எரேமியா 38 : 1 (OCVTA)
எரேமியா ஒரு குழிக்குள் எறியப்படுதல் மக்கள் எல்லோருக்கும் எரேமியா சொல்வதை மாத்தானின் மகன் செபதியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூகால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் சொன்னது என்னவென்றால்,
எரேமியா 38 : 2 (OCVTA)
“யெகோவா கூறுவது இதுவே: ‘இந்தப் பட்டணத்தில் தங்கியிருக்கிற எவனும் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான். ஆனால் பாபிலோனியரிடம் போகிற எவனும் வாழ்வான். அவன் உயிர் தப்பி வாழ்வான்.’
எரேமியா 38 : 3 (OCVTA)
யெகோவா கூறுவது இதுவே: ‘இப்பட்டணம் பாபிலோன் அரசனின் இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்படைக்கப்படும். அவன் இதைக் கைப்பற்றுவான்’ என்றான்.”
எரேமியா 38 : 4 (OCVTA)
அப்பொழுது அதிகாரிகள் அரசனிடம், “இந்த மனிதன் சாகவேண்டும். இவன் பட்டணத்தில் மீதியாயிருக்கும் போர்வீரரையும், எல்லா மக்களையும் தான் சொல்கிற வார்த்தைகளால் அதைரியப்படுத்துகிறான். இந்த மனிதன் மக்களின் நன்மையை அல்ல, அவர்களின் அழிவையே நாடுகிறான்” என்றார்கள்.
எரேமியா 38 : 5 (OCVTA)
சிதேக்கியா அரசன் அதற்குப் பதிலாக, “இதோ அவன் உங்களுடைய கையில் இருக்கிறான். உங்களுக்கு மாறாக அரசனால் எதுவும் செய்யமுடியாது” என்றான்.
எரேமியா 38 : 6 (OCVTA)
அப்பொழுது அவர்கள் எரேமியாவைக் காவற்கூட முற்றத்திலிருந்த அரசனின் மகன் மல்கியாவின் குழிக்குள் போட்டார்கள். அவர்கள் எரேமியாவை கயிறுகளினால் கட்டி அதற்குள் இறக்கினார்கள். அதில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றிற்குள்ளே புதைந்து கொண்டிருந்தான்.
எரேமியா 38 : 7 (OCVTA)
அரச அரண்மனையில் இருந்த ஒரு எத்தியோப்பிய அதிகாரியான எபெத்மெலேக் எரேமியா குழிக்குள் போடப்பட்டதைக் கேள்விப்பட்டான். அரசன் பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தபோது,
எரேமியா 38 : 8 (OCVTA)
எபெத்மெலேக் அரண்மனையிலிருந்து வெளியேறி அரசனிடம் சென்று,
எரேமியா 38 : 9 (OCVTA)
“அரசனே, தலைவனே இறைவாக்கினன் எரேமியாவை இந்த அதிகாரிகள் தங்கள் எல்லா செயல்களினாலும் கொடுமையாய் நடத்தியிருக்கிறார்கள். அவனை அவர்கள் ஒரு குழிக்குள் எறிந்துவிட்டார்கள். பட்டணத்தில் அப்பம் இல்லாமல் போகையில் பட்டினியால் அவன் அங்கே சாவானே” என்றான்.
எரேமியா 38 : 10 (OCVTA)
அதற்கு அரசன் எத்தியோப்பியனான எபெத்மெலேக்கிடம், “உன்னோடு முப்பது மனிதரைக் கூட்டிக்கொண்டுபோய் இறைவாக்கினன் எரேமியா இறப்பதற்குமுன் அவனை குழியிலிருந்து வெளியே தூக்கியெடு” என்று கட்டளையிட்டான்.
எரேமியா 38 : 11 (OCVTA)
அப்படியே எபெத்மெலேக் அந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு அரண்மனை பொக்கிஷ அறையின் கீழிருந்த அந்த இடத்திற்குப் போனான். அங்கிருந்து பழைய சீலைகளையும், பழைய உடைகளையும் எடுத்து அவைகளைக் கயிற்றின் வழியாய் எரேமியா இருந்த குழிக்குள் இறக்கினான்.
எரேமியா 38 : 12 (OCVTA)
எத்தியோப்பியனான எபெத்மெலேக், எரேமியாவிடம், “நீ இந்த பழைய உடைகளையும், பழைய துணிகளையும் உனது அக்குள்களில் கயிறு வெட்டிவிடாதபடி வைத்துக்கொள்” என்று சொன்னான். எரேமியா அவ்வாறே செய்தான்.
எரேமியா 38 : 13 (OCVTA)
அப்பொழுது அவர்கள் எரேமியாவை கயிறுகள் மூலம் குழியிலிருந்து வெளியே தூக்கி எடுத்தார்கள். அதன்பின் எரேமியா காவற்கூடத்தின் முற்றத்தில் தங்கியிருந்தான்.
எரேமியா 38 : 14 (OCVTA)
சிதேக்கியா எரேமியாவிடம் திரும்பவும் கேள்வி கேட்டல் பின்பு சிதேக்கியா அரசன், இறைவாக்கினன் எரேமியாவை யெகோவாவினுடைய ஆலயத்தின் மூன்றாம் வாசலுக்குக் கொண்டுவரச் செய்தான். அரசன் அவனிடம், “நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கப்போகிறேன். எதையும் மறைக்காமல் எனக்குச் சொல்” என்றான்.
எரேமியா 38 : 15 (OCVTA)
அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “நான் அவ்வாறே பதில் சொன்னால் என்னைக் கொலைசெய்வீர் அல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும் நீர் எனக்குச் செவிகொடுக்கமாட்டீரே” என்றான்.
எரேமியா 38 : 16 (OCVTA)
ஆனால் சிதேக்கியா அரசனோ, எரேமியாவிடம் இரகசியமாக ஆணையிட்டு, “நமக்கு சுவாசத்தைக் கொடுத்திருக்கும் யெகோவா இருப்பது நிச்சயம் என்றால், நான் உன்னைக் கொல்வதோ, உன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களிடம் உன்னை ஒப்புக்கொடுப்பதோ இல்லை என்பதும் நிச்சயம்” என்று சத்தியம் செய்தான்.
எரேமியா 38 : 17 (OCVTA)
அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனுடைய அதிகாரிகளிடம் நீ சரணடைந்தால், நீ உன் உயிரைக் காத்துக்கொள்வாய். இப்பட்டணமும் எரித்து அழிக்கப்படமாட்டாது. உன் குடும்பமும் உயிர்வாழும்.
எரேமியா 38 : 18 (OCVTA)
ஆனால் நீ பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் சரணடையாவிட்டால், இப்பட்டணம் பாபிலோனியரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவர்கள் இப்பட்டணத்தைச் சுட்டெரிப்பார்கள். நீயும் அவர்களுடைய கையிலிருந்து தப்பமாட்டாய்’ என்றான்.”
எரேமியா 38 : 19 (OCVTA)
அதற்கு சிதேக்கியா அரசன் எரேமியாவிடம், “நான் பாபிலோனியரிடம் முன்பே போய்ச் சேர்ந்த யூதருக்குப் பயப்படுகிறேன். ஏனெனில் பாபிலோனியர் என்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்கள் என்னைத் துன்புறுத்தக்கூடும்” என்று சொன்னான்.
எரேமியா 38 : 20 (OCVTA)
அதற்கு எரேமியாவோ, “அவர்கள் உன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். நான் உனக்குச் சொல்வதின்படி செய்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திரு. அப்பொழுது உனக்கு எல்லாம் நன்மையாயிருக்கும். நீயும் உயிருடன் தப்புவாய்.
எரேமியா 38 : 21 (OCVTA)
ஆனால் நீ சரணடைவதற்கு மறுத்தால், யெகோவா எனக்கு வெளிப்படுத்தியுள்ளது இதுவே:
எரேமியா 38 : 22 (OCVTA)
யூதா அரசனின் அரண்மனையில் மீதியாய் விடப்பட்டிருக்கும் பெண்கள், பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். அப்பெண்கள் உன்னிடம்: “ ‘நீ நம்பியிருந்த உனது நண்பர்கள், உன்னை வழிதவறச்செய்து உன்னை மேற்கொண்டார்கள். உன்னுடைய பாதங்கள் சேற்றிற்குள்ளே புதைந்தன; உனது நண்பர்கள் உன்னைக் கைவிட்டுப் போய்விட்டார்கள்’ என்று சொல்வார்கள்.
எரேமியா 38 : 23 (OCVTA)
“உனது எல்லா மனைவியரும், பிள்ளைகளும், பாபிலோனியரிடத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள். நீயுங்கூட அவர்களுடைய கையிலிருந்து தப்பாமல், பாபிலோன் அரசனால் கைதுசெய்யப்படுவாய். இப்பட்டணம் தீயினால் எரிக்கப்படும்” என்றான்.
எரேமியா 38 : 24 (OCVTA)
அப்பொழுது சிதேக்கியா எரேமியாவிடம், “இந்த வார்த்தைகளை ஒருவரும் அறியாமலிருக்கட்டும்; அறிந்தால் நீ சாகக்கூடும்.
எரேமியா 38 : 25 (OCVTA)
அதிகாரிகள் நான் உன்னுடன் பேசியதைக் கேள்விப்பட்டு உன்னிடம் வந்து, ‘அரசனுக்கு நீ கூறியது என்ன? அரசன் உனக்குக் கூறியது என்ன? எங்களுக்கு அதை மறைக்காதே, மறைத்தால் உன்னை நாங்கள் கொல்வோம்’ என்று சொன்னால்,
எரேமியா 38 : 26 (OCVTA)
நீ அவர்களிடம், ‘நான் சாகும்படி யோனத்தானுடைய வீட்டுக்குத் திரும்பவும் என்னை அனுப்பவேண்டாம் என்று அரசனிடம் வேண்டிக்கொண்டேன்’ என்று சொல்” என்று கூறினான்.
எரேமியா 38 : 27 (OCVTA)
அதுபோலவே அதிகாரிகளெல்லாரும் எரேமியாவிடம் வந்து, கேள்வி கேட்டார்கள்; அரசன் தனக்குக் கட்டளையிட்ட இந்த வார்த்தைகளுக்கேற்ப அவன் பதில் கூறினான். அரசனுடன் எரேமியா பேசியதை அவர்கள் ஒருவரும் அறிந்திராதபடியால், அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.
எரேமியா 38 : 28 (OCVTA)
எருசலேம் பிடிக்கப்படும் நாள்வரைக்கும் எரேமியா காவற்கூடத்தின் முற்றத்திலேயே இருந்தான். எருசலேமின் வீழ்ச்சி எருசலேம் பிடிக்கப்பட்ட விதம் இதுவே:
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28