யாக்கோபு 3 : 1 (OCVTA)
நாவை அடக்குதல் என் சகோதரரே, உங்களில் பலர் போதகர்கள் ஆவதற்கு விரும்பாதீர்கள். ஏனெனில் போதிக்கிற நாம் அதிக தீர்ப்பிற்கு உட்படுவோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
யாக்கோபு 3 : 2 (OCVTA)
நாம் எல்லோரும் பலவிதங்களில் தவறு செய்கிறோம். தன் பேச்சில் ஒருபோதும் தவறாதவனாக யாராவது இருந்தால், அவனே முழுநிறைவு பெற்ற மனிதன். இப்படிப்பட்டவன், தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன்.
யாக்கோபு 3 : 3 (OCVTA)
குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படி, அவைகளுடைய வாய்களில் கடிவாளங்களைப் போடும்போது, அவைகளின் முழு உடலையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.
யாக்கோபு 3 : 4 (OCVTA)
அல்லது கப்பல்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவை மிகப்பெரியவைகளாய் இருந்தும், பலத்த காற்றினாலேயே அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலின் மாலுமி தான் விரும்புகின்ற திசையை நோக்கி, ஒரு சிறு சுக்கானாலே அவற்றைத் திருப்புகிறான்.
யாக்கோபு 3 : 5 (OCVTA)
அதேபோலவே, நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருக்கிறது; ஆனால் அது பெரும் அளவில் பெருமை பேசுகிறது. ஒரு சிறு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டையும் எரித்துவிடுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.
யாக்கோபு 3 : 6 (OCVTA)
நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது.
யாக்கோபு 3 : 7 (OCVTA)
எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.
யாக்கோபு 3 : 8 (OCVTA)
ஆனால் நாவையோ ஒருவனாலும் அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுக்கடங்காத கொடியது. மரணத்தை விளைவிக்கும் விஷம் நிறைந்ததாயிருக்கிறது.
யாக்கோபு 3 : 9 (OCVTA)
நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம்.
யாக்கோபு 3 : 10 (OCVTA)
ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே.
யாக்கோபு 3 : 11 (OCVTA)
ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா?
யாக்கோபு 3 : 12 (OCVTA)
எனக்கு பிரியமானவர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைக்கொடி அத்திப்பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல், உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதுமில்லை.
யாக்கோபு 3 : 13 (OCVTA)
இரண்டுவிதமான ஞானம் உங்களுக்குள்ளே ஞானம் உள்ளவன் யார்? அறிவுள்ளவன் யார்? அவன் தன்னுடைய நல்ல வாழ்க்கையினாலே அதைக் காண்பிக்கட்டும். ஞானத்திலிருந்து வரும் மனத்தாழ்மையினால் செயல்களைச் செய்து காண்பிக்கட்டும்;
யாக்கோபு 3 : 14 (OCVTA)
ஆனால், உங்களுடைய இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சுயநல ஆசையையும் இருக்குமேயானால், அதைக்குறித்து பெருமைப்பட வேண்டாம், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசவேண்டாம்.
யாக்கோபு 3 : 15 (OCVTA)
அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வரும் ஒன்றல்ல; இது உலக ஞானம். இது ஆவிக்குரிய தன்மையற்றது. இது பிசாசினிடத்திலிருந்து வருகிறது.
யாக்கோபு 3 : 16 (OCVTA)
ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன.
யாக்கோபு 3 : 17 (OCVTA)
ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது தூய்மை உடையதாய் இருக்கிறது; அது சமாதானத்தை விரும்புகிறதும், தயவுடையதும், பணிவுடையதும், இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்ததுமாய் இருக்கிறது; அது பாரபட்சமும் போலித்தன்மையற்றதுமாய் இருக்கிறது.
யாக்கோபு 3 : 18 (OCVTA)
சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18