ஏசாயா 36 : 1 (OCVTA)
{எருசலேம் அச்சுறுத்தப்படுதல்} [PS] எசேக்கியா அரசனின் ஆட்சியின் பதினான்காம் வருடத்திலே, அசீரியா அரசன் சனகெரிப், யூதாவின் அரண்செய்யப்பட்ட பட்டணங்களையெல்லாம் தாக்கிக் கைப்பற்றினான்.
ஏசாயா 36 : 2 (OCVTA)
பின் அசீரிய அரசன் ரப்சாக்கே என்னும் தனது படைத்தளபதியை பெரிய இராணுவத்துடன் லாகீசிலிருந்து, எருசலேமுக்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். படைத்தளபதி, வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலண்டையில் போய் நின்றான்.
ஏசாயா 36 : 3 (OCVTA)
அப்பொழுது இல்க்கியாவின் மகனான அரண்மனை நிர்வாகி எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாபின் மகன் யோவாக்கும் அவனிடத்திற்குப் போனார்கள். [PE][PS]
ஏசாயா 36 : 4 (OCVTA)
படைத்தளபதி ரப்சாக்கே அவர்களிடம், “நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘பேரரசனாகிய அசீரியா அரசன் சொல்வது இதுவே, நீ உனது நம்பிக்கையை எந்த அடிப்படையில் இவ்வளவு உறுதியாக வைத்திருக்கிறாய்?
ஏசாயா 36 : 5 (OCVTA)
உன்னிடம் போர் தந்திரமும், இராணுவ பெலனும் இருக்கிறதென்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால் அதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். நீ என்னை எதிர்த்துக் கலகம் செய்ய யாரைச் சார்ந்திருக்கிறாய்?
ஏசாயா 36 : 6 (OCVTA)
இதோ, முறிக்கப்பட்ட நாணல் தண்டாகிய எகிப்தையா நீ நம்பியிருக்கிறாய்? அந்த நாணலில் சாய்ந்துகொள்கிற எவனுடைய கையையும் அது உருவக்குத்தி அவனைக் காயப்படுத்தும். எகிப்திய அரசனான பார்வோன் தன்னை நம்பியிருக்கிற யாவருக்கும் அப்படியே இருக்கிறான்.
ஏசாயா 36 : 7 (OCVTA)
அல்லது நீ என்னிடத்தில், “எங்கள் இறைவனாகிய யெகோவாவையே நம்பியிருக்கிறோம்” என்பாயாகில், “இந்தப் பலிபீடத்தில் மட்டும்தான் வழிபடவேண்டும்” என்று, யூதாவுக்கும் எருசலேமில் உள்ளவர்களுக்கும் சொல்லி, எசேக்கியாவே அவருடைய வழிபாட்டு மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான் அல்லவா?
ஏசாயா 36 : 8 (OCVTA)
“ ‘எனவே வாரும், அசீரிய அரசனாகிய எனது தலைவனுடன் பேரம் ஒன்று பேசுவோம்: சவாரி பண்ணத்தக்க வீரர்களை உன்னால் தேடிக்கொள்ள முடியுமானால், நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன்.
ஏசாயா 36 : 9 (OCVTA)
தேர்களுக்காவும், குதிரைவீரர்களுக்காகவும் எகிப்தை நம்பியிருந்தாலுங்கூட, எனது தலைவனுடைய சிறிய அதிகாரிகளில் ஒருவனையேனும் எதிர்த்துத் துரத்த உங்களால் எப்படி முடியும்?
ஏசாயா 36 : 10 (OCVTA)
மேலும் யெகோவா இல்லாமலா நான் இந்த நாட்டைத் தாக்கவும், அழிக்கவும் வந்தேன்? யெகோவா தாமே இந்த நாட்டுக்கு எதிராக அணிவகுத்துச்சென்று இதை அழிக்கும்படி என்னிடம் கூறினார்’ ” என்றான். [PE][PS]
ஏசாயா 36 : 11 (OCVTA)
பின்பு எலியாக்கீமும், செப்னாவும், யோவாக்கும், அசீரிய படைத்தளபதியிடம், “உமது அடியாரிடம் அராமிய மொழியில் பேசும்; அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் உள்ளவர்களுக்குக் கேட்கும்படி எபிரெய மொழியில் பேசவேண்டாம்” என்றார்கள். [PE][PS]
ஏசாயா 36 : 12 (OCVTA)
ஆனால் அந்தப் படைத்தளபதியோ, “மதில்மேல் அமர்ந்திருப்பவர்களுக்கு அல்லாமல், உங்கள் தலைவருக்கும், உங்களுக்கும் மட்டுமா இவற்றைச் சொல்லும்படி எங்கள் தலைவர் என்னை அனுப்பியிருக்கிறார்? அவர்களும் உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடிக்கப் போகிறவர்களல்லவா” என்று பதிலளித்தான். [PE][PS]
ஏசாயா 36 : 13 (OCVTA)
பின்பு தளபதி எழுந்து நின்று, எபிரெய மொழியில் உரத்த சத்தமாய், “பேரரசனான அசீரிய அரசனின் வார்த்தையைக் கேளுங்கள்.
ஏசாயா 36 : 14 (OCVTA)
அரசன் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அவனால் உங்களைக் காப்பாற்ற முடியாது!
ஏசாயா 36 : 15 (OCVTA)
எசேக்கியா உங்களிடம், ‘யெகோவா நிச்சயமாக நம்மை விடுவிப்பார், இந்தப் பட்டணமும் அசீரிய அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட மாட்டாது’ என்று சொல்லி, அவன் உங்களை யெகோவாவிடம் நம்பிக்கை வைக்கும்படி இணங்கவைக்க முயற்சிப்பான். அதற்கு நீங்கள் இடங்கொடுக்க வேண்டாம். [PE][PS]
ஏசாயா 36 : 16 (OCVTA)
“எசேக்கியாவின் சொல்லைக் கேளாதீர்கள். அசீரிய அரசன் கூறுவது இதுவே: என்னுடன் சமாதானம்பண்ணி என்னிடம் வாருங்கள். அப்போது நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் திராட்சைக் கொடியிலிருந்தும், தன்தன் அத்திமரத்திலிருந்தும் கனியை சாப்பிட்டு, தன் சொந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரையும் குடிப்பான்.
ஏசாயா 36 : 17 (OCVTA)
நான் வந்து உங்களை, உங்களது நாட்டைப்போல தானியமும், புதுத் திராட்சை இரசமும், அப்பமும், திராட்சைத் தோட்டங்களும் நிறைந்த நாட்டிற்குக் கூட்டிச்செல்லும்வரை இவ்வாறு செய்வீர்கள். [PE][PS]
ஏசாயா 36 : 18 (OCVTA)
“எசேக்கியா, ‘யெகோவா எங்களை மீட்பார்’ என்று கூறி உங்களைத் தவறான வழியில் நடத்த விடாதீர்கள். எந்த நாட்டின் தெய்வமாவது, எப்பொழுதாவது அவர்கள் நாட்டை அசீரிய அரசனின் கையிலிருந்து மீட்டதுண்டோ?
ஏசாயா 36 : 19 (OCVTA)
ஆமாத், அர்பாத்தின் தெய்வங்கள் எங்கே? செப்பர்வாயிமின் தெய்வங்கள் எங்கே? அவை எனது கரத்திலிருந்து சமாரியாவை விடுவித்தனவோ?
ஏசாயா 36 : 20 (OCVTA)
இந்த நாடுகளின் தெய்வங்கள் எல்லாவற்றிலும், எந்தத் தெய்வத்தினால் எனது கரத்திலிருந்து தனது நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது? அப்படியிருக்க எனது கையிலிருந்து எருசலேமை யெகோவா எப்படி விடுவிப்பார்?” என்றான். [PE][PS]
ஏசாயா 36 : 21 (OCVTA)
ஆனால் மக்களோ விடை ஒன்றும் கூறாமல், மவுனமாய் இருந்தார்கள். ஏனெனில், “அவனுக்குப் பதில் கூறவேண்டாம்” என அரசன் கட்டளையிட்டிருந்தான். [PE][PS]
ஏசாயா 36 : 22 (OCVTA)
பின்பு அரண்மனை அதிகாரியான இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செயலாளராகிய செப்னாவும், பதிவாளனாகிய ஆசாப்பின் மகன் யோவாக்கும் உடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவிடம் போய் அசீரிய படைத்தளபதி கூறியவற்றைச் சொன்னார்கள். [PE]
❮
❯