ஏசாயா 62 : 1 (OCVTA)
சீயோனின் புதுப்பெயர் சீயோனின் நிமித்தம் நான் மவுனமாயிராமலும், எருசலேமின் நிமித்தம் நான் செயலற்று இராமலும், அதன் நீதி விடியற்கால வெளிச்சத்தைப் போலவும், அதன் இரட்சிப்பு பற்றியெரியும் ஒரு தீவட்டியைப் போலவும் வெளிப்படும்வரை அமராமலும் இருப்பேன்.
ஏசாயா 62 : 2 (OCVTA)
பிறநாடுகள் உன் நீதியைக் காண்பார்கள், அரசர்கள் யாவரும் உன் மகிமையைக் காண்பார்கள்; யெகோவாவின் வாய் வழங்கும் ஒரு புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
ஏசாயா 62 : 3 (OCVTA)
நீ யெகோவாவின் கரத்தில் சிறப்பான மகுடமாகவும், உன் இறைவனின் கரத்தில் அரச மகுடமாகவும் இருப்பாய்.
ஏசாயா 62 : 4 (OCVTA)
அவர்கள் இனி ஒருபோதும் உன்னைக் கைவிடப்பட்ட நாடு என அழைப்பதில்லை. உன்னைப் பாழடைந்த நாடு என்று சொல்வதுமில்லை. நீ எப்சிபா என்று அழைக்கப்படுவாய், உனது நாடு பியூலா என்று பெயர்பெறும்; ஏனெனில் யெகோவா உன்னில் பிரியப்படுவார், உன் நாடு வாழ்க்கைப்படும்.
ஏசாயா 62 : 5 (OCVTA)
ஒரு வாலிபன் ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்வதுபோல, உன்னைக் கட்டியெழுப்பியவர் உன்னைத் திருமணம் செய்வார். மணமகன் மணமகளில் மகிழ்ச்சிகொள்ளுவதுபோல, உன் இறைவன் உன்னில் மகிழ்ச்சிகொள்வார்.
ஏசாயா 62 : 6 (OCVTA)
எருசலேமே, நான் உனது மதில்களின்மேல் காவலாளரை நியமித்திருக்கிறேன்; பகலிலோ இரவிலோ ஒருபோதும் அவர்கள் மவுனமாய் இருக்கமாட்டார்கள். யெகோவாவை நோக்கி மன்றாடுவோரே, நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டாம்.
ஏசாயா 62 : 7 (OCVTA)
அவர் எருசலேமை நிலைக்கப்பண்ணி, அவளைப் பூமியின் புகழ்ச்சியாக்கும்வரை, அவருக்கு ஓய்வுகொடாதீர்கள்.
ஏசாயா 62 : 8 (OCVTA)
யெகோவா தனது வலது கரத்தினாலும் வலிய புயத்தினாலும் ஆணையிட்டுக் கூறியது: “நான் உங்கள் தானியத்தை, இனி ஒருபோதும் உங்கள் பகைவர்களுக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்; உங்கள் உழைப்பினால் உண்டான புதிய திராட்சரசத்தை பிறர் இனி ஒருபோதும் குடிக்கமாட்டார்கள்.
ஏசாயா 62 : 9 (OCVTA)
அதை அறுவடை செய்பவர்களே அதைச் சாப்பிட்டு, யெகோவாவைத் துதிப்பார்கள். திராட்சைப் பழங்களை சேகரிப்பவர்களே எனது பரிசுத்த இடத்தின் முற்றத்தில் திராட்சை இரசத்தைக் குடிப்பார்கள்.”
ஏசாயா 62 : 10 (OCVTA)
கடந்துசெல்லுங்கள், வாசல்களைக் கடந்துசெல்லுங்கள்! மக்களுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். கட்டுங்கள், பெரும் பாதையைக் கட்டுங்கள்! கற்களை அகற்றுங்கள். நாடுகளுக்காக கொடியை ஏற்றுங்கள்.
ஏசாயா 62 : 11 (OCVTA)
யெகோவா பூமியின் கடைசிவரை பிரசித்தப்படுத்தியிருப்பது: “பாருங்கள், ‘உங்கள் இரட்சகர் வருகிறார்! இதோ, அவர் கொடுக்கும் வெகுமதி அவருடன் இருக்கிறது; அவர் கொடுக்கும் பிரதிபலனும் அவரோடு வருகிறது’ என்று சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்.”
ஏசாயா 62 : 12 (OCVTA)
அவர்கள் பரிசுத்த மக்கள் என்றும், யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள்; நீ தேடிக் கண்டுபிடிக்கப்பட்டதென்றும் இனி ஒருபோதும் கைவிடப்படாத பட்டணம் என்றும் அழைக்கப்படுவாய்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12