ஏசாயா 54 : 1 (OCVTA)
சீயோனின் எதிர்கால மகிமை “பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பிரசவ வேதனைப்படாதவளே, ஆர்ப்பரித்துப் பாடி ஆனந்த சத்தமிடு, ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
ஏசாயா 54 : 2 (OCVTA)
“உனது கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு, உனது குடியிருப்புகளின் திரையை நன்கு அகலமாக விரி; இவற்றைச் செய்ய பின்வாங்காதே. கயிறுகளை தாராளமாக நீட்டி, முளைகளை உறுதிப்படுத்து.
ஏசாயா 54 : 3 (OCVTA)
ஏனெனில் நீ வலது புறமாகவும், இடது புறமாகவும் பரவியிருப்பாய்; உன்னுடைய சந்ததிகள் நாடுகளை வெளியேற்றி, அவர்களுடைய பாழடைந்த பட்டணங்களில் குடியேறுவார்கள்.
ஏசாயா 54 : 4 (OCVTA)
“பயப்படாதே, நீ வெட்கப்படமாட்டாய்; அவமானத்திற்குப் பயப்படாதே, நீ தாழ்த்தப்படமாட்டாய். நீ உன் வாலிப காலத்தின் வெட்கத்தை மறந்துபோவாய், விதவைக்கால நிந்தனையையும் இனி ஒருபோதும் நினைக்கமாட்டாய்.
ஏசாயா 54 : 5 (OCVTA)
ஏனெனில், உன்னைப் படைத்தவரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர், இஸ்ரயேலின் பரிசுத்தரே உனது மீட்பர்; அவர் பூமி முழுவதற்கும் இறைவன் என்னப்படுவார்.
ஏசாயா 54 : 6 (OCVTA)
கைவிடப்பட்டு உள்ளத்தில் துக்கங்கொண்ட ஒரு மனைவியை அழைப்பதுபோலவும், இளமையில் திருமணம் செய்தும் விலக்கப்பட்ட மனைவியைத் திரும்பவும் அழைப்பதுபோலவும் யெகோவா உன்னைத் திரும்பவும் அழைப்பார்” என்று உனது இறைவன் சொல்கிறார்.
ஏசாயா 54 : 7 (OCVTA)
“நான் ஒரு நொடிப்பொழுது உன்னைக் கைவிட்டேன், ஆனால் ஆழ்ந்த இரக்கத்துடன் நான் உன்னைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வேன்.
ஏசாயா 54 : 8 (OCVTA)
என் கோபம் பொங்கி எழுந்ததால், உன்னிடமிருந்து என் முகத்தை ஒரு நொடிப்பொழுதே மறைத்தேன்; ஆனால், நித்திய தயவுடன் நான் உன்னில் இரக்கங்கொள்வேன்” என்று, உன் மீட்பராகிய யெகோவா சொல்கிறார்.
ஏசாயா 54 : 9 (OCVTA)
“இது எனக்கு நோவாவின் நாட்களில் நடந்ததுபோல் இருக்கின்றது; நோவாவின் நாட்களில் வந்த பெருவெள்ளம் இனி ஒருபோதும் பூமியை மூடமாட்டாது என்று நான் ஆணையிட்டேன். ஆகவே இப்பொழுதோ உங்களுடன் கோபங்கொள்ளவோ, அல்லது இனி ஒருபோதும் உங்களைக் கண்டிக்கவோ மாட்டேன் என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்.
ஏசாயா 54 : 10 (OCVTA)
மலைகள் அசைக்கப்பட்டாலும், குன்றுகள் அகற்றப்பட்டாலும் உன்மீதுள்ள என் நேர்மையான அன்பு அசைக்கப்படமாட்டாது; என் சமாதானத்தின் உடன்படிக்கை அகற்றப்படமாட்டாது” என்று உன்னில் இரக்கமுள்ள யெகோவா சொல்கிறார்.
ஏசாயா 54 : 11 (OCVTA)
“துன்புறுத்தப்பட்டிருக்கும் பட்டணமே, புயல்காற்றினால் அடிக்கப்பட்டு, தேற்றப்படாமல் இருக்கும் பட்டணமே, நான் உன்னை நீல இரத்தினக் கற்களாலும், உன் அஸ்திபாரங்களை இரத்தினக் கற்களாலும் கட்டுவேன்.
ஏசாயா 54 : 12 (OCVTA)
உனது கொத்தளங்களை சிவப்புக் கற்களாலும், உனது வாசல்களை மினுமினுக்கும் கற்களாலும், உனது மதில்கள் எல்லாவற்றையும் மாணிக்கக் கற்களாலும் கட்டுவேன்.
ஏசாயா 54 : 13 (OCVTA)
உன் பிள்ளைகள் யாவரும் யெகோவாவினால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; அவர்களுடைய சமாதானமும் பெரிதாயிருக்கும்.
ஏசாயா 54 : 14 (OCVTA)
நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய்: கொடுமை உன்னைவிட்டுத் தூரமாகும்; நீ பயப்படுவதற்கு எதுவுமிராது. பயங்கரம் உன்னைவிட்டுத் தூரமாய் அகற்றப்படும்; அது உனக்குக் கிட்டவராது.
ஏசாயா 54 : 15 (OCVTA)
உன்னை யாராவது தாக்கினால் அது எனது செயல் அல்ல; உன்னைத் தாக்குகிறவன் எவனும் உன்னிடம் சரணடைவான்.
ஏசாயா 54 : 16 (OCVTA)
“இதோ நானே நெருப்புத் தணலை ஊதி வேலைக்கேற்ற ஆயுதங்களைச் செய்யும் கொல்லனை படைத்தேன். பாழாக்கும் அழிவுகாரனையும் நானே படைத்தேன்.
ஏசாயா 54 : 17 (OCVTA)
ஆகவே உனக்கு எதிராகச் செய்யப்படும் ஆயுதம் எதுவும் வெற்றிகொள்ளாது, உன்னைக் குற்றம் சாட்டும் ஒவ்வொரு நாவிற்கும் நீ அதன் பிழையைக் காட்டுவாய். யெகோவாவின் ஊழியருக்கு என்னிடமிருந்து கிடைக்கும் அவர்களுக்குரிய நியாயப்படுத்துதல் இதுவே, என்னிடமிருந்து கிடைக்கும் சொத்துரிமையும் இதுவே” என்று யெகோவா சொல்லுகிறார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17