எரேமியா 29 : 1 (OCVTA)
நாடுகடத்தப்பட்டோருக்கு கடிதம் நேபுகாத்நேச்சாரினால், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு எரேமியா ஒரு கடிதம் எழுதினான்: அதை அவன் எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருந்த முதியோர், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர் ஆகியோருக்கும் மற்றும் எல்லா மக்களுக்கும் அனுப்பினான்.
எரேமியா 29 : 2 (OCVTA)
இக்கடிதம் எகொனியா அரசனும், தாய் அரசியும், அரச அதிகாரிகளும், யூதாவிலும் எருசலேமிலுமிருந்த தலைவர்களும், கைவினைஞரும், தொழில் வல்லுநர்களும், எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டுப் போனபின்பு எழுதப்பட்டது.
எரேமியா 29 : 3 (OCVTA)
எரேமியா அக்கடிதத்தை சாப்பானின் மகன் எலெயாசாரிடமும், இல்க்கியாவின் மகன் கெமரியாவிடமும் ஒப்படைத்தான். அவர்களை யூதா அரசன் சிதேக்கியா, பாபிலோனிலுள்ள அரசன் நேபுகாத்நேச்சாரிடம் அனுப்பினான். அந்தக் கடிதத்தில்:
எரேமியா 29 : 4 (OCVTA)
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, தான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பிய யாவருக்கும் சொல்வதாவது:
எரேமியா 29 : 5 (OCVTA)
“நீங்கள் வீடுகளைக் கட்டி, அவைகளில் வாழுங்கள். தோட்டங்களை நாட்டி அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.
எரேமியா 29 : 6 (OCVTA)
நீங்கள் திருமணம் செய்து மகன்களையும், மகள்களையும் பெற்றெடுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவிகளைத் தேடுங்கள். உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுங்கள். அவர்களும் மகன்களையும், மகள்களையும் பெறட்டும். எண்ணிக்கையில் பெருகுங்கள்; குறைந்து போகாதிருங்கள்.
எரேமியா 29 : 7 (OCVTA)
நான் உங்களை நாடுகடத்தி அனுப்பிய பட்டணத்தின் சமாதானத்தையும், செழிப்பையும் தேடுங்கள். அதற்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள். ஏனெனில் பட்டணம் செழித்தால், நீங்களும் செழிப்பீர்கள்.”
எரேமியா 29 : 8 (OCVTA)
ஆம், இஸ்ரயேலின் சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “உங்கள் மத்தியிலுள்ள இறைவாக்கினரும், குறிசொல்பவர்களும், உங்களை ஏமாற்ற விடவேண்டாம். கனவுகளைக் காணச்செய்கிற அவர்களுக்கு நீங்கள் செவிகொடாமலும் இருங்கள்.
எரேமியா 29 : 9 (OCVTA)
அவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 29 : 10 (OCVTA)
யெகோவா சொல்வதாவது: “பாபிலோனுக்கு எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்பு, நான் உங்களிடம் வந்து மீண்டும் உங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவருவேன் எனக்கூறிய, எனது நல்ல வார்த்தையை நிறைவேற்றுவேன்.
எரேமியா 29 : 11 (OCVTA)
உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்.” அவைகள், “உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 29 : 12 (OCVTA)
அப்பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூப்பிட்டு, என்னிடம் வந்து மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
எரேமியா 29 : 13 (OCVTA)
நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது, நீங்கள் என்னைத் தேடிக் கண்டடைவீர்கள்.
எரேமியா 29 : 14 (OCVTA)
நீங்கள் என்னைக் கண்டுகொள்ளும்படி நான் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் உங்களைச் சிறையிருப்பிலிருந்து மீண்டும் கொண்டுவருவேன். நான் உங்களை நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா இடங்களிலிருந்தும் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; எங்கிருந்து நான் உங்களை நாடுகடத்தி அனுப்பினேனோ அந்த இடத்திற்கு உங்களைத் திரும்பவும் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 29 : 15 (OCVTA)
“யெகோவா எங்களுக்குப் பாபிலோனிலும் இறைவாக்கு உரைப்போரை எழுப்பியிருக்கிறார்” என்று நீங்கள் சொல்லலாம்.
எரேமியா 29 : 16 (OCVTA)
ஆனால் யெகோவா கூறுவதாவது: தாவீதின் அரியணையிலிருக்கிற அரசனைக் குறித்தும், உங்களுடன் நாடுகடத்தப்படாமல் இந்த பட்டணத்திலேயே தங்கியிருக்கும் உங்கள் நாட்டினரான எல்லா மக்களைக் குறித்தும்
எரேமியா 29 : 17 (OCVTA)
சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “ஆம், நான் வாளையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; அத்துடன் சாப்பிட முடியாத அளவுக்கு அழுகிப்போன கெட்ட அத்திப்பழங்களைப் போலவே அவர்களை ஆக்குவேன்.
எரேமியா 29 : 18 (OCVTA)
நான் அவர்களைப் பிடிப்பதற்கு வாளுடனும், பஞ்சத்துடனும், கொள்ளைநோயுடனும் பின்தொடர்வேன். அவர்களை பூமியின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாகும்படி செய்வேன். மேலும் நான் அவர்களைத் துரத்துகிற எல்லா நாடுகளின் மத்தியிலும் அவர்களை சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், பழிக்கும், நிந்தைக்கும் உள்ளாக்குவேன்.
எரேமியா 29 : 19 (OCVTA)
ஏனெனில் அவர்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் என் ஊழியக்காரர்களான இறைவாக்கினர்மூலம் திரும்பத்திரும்ப அவர்களுக்கு அனுப்பிய வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. நாடுகடத்தப்பட்டவர்களாகிய நீங்களுங்கூட, அதற்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 29 : 20 (OCVTA)
ஆகையால் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு என்னால் நாடுகடத்தப்பட்ட நீங்கள் எல்லோரும், யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
எரேமியா 29 : 21 (OCVTA)
கோலாயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசெயாவின் மகன் சிதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “இவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் அவர்களைப் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் ஒப்புக்கொடுப்பேன். அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.
எரேமியா 29 : 22 (OCVTA)
இந்தப் பயங்கர செயலின் நிமித்தம் யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, பாபிலோனில் வசிப்போர், ‘பாபிலோன் அரசன் நெருப்பிலே சுட்டெரித்த சிதேக்கியாவைப்போலவும், ஆகாபைப்போலவும் யெகோவா உங்களை நடத்தட்டும்’ என்று சாபமான வார்த்தையாகச் சொல்வார்கள்.
எரேமியா 29 : 23 (OCVTA)
ஏனெனில் இந்த மனிதர் இஸ்ரயேலில் மோசமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்; தங்கள் அயலவரின் மனைவியருடன் விபசாரம் செய்திருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் செய்யும்படி சொல்லாதவற்றை, என் பெயரினால் பொய்களாகப் பேசியிருக்கிறார்கள். நான் அதை அறிவேன். அதற்கு நானே சாட்சி” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 29 : 24 (OCVTA)
செமாயாவுக்கு செய்தி நீ நெகெலாமியனான செமாயாவுக்குச் சொல்லவேண்டியதாவது:
எரேமியா 29 : 25 (OCVTA)
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: நீ எருசலேமிலுள்ள எல்லா மக்களுக்கும் உன் பெயரில் கடிதங்களை அனுப்பியிருக்கிறாய். ஆசாரியன் மாசெயாவின் மகனுமாகிய செப்பனியாவுக்கும், மற்ற எல்லா ஆசாரியருக்குங்கூட அவைகளை அனுப்பியிருக்கிறாய். நீ செப்பனியாவுக்கு எழுதியிருந்ததாவது:
எரேமியா 29 : 26 (OCVTA)
‘யெகோவாவின் ஆலயத்தில் பொறுப்பாயிருக்கும்படி, யோய்தாவுக்குப் பதிலாக யெகோவா உன்னை ஆசாரியனாக நியமித்திருக்கிறார்; இறைவாக்கினனைப்போல் நடிக்கும் எந்தவொரு பைத்தியக்காரனையும் நீ கால் விலங்குகளிலும், கழுத்து விலங்குகளிலும் போடவேண்டுமே.
எரேமியா 29 : 27 (OCVTA)
அப்படியானால் உங்கள் மத்தியில் தன்னை இறைவாக்கினனாய் காட்டிக்கொள்ளும், ஆனதோத் ஊரைச்சேர்ந்த எரேமியாவை ஏன் கண்டிக்காமல் விட்டிருக்கிறாய்?
எரேமியா 29 : 28 (OCVTA)
இந்த எரேமியாவோ பாபிலோனில் இருக்கும் நமக்கு, உங்கள் சிறையிருப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். அதுவரை வீடுகளைக் கட்டிக் குடியிருங்கள். தோட்டங்களை நாட்டி அதன் பலனைச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறானே” என்பதே அந்தக் கடிதம்.
எரேமியா 29 : 29 (OCVTA)
ஆசாரியனாகிய செப்பனியா இறைவாக்கினன் எரேமியாவுக்கு அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டினான்.
எரேமியா 29 : 30 (OCVTA)
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
எரேமியா 29 : 31 (OCVTA)
“நாடுகடத்தப்பட்ட யாவருக்கும் நீ இந்தச் செய்தியை அனுப்பு. நெகெலாமியனான செமாயாவைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: நான் செமாயாவை அனுப்பாதபோதும் அவன் இறைவாக்கு கூறி நீங்கள் பொய்யை நம்பும்படி செய்திருக்கிறான்.
எரேமியா 29 : 32 (OCVTA)
ஆகவே, யெகோவா கூறுவது இதுவே: நான் நெகெலாமியனான செமாயாவையும் அவனுடைய சந்ததிகளையும் நிச்சயம் தண்டிப்பேன். அவன் எனக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசிங்கித்தபடியால், இந்த மக்கள் மத்தியில் அவனுக்கென ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். நான் என் மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையும் அவன் காணமாட்டான்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32