ஏசாயா 47 : 1 (OCVTA)
பாபிலோனின் வீழ்ச்சி “பாபிலோனின் கன்னிப்பெண்ணே, நீ கீழேபோய் புழுதியில் உட்கார்ந்துகொள். கல்தேயரின் மகளே, அரியணை அற்றவளாய் தரையில் உட்கார்ந்துகொள். நீ இனி மிருதுவானவள் என்றோ மென்மையானவள் என்றோ அழைக்கப்படுவதில்லை.
ஏசாயா 47 : 2 (OCVTA)
திரிகைக் கற்களை எடுத்து மாவரை; உனது முக்காட்டை எடுத்துவிடு. உனது பாவாடைகளை உயர்த்தி, கால்களை வெறுமையாக்கி, நீரோடைகளைக் கடந்துபோ.
ஏசாயா 47 : 3 (OCVTA)
உனது நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்; உன்னுடைய வெட்கம் திறந்து காட்டப்படும். நான் பழிவாங்குவேன்; நான் ஒருவரையும் தப்பவிடமாட்டேன்.”
ஏசாயா 47 : 4 (OCVTA)
இஸ்ரயேலின் பரிசுத்தரே நமது மீட்பர்; சேனைகளின் யெகோவா என்பதே அவரது பெயர்.
ஏசாயா 47 : 5 (OCVTA)
“பாபிலோனியர்களின் மகளே, இருளுக்குள் போய் மவுனமாய் அமர்ந்திரு; நீ இனி ஒருபோதும் அரசுகளுக்கு அரசி என அழைக்கப்படமாட்டாய்.
ஏசாயா 47 : 6 (OCVTA)
நான் எனது மக்களுடன் கோபங்கொண்டு எனது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களை தூய்மைக்கேடு அடையச் செய்தேன். அவர்களை உனது கையில் ஒப்படைத்தேன்; நீயோ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை, முதியோர்மேலும் மிகவும் பாரமான நுகத்தை வைத்தாய்.
ஏசாயா 47 : 7 (OCVTA)
‘தொடர்ந்து நான் என்றென்றும் அரசியாக நிலைத்திருப்பேன்!’ என்று நீ சொன்னாய். ஆனால் நீ இந்தக் காரியங்களைப் பற்றி சிந்திக்கவுமில்லை; என்ன நடக்குமென நீ எண்ணிப்பார்க்கவுமில்லை.
ஏசாயா 47 : 8 (OCVTA)
“இப்பொழுதோ ஒழுக்கங்கெட்டவளே, நீ பாதுகாப்பாக சொகுசாக இருந்து, ‘நானே பெரும் அரசி, எனக்கு நிகர் யாரும் இல்லை. நான் விதவையாகவோ, அல்லது பிள்ளைகளை இழந்து துன்பப்படுகிறவளாகவோ ஆகமாட்டேன்’ என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்கிறாய்.
ஏசாயா 47 : 9 (OCVTA)
இவை இரண்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் உன்னை மேற்கொள்ளும்: நீ பிள்ளைகளை இழந்து, விதவையாவாய். உனக்கு எண்ணற்ற மந்திர வித்தைகள் தெரிந்தும், வசீகர சக்திகள் இருந்தும் அவை முழுமையாக உன்மேல் வரும்.
ஏசாயா 47 : 10 (OCVTA)
நீ உனது கொடுமையில் நம்பிக்கையாயிருந்து, ‘ஒருவரும் என்னைக் காண்பதில்லை’ என்று சொல்லிக்கொள்கிறாய். நீ உன் உள்ளத்தில் ‘நான்தான், எனக்கு நிகர் யாருமே இல்லை’ என்று சொல்லும்போது, உன் ஞானமும் உன் அறிவும் உன்னைத் தவறான வழியில் நடத்துகின்றன.
ஏசாயா 47 : 11 (OCVTA)
பேராபத்து உன்மேல் வரும், அதை மந்திர வித்தையால் எப்படி அகற்றுவது என நீ அறியமாட்டாய்; உன்மேல் பெரும் துன்பம் வரும், எதை ஈடாகக் கொடுத்தும் அதை உன்னால் தவிர்த்துக் கொள்ளமுடியாது. நீ முன்னதாகவே அறிந்துகொள்ள முடியாத ஒரு பேரழிவு உன்மேல் திடீரென வரும்.
ஏசாயா 47 : 12 (OCVTA)
“நீ தொடர்ந்து உன் மந்திரங்களைச் சொல்லு, பலவிதமான உன் மாந்திரீக வேலைகளில் ஈடுபடு; இதைத்தான் உன் சிறுவயதிலிருந்தே நீ செய்கிறாய். அதனால் ஒருவேளை நீ வெற்றி பெறலாம், ஒருவேளை நீ பயங்கரத்தைக் கொண்டுவரலாம்.
ஏசாயா 47 : 13 (OCVTA)
நீ பெற்றுக்கொண்ட ஆலோசனை எல்லாம் உனக்குச் சோர்வையே உண்டாக்கியது; உன்னுடைய சோதிடர்களும் நட்சத்திரங்களைப் பார்த்து, மாதந்தோறும் இராசிபலன் கூறுகிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடப் போவதிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும்.
ஏசாயா 47 : 14 (OCVTA)
உண்மையாகவே அவர்கள் அறுவடை செய்த பயிரின் தாளடியைப்போல் இருக்கிறார்கள்; நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நெருப்புச் சுவாலையிலிருந்து தங்களையே விடுவித்துக்கொள்ள அவர்களால் முடியாது. அது குளிர்காயக்கூடிய தணலாகவோ, அருகில் உட்காரத்தக்க நெருப்பாகவோ இருக்காது.
ஏசாயா 47 : 15 (OCVTA)
உன் சிறுவயதுமுதல் நீ ஈடுபட்டுத் தொடர்புகொண்டிருந்த, மந்திரவாதிகளினால் இவற்றை மட்டுமே உனக்குச் செய்யமுடியும். அவர்களில் ஒவ்வொருவனும் தனது தவறான வழியிலேயே போகிறான்; உன்னைக் காப்பாற்றக் கூடியவன் எவனுமே இல்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15