யோவான் 3 : 1 (OCVTA)
மறுபிறப்பைப் பற்றிய போதனை பரிசேயர்களில் நிக்கொதேமு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் யூத ஆளுநர் குழுவின் உறுப்பினரில் ஒருவன்.
யோவான் 3 : 2 (OCVTA)
அவன் ஒரு இரவிலே இயேசுவினிடத்தில் வந்து, “போதகரே, நீர் இறைவனிடத்திலிருந்து வந்த ஒரு போதகர் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் இறைவன் ஒருவரோடு இல்லாவிட்டால், நீர் செய்கிற அடையாளங்களைச் செய்யமுடியாது” என்றான்.
யோவான் 3 : 3 (OCVTA)
இயேசு அதற்குப் பதிலாக, “ஒருவர் மறுபடியும் பிறக்காவிட்டால், இறைவனுடைய அரசை அவரால் காணமுடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
யோவான் 3 : 4 (OCVTA)
அப்பொழுது நிக்கொதேமு இயேசுவிடம், “வயதான ஒருவர் மீண்டும் பிறப்பது எப்படி? அவர் மீண்டும் பிறப்பதற்காக, தமது தாயின் கர்ப்பத்தில் இரண்டாவது முறை போகமுடியாதே” என்றான்.
யோவான் 3 : 5 (OCVTA)
இயேசு அதற்குப் பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே, ஒருவர் தண்ணீரினாலும் ஆவியானவரினாலும் பிறவாவிட்டால், அவர் இறைவனுடைய அரசுக்குள் செல்லமுடியாது என்று நான் உனக்குச் சொல்கிறேன்.
யோவான் 3 : 6 (OCVTA)
மாமிசம், மாமிசத்தைப் பிறப்பிக்கிறது. ஆனால் ஆவியானவரோ, ஆவியை பிறப்பிக்கிறார்.
யோவான் 3 : 7 (OCVTA)
‘நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்’ என்று நான் உனக்குச் சொன்ன வார்த்தையைக் குறித்து நீ வியப்படையக் கூடாது.
யோவான் 3 : 8 (OCVTA)
காற்று தான் விரும்பிய இடத்தை நோக்கியே வீசுகிறது; அதன் சத்தத்தைக் கேட்கிறீர்கள். ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றோ, அது எங்கே போகிறது என்றோ உங்களால் சொல்லமுடியாது. ஆவியானவரால் பிறந்த ஒவ்வொரு பிறப்பும் இப்படியே” என்றார்.
யோவான் 3 : 9 (OCVTA)
அப்பொழுது நிக்கொதேமு, “இது எப்படி ஆகும்?” என்று கேட்டான்.
யோவான் 3 : 10 (OCVTA)
இயேசு அவனிடம், “நீ இஸ்ரயேலரில் போதகனாய் இருக்கிறாயே, உன்னால் இவைகளை விளங்கிக்கொள்ள முடியவில்லையா?
யோவான் 3 : 11 (OCVTA)
நான் உனக்கு மெய்யாகவே மெய்யாகவே சொல்கிறேன், நாங்கள் அறிந்ததைப் பேசுகிறோம். நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி சொல்கிறோம். ஆனால் நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
யோவான் 3 : 12 (OCVTA)
பூமிக்குரிய காரியங்களைக்குறித்தே நான் உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் அதை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்; அப்படியிருக்க பரலோக காரியங்களைக்குறித்து நான் பேசினால், அதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
யோவான் 3 : 13 (OCVTA)
பரலோகத்திலிருந்து வந்த மானிடமகனாகிய என்னைத்தவிர, ஒருவரும் ஒருபோதும் பரலோகத்திற்குள் சென்றதில்லை.
யோவான் 3 : 14 (OCVTA)
பாலைவனத்திலே மோசே பாம்பை உயர்த்தியதுபோல, மானிடமனாகிய நானும் உயர்த்தப்பட வேண்டும்.
யோவான் 3 : 15 (OCVTA)
அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.”
யோவான் 3 : 16 (OCVTA)
இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார்.
யோவான் 3 : 17 (OCVTA)
உலகத்தைக் குற்றவாளி என்று தீர்ப்பதற்காக இறைவன் தமது மகனை அனுப்பாமல், தமது மகனின் மூலமாய் உலகத்தவர்களை இரட்சிப்பதற்காகவே அனுப்பினார்.
யோவான் 3 : 18 (OCVTA)
இறைவனுடைய மகனில் விசுவாசிக்கிற யாவருக்கும் நியாயத்தீர்ப்பு இல்லை. ஆனால் அவரை விசுவாசிக்காதவருக்கோ ஏற்கெனவே நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஏனெனில் அவர்கள் இறைவனுடைய ஒரே மகனின் பெயரில் விசுவாசம் வைக்கவில்லை.
யோவான் 3 : 19 (OCVTA)
அந்த நியாயத்தீர்ப்பு என்னவென்றால்: உலகத்திற்குள் வெளிச்சம் வந்தது. மனிதர் வெளிச்சத்தை அல்ல, இருளையே விரும்பினார்கள். ஏனெனில் அவர்களது செயல்கள் தீயவைகளாய் இருந்தன.
யோவான் 3 : 20 (OCVTA)
தீயசெயலைச் செய்கிற ஒவ்வொருவரும் வெளிச்சத்தை வெறுக்கிறார்கள். தமது தீய செயல்கள் வெளியரங்கமாகிவிடும் என்று அவர்கள் வெளிச்சத்திற்குள் வரமாட்டார்கள்.
யோவான் 3 : 21 (OCVTA)
ஆனால் சத்தியத்தின்படி வாழ்கிறவர்களோ வெளிச்சத்திற்குள் வருகிறார்கள். தமது செயல்கள் எல்லாம் இறைவனுக்குள்ளாகவே செய்யப்பட்டிருப்பதால், அது தெளிவாய்த் தெரியும்படி அவர்கள் வெளிச்சத்திற்குள் வருகிறார்கள் என்றார்.
யோவான் 3 : 22 (OCVTA)
இயேசுவைப்பற்றிய யோவான் ஸ்நானகனின் சாட்சி இதற்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயாவின் நாட்டுப் புறத்துக்குச் சென்றார்கள். அங்கே இயேசு சிறிதுகாலம் அவர்களுடன் தங்கி, மக்களுக்குத் திருமுழுக்கு கொடுத்து வந்தார்.
யோவான் 3 : 23 (OCVTA)
யோவானும் சாலிமுக்கு அருகே இருந்த அயினோன் என்ற இடத்தில் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அங்கே தண்ணீர் அதிகமாய் இருந்ததுடன், திருமுழுக்கு பெறும்படி மக்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள்.
யோவான் 3 : 24 (OCVTA)
இது யோவான் சிறையில் போடப்படும் முன்னே நடைபெற்றது.
யோவான் 3 : 25 (OCVTA)
யோவானுடைய சீடர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையில் சடங்காச்சார சுத்திகரிப்பைக் குறித்து விவாதம் ஏற்பட்டது.
யோவான் 3 : 26 (OCVTA)
யோவானுடைய சீடர்கள் யோவானிடத்தில் வந்து அவனிடம், “போதகரே, யோர்தானுக்கு அக்கரையில் உம்மோடிருந்த ஒருவரைக் குறித்து நீர் சாட்சி கொடுத்தீரே. அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடத்தில் போய்க்கொண்டிருக்கிறார்களே” என்றார்கள்.
யோவான் 3 : 27 (OCVTA)
யோவான் அதற்குப் பதிலாக, “ஒருவர், பரலோகத்திலிருந்து கொடுக்கப்படுவதை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
யோவான் 3 : 28 (OCVTA)
‘நான் கிறிஸ்து அல்ல, அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் சொன்னதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகள்.
யோவான் 3 : 29 (OCVTA)
மணவாளனுக்கே மணப்பெண் உரியவள். மணவாளனின் தோழனோ, மணவாளனின் அருகே நின்று அவன் சொல்வதைக் கேட்கிறான். அவன் மணவாளனுடைய குரலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அந்த மகிழ்ச்சியே எனக்குரியது. அது இப்போது நிறைவடைந்தது.
யோவான் 3 : 30 (OCVTA)
அவரோ மிகுதிப்பட வேண்டும்; நானோ குறைந்துபோக வேண்டும்.
யோவான் 3 : 31 (OCVTA)
“மேலே இருந்து வருகிறவர் எல்லோருக்கும் மேலானவராகவே இருக்கிறார்; கீழே பூமியிலிருந்து வருகிறவனோ பூமிக்கே சொந்தமாயிருக்கிறான். அவன் பூமிக்குரிய காரியங்களைப் பேசுகிறான். பரலோகத்திலிருந்து வருகிறவரோ எல்லோரிலும் மேன்மையானவராகவே இருக்கிறார்.
யோவான் 3 : 32 (OCVTA)
அவர் தாம் கண்டதையும் கேட்டதையும் குறித்து சாட்சி கூறுகிறார். ஆனால் அவருடைய சாட்சியையோ ஒருவரும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
யோவான் 3 : 33 (OCVTA)
அவருடைய சாட்சியை ஏற்றுக் கொள்கிறவர்களோ, இறைவன் உண்மை உள்ளவர் என்று உறுதிப்படுத்துகிறார்கள்.
யோவான் 3 : 34 (OCVTA)
இறைவனால் அனுப்பப்பட்டவரோ இறைவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார். ஏனெனில், இறைவன் அவருக்கு ஆவியானவரை அளவின்றிக் கொடுத்திருக்கிறார்.
யோவான் 3 : 35 (OCVTA)
பிதா மகனை நேசிக்கிறார். அவர் எல்லாவற்றையும் மகனுடைய கைகளிலே ஒப்படைத்திருக்கிறார்.
யோவான் 3 : 36 (OCVTA)
இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36