானின் நீரோட்டம் பிரிக்கப்பட்டதன் நினைவுச்சின்னமாக இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக்கு என்றென்றைக்கும் இருக்கும் என்று சொல்லுங்கள்” என்றான்.
யோசுவா 4 : 8 (OCVTA)
யோசுவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரயேலர் செய்தார்கள். யெகோவா யோசுவாவிற்குச் சொன்னபடியே, இஸ்ரயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் பன்னிரண்டு கற்களை யோர்தான் நடுவிலிருந்து எடுத்தார்கள். அவற்றைச் சுமந்துகொண்டுபோய் முகாமிட்டிருந்த இடத்திலே வைத்தார்கள்.
யோசுவா 4 : 9 (OCVTA)
உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துவந்த ஆசாரியர்கள் நின்ற இடமான யோர்தானின் நடுப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட அந்த பன்னிரண்டு கற்களையும் யோசுவா ஒன்றாய் குவித்து நிறுத்திவைத்தான். அவை இன்றுவரை அங்கே இருக்கின்றன.
யோசுவா 4 : 10 (OCVTA)
உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியர்கள் யோர்தானின் நடுவில் நின்றுகொண்டிருந்தார்கள். மோசே யோசுவாவுக்கு அறிவுறுத்தியிருந்தபடியே, யெகோவாவினால் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் மக்கள் செய்து முடிக்கும்வரை அப்படியே நின்றார்கள். மோசே யோசுவாவுக்கு அறிவுறுத்தியிருந்தபடியே யாவும் செய்யப்பட்டன. மக்கள் எல்லோரும் விரைவாக நதியைக் கடந்துபோனார்கள்.
யோசுவா 4 : 11 (OCVTA)
இவ்வாறு அவர்கள் எல்லோரும் நதியைக் கடந்து சென்றவுடன், மக்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க ஆசாரியர்கள் யெகோவாவின் பெட்டியுடன் மறுகரைக்கு வந்தனர்.
யோசுவா 4 : 12 (OCVTA)
இஸ்ரயேலருக்கு முன்னே ரூபன், காத், மனாசே கோத்திரத்தின் அரைப் பகுதியினரான எல்லா மனிதரும் ஆயுதம் தரித்தவர்களாகக் கடந்து சென்றார்கள். இவ்வாறே மோசே இவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தான்.
யோசுவா 4 : 13 (OCVTA)
அன்று யுத்த ஆயுதம் தரித்த ஏறக்குறைய நாற்பதாயிரம்பேர், யெகோவா முன்பாக யுத்தம் செய்வதற்காக எரிகோவின் சமவெளிக்குக் கடந்துசென்றனர்.
யோசுவா 4 : 14 (OCVTA)
அந்நாளில் யெகோவா இஸ்ரயேலர் எல்லோருடைய பார்வையிலும் யோசுவாவை மேன்மைப்படுத்தினார்; மக்கள் மோசேயைக் கனம்பண்ணியதுபோல யோசுவாவையும் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் கனம்பண்ணினார்கள்.
யோசுவா 4 : 15 (OCVTA)
யெகோவா யோசுவாவிடம்,
யோசுவா 4 : 16 (OCVTA)
“உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்களை யோர்தான் நதியைவிட்டு வெளியே வரும்படி கட்டளையிடு” என்றார்.
யோசுவா 4 : 17 (OCVTA)
அவ்வாறே யோசுவா ஆசாரியர்களை யோர்தானை விட்டு வெளியே வாருங்கள் எனக் கட்டளையிட்டான்.
யோசுவா 4 : 18 (OCVTA)
ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு, ஆற்றிலிருந்து கரையேறி வெளியே வந்தார்கள். அவர்களுடைய பாதம் வறண்ட நிலத்தை மிதித்தவுடன் யோர்தானின் தண்ணீர் தங்களிடத்திற்குத் திரும்பி முன்போலவே பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது.
யோசுவா 4 : 19 (OCVTA)
முதலாம் மாதம் பத்தாம் தேதியில் மக்கள் யோர்தானிலிருந்து, எரிகோவின் கிழக்கு எல்லையிலுள்ள கில்காலில் முகாமிட்டார்கள்.
யோசுவா 4 : 20 (OCVTA)
அவர்கள் யோர்தான் நதியிலிருந்து எடுத்துவந்த பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலில் நிறுத்திவைத்தான்.
யோசுவா 4 : 21 (OCVTA)
அவ்வேளையில் அவன் இஸ்ரயேல் மக்களிடம் கூறியதாவது, “எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் தங்கள் தந்தையரிடம், ‘இங்கிருக்கும் இக்கற்களின் கருத்து என்ன?’ என கேட்கும்போது,
யோசுவா 4 : 22 (OCVTA)
அவர்களிடம், ‘யோர்தானை இஸ்ரயேலர் வறண்டநிலத்தின் வழியாக கடந்தார்கள்.’
யோசுவா 4 : 23 (OCVTA)
யோர்தான் நதியை நீங்கள் கடந்து முடிக்கும்வரை உங்கள் இறைவனாகிய யெகோவா அந்நதியின் தண்ணீரை வற்றச்செய்தார். நாங்கள் கடந்து முடியும்வரை செங்கடலை எங்களுக்கு முன்பாக வற்றச்செய்ததுபோலவே, யோர்தான் நதியையும் வற்றப்பண்ணினார்.
யோசுவா 4 : 24 (OCVTA)
பூமியின் மக்கள் யாவரும் யெகோவாவினுடைய கரம் வல்லமையானது என அறியவும் எப்பொழுதும் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பயந்துநடக்கவுமே அவர் இதைச் செய்தார் என்று சொல்லுங்கள்” என்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24