ஏசாயா 51 : 1 (OCVTA)
சீயோனுக்கு நித்திய இரட்சிப்பு “நீதியைப் பின்பற்றுகிறவர்களே, யெகோவாவைத் தேடுகிறவர்களே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் எந்தக் கற்பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டீர்களோ, எந்தக் கற்குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டீர்களோ, அந்தக் கற்பாறையானவரை நோக்கிப்பாருங்கள்.
ஏசாயா 51 : 2 (OCVTA)
உங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்றெடுத்த சாராளையும் நோக்கிப்பாருங்கள். நான் அவனை அழைத்தபோது, அவன் ஒருவனாய் மாத்திரமே இருந்தான்; நான் அவனை ஆசீர்வதித்து அவனை அநேகராகப் பெருகச் செய்தேன்.
ஏசாயா 51 : 3 (OCVTA)
மெய்யாகவே யெகோவா சீயோனைத் தேற்றுவார், அவளுடைய பாழான இடங்களையெல்லாம் ஆறுதல் செய்வார்; அவர் அவளுடைய பாலைவனங்களை ஏதேனைப் போலவும், அவளுடைய பாழிடங்களை யெகோவாவின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார். சந்தோஷமும் மகிழ்ச்சியும் அங்கு காணப்படும், நன்றி செலுத்துதலும் பாடலின் சத்தமும் அங்கு இருக்கும்.
ஏசாயா 51 : 4 (OCVTA)
“என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் நாடே, கேளுங்கள்: சட்டம் என்னிலிருந்து வெளிப்படும்: என் நீதி நாடுகளுக்கு ஒரு வெளிச்சமாக இருக்கும்.
ஏசாயா 51 : 5 (OCVTA)
என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படுகிறது, என் புயம் நாடுகளுக்கு நீதியைக் கொண்டுவரும். தீவுகள் என்னை நோக்கி, என் கரத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்.
ஏசாயா 51 : 6 (OCVTA)
உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள், கீழிருக்கும் பூமியையும் பாருங்கள்; வானங்கள் புகையைப்போல் மறையும், பூமியும் பழைய உடையைப்போல் கந்தையாகும்; அங்கு குடியிருப்போரும் ஈக்களைப்போல் சாவார்கள். ஆனால் எனது இரட்சிப்போ என்றென்றைக்கும் நிலைநிற்கும், எனது நீதி ஒருபோதும் தவறுவதில்லை.
ஏசாயா 51 : 7 (OCVTA)
“நியாயத்தை அறிந்தவர்களே, எனது சட்டத்தை மனதில் வைத்திருக்கும் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். மனிதரின் நிந்தனைக்குப் பயப்படாதீர்கள்; அவர்களின் ஏளனப் பேச்சுக்களால் திகிலடையாதீர்கள்.
ஏசாயா 51 : 8 (OCVTA)
பொட்டுப்பூச்சி உடையை அரித்து, ஆட்டு மயிரைத் தின்பதுபோல் அவர்களைத் தின்னும். ஆனால் என் நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், எனது இரட்சிப்பும் எல்லா தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும்.”
ஏசாயா 51 : 9 (OCVTA)
யெகோவாவின் புயமே, விழித்தெழு, விழித்தெழு, பெலத்தால் உன்னை உடுத்திக்கொள்! கடந்த நாட்களிலும் பழைய தலைமுறைகளிலும் எழுந்ததுபோல் விழித்தெழு. ராகாப்* ராகாப் பண்டைய இலக்கியங்களில் ஒழிங்கீனத்தைக் குறிக்கும் புராண கடல் அசுரனின் பெயராகும். இங்கே எகிப்தைக் குறிக்கும் கவிதைப் பெயராக ராகாப் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னும் வலுசர்ப்பத்தைத் துண்டுதுண்டாக வெட்டியது நீரல்லவா? அந்த மிருகத்தை ஊடுருவக் குத்தியதும் நீரல்லவா?
ஏசாயா 51 : 10 (OCVTA)
கடலையும் ஆழங்களின் தண்ணீரையும் வற்றவைத்தது நீரல்லவா? மீட்கப்பட்டவர்கள் கடந்துசெல்லும்படி கடலின் பெரிய ஆழங்களில் பாதை அமைத்ததும் நீரல்லவா?
ஏசாயா 51 : 11 (OCVTA)
யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள். அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைவார்கள், துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.
ஏசாயா 51 : 12 (OCVTA)
“நான், நானே உன்னைத் தேற்றுகிறவர். இறக்கும் மனிதனுக்கும், புல்லாயிருக்கும் மானிடருக்கும் பயப்படுவதற்கு நீ யார்?
ஏசாயா 51 : 13 (OCVTA)
வானங்களை விரித்து, பூமியின் அஸ்திபாரங்களை அமைத்த, உன் படைப்பாளரான யெகோவாவை நீ மறந்திருக்கிறாயே! அதனால் அழிக்கக் காத்திருக்கும் ஒடுக்குகிறவனுடைய கோபத்திற்கு தினமும் இடைவிடாமல் நீ அஞ்சுகிறாயே! ஒடுக்குபவனின் கடுங்கோபம் எங்கே?
ஏசாயா 51 : 14 (OCVTA)
பயந்து அடங்கியிருக்கும் கைதிகள் விரைவில் விடுதலையாக்கப்படுவார்கள்; தங்கள் இருட்டறையில் அவர்கள் சாகமாட்டார்கள், அவர்களின் உணவும் குறைவுபடாது.
ஏசாயா 51 : 15 (OCVTA)
ஏனெனில் உன் இறைவனாகிய யெகோவா நானே, நான் கடலைக் கலக்க அதன் அலைகள் இரைகின்றன, சேனைகளின் யெகோவா என்பது என் பெயர்.
ஏசாயா 51 : 16 (OCVTA)
வானங்களை அதினதின் இடத்தில் நிலைப்படுத்தி, பூமியின் அஸ்திபாரங்களையும் அமைத்தேன். சீயோனிடம், ‘நீங்களே எனது மக்கள்’ என்று சொன்னேன்” நான் என் வார்த்தைகளை உன் வாயில் அருளி, என் கரத்தின் நிழலால் உன்னை மூடிக்கொண்டேன்.
ஏசாயா 51 : 17 (OCVTA)
யெகோவாவின் கோபம் விழித்தெழு, விழித்தெழு! எருசலேமே, விழித்தெழு, யெகோவாவின் கரத்திலிருக்கும் அவரது கோபத்தின் பாத்திரத்தில் குடித்தவளே! மனிதரைத் தள்ளாடவைக்கும் பாத்திரத்தை மண்டிவரை குடித்தவளே! நீ எழுந்திரு.
ஏசாயா 51 : 18 (OCVTA)
அவள் பெற்றெடுத்த எல்லா மக்களிலும் அவளுக்கு வழிகாட்ட பிள்ளைகள் ஒருவரும் இருக்கவில்லை; அவள் வளர்த்த எல்லா பிள்ளைகளிலும் அவளைக் கையில் பிடித்துச் செல்லக்கூட ஒருவரும் இல்லை.
ஏசாயா 51 : 19 (OCVTA)
இந்த இரண்டு பெரும் துன்பங்களும் உன்மேல் வந்திருக்கின்றன; உன்னைத் தேற்றுபவர் யார்? அழிவும், பாழும், பஞ்சமும், வாளும் உன்மேல் வந்திருக்கின்றன. உன்னை ஆறுதல்படுத்துபவர் யார்?
ஏசாயா 51 : 20 (OCVTA)
உனது பிள்ளைகள் சோர்ந்துவிட்டார்கள்; ஒவ்வொரு தெருவின் முகப்பிலும், வலையில் அகப்பட்ட கலைமானைப்போல் கிடக்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் கோபத்தாலும், உங்கள் இறைவனின் கண்டனத்தாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.
ஏசாயா 51 : 21 (OCVTA)
ஆகவே, துன்புறுத்தப்பட்டவளே, மதுபானம் குடிக்காமலே வெறிகொண்டிருக்கிறவளே, இதைக் கேள்.
ஏசாயா 51 : 22 (OCVTA)
உன் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே, தமது மக்களுக்காக வாதாடும் உன் இறைவன் கூறுகிறார்: “உன்னை மதிமயக்கும் பாத்திரத்தை உன் கைகளிலிருந்து எடுத்துக்கொண்டேன்; எனது கோபத்தின் பாத்திரத்தில் நீ இனி ஒருபோதும் குடிக்கமாட்டாய்.
ஏசாயா 51 : 23 (OCVTA)
உன்னை வேதனைப்படுத்தியவர்களின் கைகளில் அப்பாத்திரத்தை நான் வைப்பேன். அவர்கள் உன்னிடம், ‘நாங்கள் உன்மீது நடக்கும்படி நிலத்தில் வீழ்ந்துகிட’ என்று சொல்லியிருந்தார்கள். நீயும் உன் முதுகை நிலத்தைப் போலாக்கினாய், மிதித்து நடக்கும்படி அதை ஒரு வீதியைப்போலவும் ஆக்கினாயே.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23