எரேமியா 18 : 1 (OCVTA)
குயவனின் வீட்டில் எரேமியா யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே:
எரேமியா 18 : 2 (OCVTA)
“நீ குயவனுடைய வீட்டிற்குப் போ; அங்கே நான் என்னுடைய வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன்” என்றார்.
எரேமியா 18 : 3 (OCVTA)
அப்பொழுது நான் குயவனுடைய வீட்டிற்குப் போனேன், அங்கே குயவன் சக்கரத்தைக்கொண்டு வனைந்துகொண்டிருப்பதை நான் கண்டேன்.
எரேமியா 18 : 4 (OCVTA)
ஆனால் குயவன் களிமண்ணால் உருவாக்கிக் கொண்டிருந்த அப்பாத்திரம் அவனுடைய கையிலே பழுதடைந்துவிட்டது; அதனால் அவன் தனக்கு நலமாய்த் தோன்றிய விதத்தில் வேறொரு பாத்திரமாக அதை வனைந்தான்.
எரேமியா 18 : 5 (OCVTA)
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
எரேமியா 18 : 6 (OCVTA)
இஸ்ரயேல் குடும்பத்தாரே! இந்தக் குயவன் செய்வதுபோல, நானும் உங்களுக்குச் செய்யக்கூடாதா? என்று யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேல் குடும்பத்தாரே! குயவனுடைய கையில் களிமண் இருப்பதுபோல, நீங்களும் என் கையில் இருக்கிறீர்கள்.
எரேமியா 18 : 7 (OCVTA)
எப்பொழுதாவது நான் ஒரு நாட்டையோ, அரசையோ குறித்து, அது வேரோடு பிடுங்கப்படும், தள்ளி வீழ்த்தப்படும், அழிக்கப்படும் என்று அறிவிக்கும்போது,
எரேமியா 18 : 8 (OCVTA)
நான் எச்சரித்த அந்த நாடு தன் தீமையைவிட்டு மனந்திரும்பினால், நான் மனமிரங்கி, கொண்டுவரத் திட்டமிட்ட பேராபத்தை அதன்மேல் சுமத்தமாட்டேன்.
எரேமியா 18 : 9 (OCVTA)
இன்னொரு வேளையில் ஒரு நாட்டையோ, அரசையோ குறித்து அது கட்டப்படும் என்றும் நாட்டப்படும் என்றும் அறிவிக்கும்போது,
எரேமியா 18 : 10 (OCVTA)
அந்த நாடு எனக்குக் கீழ்ப்படியாமல், எனது பார்வையில் தீமையை செய்தால், அதற்கு நான் செய்ய எண்ணியிருந்த நன்மைகளைச் செய்வதோ இல்லையோ என திரும்பவும் சிந்திப்பேன்.
எரேமியா 18 : 11 (OCVTA)
ஆகவே, இப்பொழுது நீ யூதா மக்களிடமும், எருசலேமில் வாழ்பவர்களிடமும் சொல்லவேண்டியதாவது: யெகோவா சொல்வது இதுவே: இதோ பாருங்கள், உங்களுக்கு ஒரு பேராபத்தை ஆயத்தப் படுத்துகிறேன்; உங்களுக்கு எதிராக ஒரு திட்டத்தை வகுக்கிறேன். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீயவழிகளைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் செய்கைகளையும் சீர்திருத்துங்கள் என்று சொல்.
எரேமியா 18 : 12 (OCVTA)
அதற்கு அவர்களோ, “இது பயனற்றது; நாங்கள் எங்கள் சொந்தத் திட்டங்களிலேயே தொடர்ந்து நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இருதயத்தின் பிடிவாதத்திலேயே நடப்போம் என்பார்கள்” என்றார்.
எரேமியா 18 : 13 (OCVTA)
ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: “இப்படிப்பட்ட ஒரு செயலை யாரும் எப்போதாவது கேட்டதுண்டோ? என்று நாடுகளிடம் விசாரியுங்கள்; இஸ்ரயேல் என்னும் கன்னிகை ஒரு படுமோசமான செயலைச் செய்திருக்கிறாள்.
எரேமியா 18 : 14 (OCVTA)
லெபனோனின் பனி அதன் பாறைச் சரிவுகளிலிருந்து எப்போதாவது மறைவதுண்டோ? தூரத்திலுள்ள நீரூற்றுகளிலிருந்து வரும் அதன் குளிர்ந்த தண்ணீர் எப்போதாவது ஓடாமல் நிற்கின்றதோ?
எரேமியா 18 : 15 (OCVTA)
ஆயினும், என் மக்களோ, என்னை மறந்துவிட்டார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களுக்குத் தூபம் எரிக்கிறார்கள். என் மக்களை அவர்களுடைய வழிகளிலும், முற்காலத்து பாதைகளிலும் அவைகளே இடறச்செய்தன. அவைகள் குறுக்கு வழிகளிலும், செப்பனிடாத வீதிகளிலும் அவர்களை நடக்கப்பண்ணின.
எரேமியா 18 : 16 (OCVTA)
அவர்களுடைய நாடு பாழாக்கப்பட்டு என்றென்றைக்கும் ஒரு கேலிப் பொருளாயிருக்கும். அவர்களைக் கடந்துபோகும் யாவரும் திகைத்து, ஏளனமாய் தலையை அசைப்பார்கள்.
எரேமியா 18 : 17 (OCVTA)
கொண்டல் காற்றைப்போல் பகைவரின் முன்பாக அவர்களைச் சிதறடிப்பேன். அவர்களுடைய பேராபத்தின் நாளில் அவர்களுக்கு என்னுடைய முகத்தை அல்ல; என் முதுகையே காட்டுவேன் என்று யெகோவா கூறுகிறார் என்று சொல்” என்றார்.
எரேமியா 18 : 18 (OCVTA)
அதற்கு அவர்கள், “எரேமியாவுக்கு எதிராகச் சதித்திட்டம் போடுவோம் வாருங்கள்; ஏனெனில் ஆசாரியர்கள் சட்டத்தைக் போதிப்பதும், ஞானிகள் ஆலோசனை கொடுப்பதும், இறைவாக்கு உரைப்போர் இறைவாக்கு உரைப்பதும் இல்லாமல் போகாது. எனவே வாருங்கள். நமது வார்த்தையினால் அவனைத் தாக்கி அவன் சொல்லும் எதையும் கவனியாமல் இருப்போம்” என்றார்கள்.
எரேமியா 18 : 19 (OCVTA)
“யெகோவாவே! எனக்குச் செவிகொடும். என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் சொல்வதையும் கேளும்.
எரேமியா 18 : 20 (OCVTA)
நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்யப்படலாமோ? அவர்கள் எனக்குக் குழியை வெட்டியிருக்கிறார்களே! நான் உமது முன்னிலையில் நின்று உமது கடுங்கோபத்தை அவர்களிடமிருந்து திருப்பும்படி அவர்களின் சார்பாகப் பேசியதை நினைத்தருளும்.
எரேமியா 18 : 21 (OCVTA)
ஆகையால் அவர்கள் பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, வாளின் வல்லமைக்கு அவர்களை ஒப்புக்கொடும். அவர்களுடைய மனைவிகள் பிள்ளையற்றவர்களாகவும், விதவைகளாகவும் ஆகட்டும். அவர்களுடைய ஆண்கள் சாகடிக்கப்பட்டு, அவர்களின் வாலிபர் யுத்தத்தில் வாளால் கொலைசெய்யப்படட்டும்.
எரேமியா 18 : 22 (OCVTA)
நீர் திடீரென அவர்கள்மீது கொள்ளைக் கூட்டத்தைக் கொண்டுவரும்போது, அவர்கள் வீடுகளிலிருந்து கூக்குரல் கேட்கட்டும். ஏனெனில் என்னைப் பிடிப்பதற்கு அவர்கள் குழிவெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
எரேமியா 18 : 23 (OCVTA)
ஆனாலும் யெகோவாவே! எனக்கெதிராக என்னைக் கொல்வதற்கு அவர்கள் செய்யும் சதித்திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர். அவர்களுடைய குற்றங்களை மன்னியாமலும், உமது பார்வையிலிருந்து அவர்களுடைய பாவங்களை அகற்றாமலும் இரும். அவர்கள் உமக்கு முன்பாக வீழ்த்தப்படட்டும்; உமது கோபத்தின் வேளையில் இவ்வாறு அவர்களுக்குச் செய்யும்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23