எரேமியா 48 : 1 (OCVTA)
மோவாபைப் பற்றிய செய்தி மோவாபைப் பற்றியது: இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “நேபோ நாட்டுக்கு ஐயோ கேடு! அது பாழாக்கப்படும். கீரியாத்தாயீம் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு கைப்பற்றப்படும். அதன் பலத்த அரண் அவமதிக்கப்பட்டு தகர்க்கப்படும்.
எரேமியா 48 : 2 (OCVTA)
மோவாப் இனி ஒருபோதும் புகழப்படமாட்டாது; அதனுடைய அழிவுக்காக, எஸ்போனில் உள்ள மனிதர் சதித்திட்டம் போடுவார்கள்: ‘வாருங்கள் நாம் அந்த நாட்டிற்கு ஒரு முடிவை உண்டாக்குவோம்.’ மத்மேனே பட்டணமே, நீயும் அழிக்கப்படுவாய்; வாள் உன்னைப் பின்தொடரும்.
எரேமியா 48 : 3 (OCVTA)
ஒரொனாயீமிலிருந்து உண்டாகும் கதறுதலைக் கேளுங்கள். அது அழிவினாலும், பேரழிவினாலும் உண்டாகும் கதறுதல்.
எரேமியா 48 : 4 (OCVTA)
மோவாப் நொறுக்கப்படும். அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.
எரேமியா 48 : 5 (OCVTA)
லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில் மனங்கசந்து அழுதுகொண்டே போகிறார்கள். ஒரொனாயீமுக்கு இறங்கிப் போகும் வீதியில் அழிவின் நிமித்தம் அழுகுரல் கேட்கப்படுகிறது.
எரேமியா 48 : 6 (OCVTA)
தப்பி ஓடுங்கள்; உங்கள் உயிர் தப்ப ஓடுங்கள். வனாந்திரத்திலுள்ள புதரைப்போலாகுங்கள்.
எரேமியா 48 : 7 (OCVTA)
மோவாபே நீ உன் சொந்தத் திறமையிலும், செல்வத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதினால், நீயும் சிறைப்பிடிக்கப்படுவாய். உன் தெய்வமான கேமோஷ் அதன் பூசாரிகளுடனும், அலுவலர்களுடனும் நாடுகடத்தப்படும்.
எரேமியா 48 : 8 (OCVTA)
ஒவ்வொரு பட்டணத்திற்கும் அழிக்கிறவன் வருவான். ஒரு பட்டணமும் தப்பிப்போகாது. பள்ளத்தாக்குப் பாழாக்கப்படும், சமனான பூமியும் அழிக்கப்படும். ஏனெனில் யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார்.
எரேமியா 48 : 9 (OCVTA)
மோவாபின்மேல் உப்பை தூவுங்கள். அவள் முழுவதுமாக அழிக்கப்படுவாள். அதன் பட்டணங்கள் பாழாக்கப்படும். குடியிருப்பதற்கு யாருமின்றி வெறுமையாய் கைவிடப்படும்.
எரேமியா 48 : 10 (OCVTA)
“யெகோவாவின் வேலையை மனமில்லாமல் செய்கிறவன்மேல் சாபம் உண்டாகட்டும். இரத்தம் சிந்தாமல் தனது வாளை வைத்திருக்கிறவன்மேல் சாபம் உண்டாகட்டும்.
எரேமியா 48 : 11 (OCVTA)
“மோவாப் தன் வாலிப காலத்திலிருந்து ஆறுதலாய் இருக்கிறாள். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படாமல், மண்டி கலக்காமல் இருக்கும் திராட்சரசத்தைப்போல் இருக்கிறாள். அவள் நாடுகடத்தப்பட்டுப் போகவில்லை. ஆகையால் அவளது சுவை அப்படியே இருந்தது. அவளுடைய வாசனையும் மாறுபடவில்லை.
எரேமியா 48 : 12 (OCVTA)
ஆனால், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது ஜாடிகளிலிருந்து ஊற்றும் மனிதர்களை அனுப்புவேன். அவர்கள் அவளை வெளியே ஊற்றுவார்கள். அவளது ஜாடிகள் வெறுமையாக்கப்படும். அவளுடைய பாத்திரங்களும் உடைத்துப் போடப்படும்.
எரேமியா 48 : 13 (OCVTA)
அப்பொழுது இஸ்ரயேல் பெத்தேலில் நம்பிக்கை வைத்து, வெட்கப்பட்டதுபோல, மோவாப் நாடும் கேமோஷ் தெய்வத்தைக் குறித்து வெட்கமடையும்.
எரேமியா 48 : 14 (OCVTA)
“ ‘நாங்கள் போர்வீரர்; போரில் வலிமைமிக்க வீரர்கள்’ என்று நீங்கள் எப்படி கூறலாம்?
எரேமியா 48 : 15 (OCVTA)
மோவாப் அழிக்கப்பட்டு, அவளுடைய பட்டணங்கள் தாக்கப்படும். அங்குள்ள திறமைமிக்க வாலிபர் கொலைசெய்யப்படுவார்கள்” என்று, சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய அரசர் அறிவிக்கிறார்.
எரேமியா 48 : 16 (OCVTA)
“மோவாபின் வீழ்ச்சி மிக அருகிலுள்ளது. அவளுடைய அழிவு விரைவாய் வரும்.
எரேமியா 48 : 17 (OCVTA)
அவளைச்சுற்றி வசிப்பவர்களும், அவளின் புகழை அறிந்தவர்களுமான நீங்கள் அவளுக்காக அழுது புலம்புங்கள். ‘வலிமைமிக்க செங்கோல் எப்படி முறிந்தது, மகிமையான கோலும் எப்படி முறிந்தது’ என்று சொல்லி அழுங்கள்.
எரேமியா 48 : 18 (OCVTA)
“தீபோன் மகளின் குடிகளே! நீங்கள் உங்கள் மேன்மையிலிருந்து கீழிறங்கி வறண்ட நிலத்தில் உட்காருங்கள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உங்களுக்கெதிராய் வந்து உங்கள் அரணுள்ள பட்டணங்களை அழித்துப் போடுவான்.
எரேமியா 48 : 19 (OCVTA)
அரோயேரில் குடியிருப்பவர்களே! தெருவோரமாய் நின்று கவனித்துப் பாருங்கள்; ஓடுகிற மனிதனிடமும், தப்பி ஓடுகிற பெண்ணிடமும், ‘நடந்தது என்ன?’ என்று கேளுங்கள்.
எரேமியா 48 : 20 (OCVTA)
மோவாப் தகர்க்கப்பட்டபடியால், அது அவமதிக்கப்பட்டிருக்கிறது. ஓலமிட்டு அழுங்கள். மோவாப் அழிக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
எரேமியா 48 : 21 (OCVTA)
சமனான பூமிக்கு நியாயத்தீர்ப்பு வந்திருக்கிறது. ஓலோன், யாத்சா, மேபாகாத் பட்டணங்களுக்கும்,
எரேமியா 48 : 22 (OCVTA)
தீபோன், நேபோ, பெத்திப்லாத்தாயீம் பட்டணங்களுக்கும்,
எரேமியா 48 : 23 (OCVTA)
கீரியாத்தாயீம், பெத்காமூல், பெத்மெயோன் பட்டணங்களுக்கும்,
எரேமியா 48 : 24 (OCVTA)
கீரியோத், போஸ்றா, மற்றும் தூரத்திலும் சமீபத்திலும் உள்ள மோவாபின் பட்டணங்கள் எல்லாவற்றுக்கும் நியாயத்தீர்ப்பு வந்துள்ளது.
எரேமியா 48 : 25 (OCVTA)
மோவாபின் பலம் எடுக்கப்பட்டது. அவளுடைய புயம் முறிக்கப்பட்டது” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 48 : 26 (OCVTA)
“மோவாப் யெகோவாவை எதிர்த்தெழும்பினாள். ஆகையால் அவளை வெறிக்கப் பண்ணுங்கள். அவள் தன் வாந்தியிலேயே புரண்டு, மற்றவர்களுக்கு அவள் ஒரு கேலிப்பொருளுமாகட்டும்.
எரேமியா 48 : 27 (OCVTA)
மோவாபே! இஸ்ரயேல் உனது கேலிப்பொருளாக இருக்கவில்லையோ? நீ அவளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இகழ்ச்சியுடன் உன் தலையை அசைக்கிறாயே; அவள் என்ன கள்ளர்களோடுகூட பிடிக்கப்பட்டவளோ!
எரேமியா 48 : 28 (OCVTA)
மோவாபின் குடிகளே! நீங்கள் பட்டணங்களைவிட்டு மலைகளிலுள்ள பாறைகளின் மத்தியில் போய் குடியிருங்கள். குகை வாசலில் கூடுகட்டும் புறாவைப் போலிருங்கள்.
எரேமியா 48 : 29 (OCVTA)
“மோவாபுடைய பெருமையைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். அவளுடைய ஆணவத்தையும், இறுமாப்பையும், பெருமையையும், அகங்காரத்தையும், இருதய அகந்தையையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எரேமியா 48 : 30 (OCVTA)
அவளுடைய திமிரை நான் அறிவேன். இது பயனற்றது” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவள் அவளுடைய தற்புகழ் பேச்சினால் எதையுமே சாதிக்கப்போவதில்லை.
எரேமியா 48 : 31 (OCVTA)
ஆகவே நான் மோவாபைக் குறித்துப் புலம்புவேன். மோவாப் நாடு முழுவதற்காகவும் நான் கதறுவேன். கிர் ஹெரெஸ் மனிதருக்காகவும் ஏங்கி அழுவேன்.
எரேமியா 48 : 32 (OCVTA)
சிப்மா நாட்டிலுள்ள திராட்சைக் கொடிகளே! யாசேர் அழுவதைப்போல் நான் உங்களுக்காக அழுவேன். உங்கள் கிளைகள் கடல்வரை பரவி யாசேர் வரையும் எட்டியுள்ளன. உன்னுடைய பழுத்த பழங்கள் மீதும், திராட்சைப்பழ அறுப்பின் மீதும் அழிக்கிறவன் வந்துவிட்டான்.
எரேமியா 48 : 33 (OCVTA)
மோவாப் நாட்டின் வயல்களிலிருந்தும், பழத்தோட்டங்களிலிருந்தும், மகிழ்ச்சியும் களிப்பும் நீங்கிப்போயின. ஆலைகளிலிருந்து திராட்சரசம் வழிந்தோடுவதையும், நான் நிறுத்திவிட்டேன். மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு அவைகளை மிதிப்பார் யாருமில்லை. சத்தங்கள் அங்கு இருந்தாலும், அவை மகிழ்ச்சியின் சத்தங்கள் அல்ல.
எரேமியா 48 : 34 (OCVTA)
“அவர்களுடைய அழுகையின் சத்தம் எஸ்போனிலிருந்து எலெயாலே வரைக்கும், யாகாஸ் வரைக்கும் கேட்கிறது. அச்சத்தம் சோவாரிலிருந்து ஒரொனாயீம் வரைக்கும், எக்லத் ஷெலிஷியாவரைக்கும் மேலெழும்புகிறது. ஏனெனில் நிம்ரீம் நீரோடைகளும் வற்றிப்போயின.
எரேமியா 48 : 35 (OCVTA)
மோவாபில் உயர்ந்த இடங்களில் பலிகளைச் செலுத்தி, தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டுகிறவர்களுக்கு ஒரு முடிவை உண்டாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 48 : 36 (OCVTA)
“ஆகவே என் இருதயம் மோவாபிற்காக புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது. கிர் ஹெரெஸ் மனிதருக்காக அது ஒரு புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது. ஏனெனில் அவர்கள் சேமித்த செல்வம் போய்விட்டது.
எரேமியா 48 : 37 (OCVTA)
தலைகளெல்லாம் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன. தாடிகளெல்லாம் வெட்டப்பட்டிருக்கின்றன. கைகளெல்லாம் குத்திக் கீறப்பட்டிருக்கின்றன. இடுப்புகளெல்லாம் துக்கவுடையால் மூடப்பட்டிருக்கின்றன.
எரேமியா 48 : 38 (OCVTA)
மோவாபிலுள்ள எல்லா வீட்டுக் கூரைகளின்மேலும், பொதுச் சதுக்கங்களிலும் துக்கங்கொண்டாடுதலே அல்லாமல் வேறொன்றுமில்லை. ஏனெனில் நான் மோவாபை ஒருவரும் விரும்பாத ஜாடியைப்போல் உடைத்துப் போட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 48 : 39 (OCVTA)
“மோவாப் எவ்வளவாய் சிதறடிக்கப்பட்டிருக்கிறாள்! மக்கள் எவ்வளவாய் புலம்புகிறார்கள்! மோவாப் எவ்வளவாய் வெட்கத்தினால் தலைகுனிந்து நிற்கிறாள்! மோவாப் ஒரு கேலிப்பொருளானாள்; அவள் தன்னைச் சுற்றியுள்ள யாவருக்கும் திகிலூட்டும் பொருளானாள்.”
எரேமியா 48 : 40 (OCVTA)
யெகோவா கூறுவது இதுவே: “இதோ, நோக்கிப்பாருங்கள். ஒரு கழுகு, தன் சிறகுகளை மோவாபின் மேலாக விரித்து அதைத் தாக்கும்படி கீழே வருகிறது.
எரேமியா 48 : 41 (OCVTA)
கீரியோத் கைப்பற்றப்பட்டு அதன் பலத்த அரண்களும் பிடிக்கப்படும். அந்நாளில் மோவாபின் போர் வீரர்களின் இருதயங்கள் பிரசவிக்கிற ஒரு பெண்ணின் இருதயத்தைப் போலிருக்கும்.
எரேமியா 48 : 42 (OCVTA)
மோவாப் யெகோவாவை எதிர்த்தபடியினால், அவள் ஒரு நாடாக இராதபடி அழிக்கப்படுவாள்.
எரேமியா 48 : 43 (OCVTA)
மோவாபின் மக்களே! பயங்கரமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 48 : 44 (OCVTA)
“பயங்கரத்துக்குத் தப்பி ஓடுகிறவன், படுகுழிக்குள் விழுவான். குழியிலிருந்து வெளியே ஏறிவருகிறவன், கண்ணியில் அகப்படுவான். ஏனெனில் மோவாபுக்குரிய தண்டனையின் வருடத்தை நான் அதன்மீது கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 48 : 45 (OCVTA)
“தப்பியோடுகிறவர்கள் எஸ்போனின் நிழலில் செய்வதறியாது தவிக்கிறார்கள். ஏனெனில் எஸ்போனிலிருந்து நெருப்பும், சீகோனின் நடுவிலிருந்து ஒரு ஜுவாலையும் புறப்பட்டிருக்கிறது. அது மோவாபின் நெற்றிகளையும் பெருமையாய் பேசுகிறவர்களின் மண்டையோடுகளையும் எரிக்கிறது.
எரேமியா 48 : 46 (OCVTA)
மோவாபே, உனக்கு ஐயோ கேடு! கேமோஷ்* கேமோஷ் என்றால் மோவாபியர் வணங்கும் தெய்வம் தெய்வத்தின் மக்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்; உன் மகன்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள், உன் மகள்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எரேமியா 48 : 47 (OCVTA)
“இருந்தும் பின்வரும் நாட்களில் நான் மோவாபின் செல்வங்களைத் திரும்பவும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். மோவாபின் நியாயத்தீர்ப்பு இத்துடன் முடிகிறது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47