ஏசாயா 60 : 1 (OCVTA)
சீயோனின் மகிமை “எழும்பிப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, யெகோவாவின் மகிமை உன்மேல் உதிக்கிறது.
ஏசாயா 60 : 2 (OCVTA)
இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது, காரிருள் மக்கள் கூட்டங்களைச் சூழ்ந்திருக்கிறது. ஆனால் யெகோவா உன்மேல் உதிக்கிறார், அவரின் மகிமை உன்மேல் தோன்றுகிறது.
ஏசாயா 60 : 3 (OCVTA)
பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும், அரசர்கள் உன்மேல் வரும் விடியற்காலையின் பிரகாசத்திற்கும் வருவார்கள்.
ஏசாயா 60 : 4 (OCVTA)
“உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார்; யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்; உன் மகன்கள் தொலைவிலிருந்து வருகிறார்கள், உன் மகள்கள் தோளில் சுமந்துகொண்டு வரப்படுகிறார்கள்.
ஏசாயா 60 : 5 (OCVTA)
அப்பொழுது நீ பார்த்து முகமலர்ச்சி அடைவாய்; உன் இருதயம் மகிழ்ந்து பூரிப்படையும்; கடல்களின் திரவியம் உனக்குக் கொண்டுவரப்படும்; நாடுகளின் செல்வமும் உன்னிடம் சேரும்.
ஏசாயா 60 : 6 (OCVTA)
ஒட்டகக் கூட்டம் நாட்டை நிரப்பும், மீதியா, ஏப்பாத் நாடுகளின் இளம் ஒட்டகங்கள் உன்னிடம் வரும். சேபாவிலிருந்து வரும் அனைவரும் தங்கமும் நறுமண தூபமும் கொண்டுவந்து, யெகோவாவின் புகழை அறிவிக்க வருவார்கள்.
ஏசாயா 60 : 7 (OCVTA)
கேதாரின் மந்தைகள் எல்லாம் உன்னிடம் சேர்க்கப்படும், நெபாயோத்தின் கடாக்கள் உனக்குப் பணிபுரியும்; அவை என் பலிபீடத்தில் பலிகளாக ஏற்றுக்கொள்ளப்படும், நான் என் மகிமையான ஆலயத்தை அலங்கரிப்பேன்.
ஏசாயா 60 : 8 (OCVTA)
“மேகங்களைப் போலவும், தம் கூட்டுக்குப் பறந்தோடும் புறாக்களைப்போலவும் பறக்கும் இவர்கள் யார்?
ஏசாயா 60 : 9 (OCVTA)
தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன; தர்ஷீசின் கப்பல்கள் முன்னணியில் வருகின்றன. தொலைவிலுள்ள உங்கள் மகன்களை அவர்களுடைய வெள்ளியோடும் தங்கத்தோடும் கொண்டுவருகின்றன. இஸ்ரயேலின் பரிசுத்தரும் உன் இறைவனுமாகிய யெகோவாவை கனம் பண்ணுவதற்காக இவை வருகின்றன. ஏனெனில் அவர் உன்னைச் சிறப்பால் அலங்கரித்திருக்கிறார்.
ஏசாயா 60 : 10 (OCVTA)
“அந்நியர் உன் மதில்களை மீண்டும் கட்டியெழுப்புவார்கள், அவர்களுடைய அரசர்கள் உனக்குப் பணிசெய்வார்கள். என் கோபத்தினால் நான் உன்னை அடித்தபோதிலும், தயவுடன் நான் உனக்குக் கருணை காட்டுவேன்.
ஏசாயா 60 : 11 (OCVTA)
உங்கள் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும், பகலோ இரவோ, அவை ஒருபோதும் மூடப்படுவதில்லை; நாடுகளின் செல்வத்தை மனிதர் கொண்டுவருகையில், அவைகளோடு அரசர்களை வெற்றிப் பவனியுடன் நடத்தி வருவதற்காகவே இவ்வாறு திறந்திருக்கும்.
ஏசாயா 60 : 12 (OCVTA)
உனக்குப் பணி செய்யாத நாடோ அல்லது அரசோ அழிந்துபோகும்; அது முற்றிலும் பாழாகிவிடும்.
ஏசாயா 60 : 13 (OCVTA)
“எனது பரிசுத்த இடத்தை அலங்கரிப்பதற்கு லெபனோனின் மகிமையாகிய தேவதாரு, சவுக்கு, புன்னை மரங்கள் ஒன்றுசேர்ந்து உன்னிடம் வந்துசேரும்; நான் எனது பாதபடியை மகிமைப்படுத்துவேன்.
ஏசாயா 60 : 14 (OCVTA)
உன்னை ஒடுக்கியோரின் பிள்ளைகள் தலைகுனிந்தபடி உனக்குமுன் வருவார்கள்; உன்னை இகழ்ந்த யாவரும் உன் பாதத்தண்டையில் தலைகுனிந்து நிற்பார்கள். அவர்கள் உன்னை யெகோவாவின் பட்டணம் என்றும், இஸ்ரயேலின் பரிசுத்தரின் சீயோன் என்றும் அழைப்பார்கள்.
ஏசாயா 60 : 15 (OCVTA)
“ஒருவரும் உன் வழியே நடவாமல் நீ வெறுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்தபோதும், எல்லாத் தலைமுறைக்கும் நான் உன்னை நித்திய பெருமையாயும் மகிழ்ச்சியாயும் ஆக்குவேன்.
ஏசாயா 60 : 16 (OCVTA)
நீ நாடுகளின் பாலைக் குடித்து, அரச குடும்பத்தவர்களின் மார்பகங்களில் பாலைக் குடிப்பாய். அப்பொழுது நீ யெகோவாவாகிய நானே உன் இரட்சகர், உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர் என்பதை அறிந்துகொள்வாய்.
ஏசாயா 60 : 17 (OCVTA)
வெண்கலத்திற்குப் பதிலாக தங்கத்தையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும் நான் உன்னிடம் கொண்டுவருவேன். மரத்துக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் உன்னிடம் கொண்டுவருவேன். சமாதானத்தை உங்கள் ஆட்சித் தலைவனாகவும் நீதியை உங்கள் ஆளுநனாகவும் நான் ஆக்குவேன்.
ஏசாயா 60 : 18 (OCVTA)
உன் நாட்டில் இனியொருபோதும் வன்முறைகளின் சத்தம் கேட்கப்படமாட்டாது; உன் எல்லைகளுக்குள் அழிவும் பாழாக்குதலும் ஏற்படமாட்டாது. ஆனால் நீ உன் மதில்களை இரட்சிப்பு என்றும், உன் வாசல்களைத் துதி என்றும் அழைப்பாய்.
ஏசாயா 60 : 19 (OCVTA)
இனிமேல் பகலில் சூரியன் உனக்கு வெளிச்சமாய் இருக்கமாட்டாது; அல்லது சந்திரனின் வெளிச்சம் உன்மேல் பிரகாசிக்கமாட்டாது. ஏனெனில் யெகோவாவே உன்னுடைய நித்திய ஒளியாக இருப்பார்; உன் இறைவனே உன் மகிமையாயிருப்பார்.
ஏசாயா 60 : 20 (OCVTA)
உன் சூரியன் ஒருபோதும் மறைவதுமில்லை, உன் சந்திரன் இனிமேல் தேய்வதுமில்லை. யெகோவாவே உன் நித்திய ஒளியாய் இருப்பார், உன் துக்க நாட்களும் முடிவடையும்.
ஏசாயா 60 : 21 (OCVTA)
அப்பொழுது உன் மக்கள் யாவரும் நீதியானவர்களாய் இருந்து, நாட்டை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்; அவர்களே எனது மகிமை வெளிப்படும்படியாக என் கரங்களின் வேலையாகவும் நான் நட்ட முளையாகவும் இருக்கிறார்கள்.
ஏசாயா 60 : 22 (OCVTA)
உங்களில் சிறியவர் ஆயிரம் பேர்களாவர், அற்பரும் வலிய நாடாவர். நானே யெகோவா; அதன் காலத்தில் அதை நானே தீவிரமாகச் செய்வேன்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22