ஏசாயா 40 : 1 (OCVTA)
இறைவனின் மக்களுக்கு ஆறுதல் என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள், என உங்கள் இறைவன் சொல்கிறார்.
ஏசாயா 40 : 2 (OCVTA)
எருசலேமுடன் தயவாகப் பேசுங்கள், அவளிடம், “அவளது கடும் உழைப்பு முடிவடைந்தது; அவளுடைய பாவத்திற்கு நிவாரணம் கொடுத்து முடிந்துவிட்டது; அவள் தனது எல்லா பாவங்களுக்காகவும் இரட்டிப்பான தண்டனையை யெகோவாவின் கரங்களிலிருந்து அனுபவித்து விட்டாள்” என்று அவளுக்குப் பிரசித்தப்படுத்துங்கள்.
ஏசாயா 40 : 3 (OCVTA)
ஒருவரின் குரல் கூப்பிடுகிறது: “பாலைவனத்தில் யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள்.
ஏசாயா 40 : 4 (OCVTA)
ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும், மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும், கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும்.
ஏசாயா 40 : 5 (OCVTA)
யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்; மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும். யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.”
ஏசாயா 40 : 6 (OCVTA)
“உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல். அதற்கு, “நான் எதைச் சொல்லுவேன்?” என்றேன். “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள், அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன.
ஏசாயா 40 : 7 (OCVTA)
யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது, பூக்களும் உதிர்கின்றன; நிச்சயமாக மக்களும் புல்லாகவே இருக்கிறார்கள்.
ஏசாயா 40 : 8 (OCVTA)
புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன, ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது.”
ஏசாயா 40 : 9 (OCVTA)
சீயோனுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, நீ உயர்ந்த மலையொன்றில் ஏறு. எருசலேமுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, நீ குரலை எழுப்பிக் கூக்குரலிடு. பயப்படாதே, குரலை எழுப்பு; “இதோ உங்கள் இறைவன்!” என்று யூதாவின் பட்டணங்களுக்குச் சொல்.
ஏசாயா 40 : 10 (OCVTA)
இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்; அவருடைய புயமே அவருக்காக ஆளுகை செய்யும். அவர் அளிக்கும் வெகுமதியும் அவருடன் இருக்கிறது, அவர் தரும் பிரதிபலனும் அவருடனே வருகிறது.
ஏசாயா 40 : 11 (OCVTA)
அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்: அவர் செம்மறியாட்டுக் குட்டிகளை ஒன்றுசேர்த்து கைகளில் ஏந்தி, மார்போடு அணைத்துக்கொண்டு செல்கிறார்; அவர் குட்டிகளுடன் இருக்கும் செம்மறியாடுகளைக் கனிவாக நடத்துகிறார்.
ஏசாயா 40 : 12 (OCVTA)
கடல் நீரைத் தமது உள்ளங்கையால் அளந்து, வானங்களை சாண் அளவாய்க் கணித்தவர் யார்? பூமியின் புழுதியை மரக்காலால் அளந்தவன் யார்? அல்லது மலைகளை நிறைகோலாலும், குன்றுகளையும் தராசாலும் நிறுத்தவர் யார்?
ஏசாயா 40 : 13 (OCVTA)
யெகோவாவின் மனதை புரிந்துகொண்டு, அவரது ஆலோசகனாக இருந்து அவருக்கு அறிவுறுத்தியவன் யார்?
ஏசாயா 40 : 14 (OCVTA)
யெகோவா தமது அறிவு தெளிவுபெற யாரிடம் ஆலோசனை கேட்டார்? சரியான வழியை அவருக்குக் போதித்தவன் யார்? அவருக்கு அறிவைக் போதித்து, விளக்கத்தின் பாதையைக் காட்டியவன் யார்?
ஏசாயா 40 : 15 (OCVTA)
உண்மையாகவே நாடுகள் வாளியிலிருந்து விழும் தண்ணீர்த் துளியைப் போலிருக்கின்றன; அவர்கள் தராசில் படிந்துள்ள தூசியைப்போல் கருதப்படுகிறார்கள்; அவர் தீவுகளை தூசியைப்போல நிறுக்கிறார்.
ஏசாயா 40 : 16 (OCVTA)
லெபனோன் பலிபீட நெருப்புக்குப் போதாது. அங்குள்ள மிருகங்கள் தகன பலிக்கும் போதாது.
ஏசாயா 40 : 17 (OCVTA)
எல்லா நாடுகளும் அவர் முன்னிலையில் ஒன்றுமில்லாதவர்கள்போல் இருக்கின்றனர். அவர்கள் அவரால் வெறுமையிலும் வெறுமையானவர்களாகவும், பெருமதியற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
ஏசாயா 40 : 18 (OCVTA)
இப்படியிருக்க, நீங்கள் இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்த சாயலுக்கு அவரை ஒப்பிடுவீர்கள்?
ஏசாயா 40 : 19 (OCVTA)
விக்கிரகத்தை ஒரு கைவினைஞன் வார்க்கிறான், கொல்லன் அதைத் தங்கத்தால் மூடி, அதற்காக வெள்ளி மாலைகளைச் செய்கிறான்.
ஏசாயா 40 : 20 (OCVTA)
அத்தகைய காணிக்கையைச் செலுத்தமுடியாத ஏழையோ, உழுத்துப்போகாத மரத்தைத் தெரிவு செய்கிறான். அதைச் செதுக்கி, சரிந்து வீழ்ந்து போகாத விக்கிரகத்தைச் செய்யும்படி திறமைவாய்ந்த ஒரு சிற்பியைத் தேடுகிறான்.
ஏசாயா 40 : 21 (OCVTA)
நீங்கள் அறியவில்லையோ? நீங்கள் கேள்விப்படவில்லையோ? ஆதியில் இருந்து உங்களுக்குச் சொல்லப்படவில்லையோ? பூமி படைக்கப்பட்ட காலத்திலிருந்தே நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையோ?
ஏசாயா 40 : 22 (OCVTA)
அவர் பூமியின் வட்டத்தின்மேல் தன் அரியணையில் வீற்றிருக்கிறார், அதன் மக்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். அவர் வானங்களை மூடுதிரையைப்போல் விரித்து, அவைகளை ஒரு குடியிருக்கும் கூடாரத்தைப்போல் அமைத்திருக்கிறார்.
ஏசாயா 40 : 23 (OCVTA)
அவர் இளவரசர்களைத் தாழ்வு நிலைக்குத் தள்ளுகிறார்; உலக ஆளுநர்களையும் பெறுமதியற்றவர்களாக்குகிறார்.
ஏசாயா 40 : 24 (OCVTA)
அவர்கள் நாட்டப்பட்ட உடனேயே, அவர்கள் விதைக்கப்பட்ட உடனேயே, அவர்கள் நிலத்தில் வேரூன்றிய உடனேயே இறைவன் அவர்கள்மேல் ஊத, அவர்கள் வாடிப்போகிறார்கள். சுழல் காற்றும் பதர்களைப்போல் அவர்களை வாரிக்கொண்டுபோகிறது.
ஏசாயா 40 : 25 (OCVTA)
“நீங்கள் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? அல்லது எனக்கு நிகரானவர் யார்?” என்று பரிசுத்தர் கேட்கிறார்.
ஏசாயா 40 : 26 (OCVTA)
கண்களை உயர்த்தி மேலே நோக்குங்கள்: இவைகளையெல்லாம் படைத்தவர் யார்? நட்சத்திர சேனையை ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து, அவை ஒவ்வொன்றையும் பேரிட்டு அழைக்கும் அவரே. அவருடைய மிக வல்லமையாலும், மகா பலத்தினாலும் அவைகளில் ஒன்றுகூட தவறுவதில்லை.
ஏசாயா 40 : 27 (OCVTA)
“என் நிலைமை யெகோவாவுக்கு மறைவாயிருக்கிறது; இறைவன் எனக்குரிய நீதியைக் கண்டும் காணாதிருக்கிறார்” என்று யாக்கோபே நீ ஏன் சொல்கிறாய்? இஸ்ரயேலே, ஏன் முறையிடுகிறாய்?
ஏசாயா 40 : 28 (OCVTA)
நீங்கள் அறியவில்லையோ? நீங்கள் கேள்விப்படவில்லையோ? யெகோவாவே நித்திய இறைவன், பூமியின் எல்லைகளைப் படைத்தவரும் அவரே. அவர் களைத்துப் போவதுமில்லை, சோர்ந்துபோவதுமில்லை. அவரின் ஞானத்தை யாராலும் அளவிடமுடியாது.
ஏசாயா 40 : 29 (OCVTA)
அவர் களைப்புற்றோருக்கு பெலன் கொடுக்கிறார்; பெலவீனருக்கு வலிமையைக் கூட்டுகிறார்.
ஏசாயா 40 : 30 (OCVTA)
இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள், வாலிபர் இடறி விழுவார்கள்.
ஏசாயா 40 : 31 (OCVTA)
ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர் தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்; அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்; அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31