ஏசாயா 30 : 1 (OCVTA)
எகிப்துடன் பயனற்ற ஒப்பந்தம் “பிடிவாதமுள்ள என் பிள்ளைகளுக்கு ஐயோ கேடு!” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஏனெனில் அவர்கள் என்னுடையதல்லாத திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். என் ஆவியானவரினாலன்றி உடன்படிக்கை செய்து, பாவத்திற்குமேல் பாவத்தைக் குவிக்கிறார்கள்.
ஏசாயா 30 : 2 (OCVTA)
என்னிடம் அறிவுரை கேளாமல் எகிப்திற்குப் போகிறார்கள். அவர்கள் பார்வோனின் பாதுகாப்பின்கீழ் உதவிகோரி, எகிப்தின் நிழலில் அடைக்கலம் தேடுகிறார்கள்.
ஏசாயா 30 : 3 (OCVTA)
ஆனால் பார்வோனின் பாதுகாவல் உங்களுக்கு வெட்கமாகும்; எகிப்தின் நிழல் உங்களுக்கு அவமானத்தைக் கொண்டுவரும்.
ஏசாயா 30 : 4 (OCVTA)
சோவானில் அவர்களுக்கு தலைவர்கள் இருந்தாலும், அவர்களுடைய பிரதிநிதிகள் ஆனேஸ்மட்டும் வந்து சேர்ந்தாலும்,
ஏசாயா 30 : 5 (OCVTA)
அவர்களுக்குப் பயனற்ற நாடான எகிப்தின் நிமித்தம் ஒவ்வொருவரும் வெட்கத்திற்குட்படுவார்கள். அவர்களால் யாதொரு உதவியோ, நன்மையோ கிடைப்பதில்லை; வெட்கமும் அவமானமுமே கிடைக்கும்.”
ஏசாயா 30 : 6 (OCVTA)
* நெகேவ் என்பது இஸ்ரயேலின் தெற்கு பகுதி நெகேவ் பாலைவனத்தின் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு: பெண் சிங்கங்களும், ஆண்சிங்கங்களும், விரியன் பாம்பும், பறக்கும் பாம்பும் இருக்கின்ற, துன்பமும் வேதனையுமுள்ள நாட்டின் வழியாகத் தூதுவர் போகிறார்கள். அவர்கள் தமது செல்வங்களைக் கழுதைகள்மேலும், திரவியங்களை ஒட்டகங்கள்மேலும் ஏற்றிக்கொண்டு, பயனற்ற நாட்டவரிடம் போகிறார்கள்.
ஏசாயா 30 : 7 (OCVTA)
எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது. ஆதலால் நான் எகிப்தை, ஆற்றலிழந்த ராகாப் என்று அழைக்கிறேன்.
ஏசாயா 30 : 8 (OCVTA)
இப்பொழுது நீ போய், அவர்களுக்காக அதை ஒரு பலகையில் எழுதி, ஒரு சுருளில் குறித்துவை; எதிர்காலத்தில் அது ஒரு நித்திய சாட்சியாய் இருக்கும்.
ஏசாயா 30 : 9 (OCVTA)
இவர்கள் கலகம் செய்யும் மக்கள், வஞ்சகம் நிறைந்த பிள்ளைகள்; யெகோவாவின் வேதத்தைக் கேட்க விருப்பமற்ற பிள்ளைகள்.
ஏசாயா 30 : 10 (OCVTA)
இவர்கள் தரிசனம் காண்போரிடம், “இனி தரிசனம் காணாதீர்கள்!” என்கிறார்கள். இறைவாக்கு உரைப்போரிடம், “எங்களுக்கு இனிமேல் யதார்த்தமாய் தரிசனங்களைச் சொல்லவேண்டாம்! இன்பமானவற்றை எங்களுக்குக் கூறி, போலியானவற்றை இறைவாக்காய் உரையுங்கள்.
ஏசாயா 30 : 11 (OCVTA)
எங்கள் வழியை விட்டுவிடுங்கள்; எங்கள் பாதையைவிட்டு விலகுங்கள்; இஸ்ரயேலின் பரிசுத்தரைப் பற்றி எங்கள் முன்பாக பேசுவதை நிறுத்துங்கள்!” என்றும் சொல்கிறார்கள்.
ஏசாயா 30 : 12 (OCVTA)
ஆகையால் இஸ்ரயேலின் பரிசுத்தர் சொல்வது இதுவே: “நீங்கள் இந்தச் செய்தியை நிராகரித்தீர்கள்; ஒடுக்குகிறதில் நம்பிக்கை வைத்து, வஞ்சகத்தை சார்ந்திருக்கிறீர்கள்.
ஏசாயா 30 : 13 (OCVTA)
ஆனால் உயர்ந்த மதிலில் இருக்கும் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, திடீரென ஒரு நொடியில் சரிந்து விழுவதுபோல, இந்தப் பாவம் உங்களையும் வீழ்த்தும்.
ஏசாயா 30 : 14 (OCVTA)
நீங்கள் மண்பாத்திரம்போல் துண்டுகளாக உடைந்து போவீர்கள். அடுப்பிலிருந்து நெருப்புத்தணல் எடுக்கவோ, அல்லது தொட்டியிலிருந்து தண்ணீர் எடுக்கவோ, அந்தப் பாத்திரத்தின் ஒரு துண்டுகூட மீதியாய் இல்லாதிருப்பதுபோல, நீங்களும் இரக்கமில்லாத முறையில் நொறுக்கப்பட்டுப் போவீர்கள்.”
ஏசாயா 30 : 15 (OCVTA)
இஸ்ரயேலின் பரிசுத்தரும் ஆண்டவருமாகிய யெகோவா சொல்வது இதுவே: “மனந்திரும்பி, என்னில் அமர்ந்திருந்தால் உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகும்; அமைதியிலும் நம்பிக்கையிலுமே உங்களுக்கு பெலன் உண்டாகும், ஆனால் நீங்கள் அதில் ஒன்றையுமே ஏற்க விரும்பவில்லை.
ஏசாயா 30 : 16 (OCVTA)
நீங்களோ, ‘இல்லை, நாங்கள் குதிரைகளில் தப்பி ஓடுவோம்’ என்றீர்கள். ஆகையால் நீங்கள் தப்பி ஒடவே நேரிடும். ‘வேகமான குதிரைகளில் ஏறிச்செல்வோம்’ என்றீர்கள்; ஆகையால், உங்களைத் துரத்திப் பிடிப்பவர்களும் வேகமாகவே வருவார்கள்.
ஏசாயா 30 : 17 (OCVTA)
ஒருவனது பயமுறுத்தலுக்கு ஆயிரம்பேர் பயந்து ஓடுவார்கள்; ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் எல்லோரும் பயந்து ஓடுவீர்கள். மலை உச்சியில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் போலவும், குன்றில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிபோலவும் சிலர் மட்டுமே மிஞ்சியிருப்பீர்கள்.”
ஏசாயா 30 : 18 (OCVTA)
அப்படியிருந்தும், யெகோவா உங்கள்மேல் கிருபை காட்ட ஆவலாய் இருக்கிறார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவதற்கு எழும்புகிறார். ஏனெனில், யெகோவா நீதியுள்ள இறைவன். அவருக்காக காத்திருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
ஏசாயா 30 : 19 (OCVTA)
எருசலேமில் வாழும் சீயோன் மக்களே, இனிமேல் நீங்கள் அழமாட்டீர்கள்; நீங்கள் உதவிக்காகக் கூப்பிடும்போது, அவர் எவ்வளவு கிருபையுள்ளவராயிருப்பார்! அவர் அதைக் கேட்டவுடனேயே உங்களுக்குப் பதிலளிப்பார்.
ஏசாயா 30 : 20 (OCVTA)
யெகோவா உங்களுக்கு துன்பத்தின் அப்பத்தையும், இடுக்கணின் தண்ணீரையும் கொடுத்தாலும், உங்கள் போதகர்கள் இனி ஒருபோதும் மறைவாயிருக்கமாட்டார்கள். உங்கள் சொந்தக் கண்ணாலேயே நீங்கள் அவர்களைக் காண்பீர்கள்.
ஏசாயா 30 : 21 (OCVTA)
நீங்கள் வழிதவறி இடதுபுறமோ, வலதுபுறமோ திரும்பினாலும், “இதுதான் வழி, இதிலே நடவுங்கள்” என்று உங்கள் பின்னால் சொல்லும் ஒரு குரலை உங்கள் காதுகள் கேட்கும்.
ஏசாயா 30 : 22 (OCVTA)
அப்போது நீங்கள் வெள்ளித் தகட்டால் மூடிய சிலைகளையும், தங்கத்தகட்டால் மூடிய உருவச்சிலைகளையும் புறக்கணித்து விடுவீர்கள். அவைகளை தீட்டுத் துணிபோல எறிந்துவிட்டு, “தொலைந்து போங்கள்!” என்பீர்கள்.
ஏசாயா 30 : 23 (OCVTA)
யெகோவா, நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைகளுக்காக உங்களுக்கு மழையையும் பெய்யப்பண்ணுவார். விளைச்சலில் வரும் உணவு, சிறந்ததாயும் அதிகமாயும் இருக்கும்; அந்த நாளிலே உங்கள் மந்தைகள் பரந்த புற்தரையில் மேயும்.
ஏசாயா 30 : 24 (OCVTA)
நிலத்தை உழுகிற எருதும் கழுதையும் முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட சுவையுள்ள தீனியைத் தின்னும்.
ஏசாயா 30 : 25 (OCVTA)
பெருங்கொலை நடக்கும் அந்த நாளிலே கோபுரங்கள் இடிந்துவிழும்; ஒவ்வொரு உயர்ந்த மலையிலும், ஒவ்வொரு உயரமான குன்றிலும் இருந்து நீரோடைகள் ஓடும்.
ஏசாயா 30 : 26 (OCVTA)
யெகோவா தமது மக்களுக்கு தாம் ஏற்படுத்திய காயங்களைக் கட்டும்போதும், அவர்களைக் குணமாக்கும்போதும், சந்திரன் சூரியனைப்போல் பிரகாசிக்கும். சூரிய வெளிச்சம் ஏழு மடங்காகப் பிரகாசிக்கும். அது ஏழு முழு நாட்களின் வெளிச்சம் ஒன்றுதிரண்டாற்போல் இருக்கும்.
ஏசாயா 30 : 27 (OCVTA)
இதோ, யெகோவாவின் பெயர் வெகுதூரத்திலிருந்து வருகிறது; அது எரியும் கோபத்துடனும், அடர்ந்த புகை மேகங்களுடனும் வருகிறது; அவருடைய உதடுகள் கடுங்கோபத்தால் நிறைந்திருக்கின்றன, அவருடைய நாவு எரிக்கும் நெருப்பு.
ஏசாயா 30 : 28 (OCVTA)
கழுத்துவரை உயர்ந்து, புரண்டோடும் வெள்ளம்போல அவருடைய மூச்சு இருக்கிறது. அவர் நாடுகளை அழிவென்னும் சல்லடையில் சலித்தெடுக்கிறார்; மக்கள் கூட்டங்களின் தாடைகளில் கடிவாளத்தை வைக்கிறார். அது அவர்களை வழிதவறப்பண்ணும்.
ஏசாயா 30 : 29 (OCVTA)
இரவில் ஒரு பரிசுத்த விழாவைக் கொண்டாடுவதுபோல, நீங்கள் பாடுவீர்கள். இஸ்ரயேலின் கற்பாறையாகிய யெகோவாவின் மலைக்கு மக்கள் புல்லாங்குழலுடன் போவதுபோல, உங்கள் உள்ளமும் மகிழும்.
ஏசாயா 30 : 30 (OCVTA)
யெகோவா தமது மாட்சிமையான குரலை மனிதர் கேட்கும்படி செய்வார்; அத்துடன் அவர் தம்முடைய கரம் கீழ்நோக்கி வருவதை அவர்கள் காணும்படி செய்வார். அது கடுங்கோபத்துடனும், சுட்டெரிக்கும் நெருப்புடனும், திடீர் மழையுடனும், இடி முழக்கத்துடனும், கல்மழையுடனும் வரும்.
ஏசாயா 30 : 31 (OCVTA)
யெகோவாவின் குரல் அசீரியாவைச் சிதறப்பண்ணும்; அவர் தமது செங்கோலால் அவர்களை அடித்து வீழ்த்துவார்.
ஏசாயா 30 : 32 (OCVTA)
யெகோவா யுத்த களத்திலே, தம் கரத்தால் அவர்களை அடித்து யுத்தம் செய்யும்போது, அவர்கள்மேல் தனது தண்டனைக் கோலால் அடிக்கும் ஒவ்வொரு அடியும், தம்புராவினதும் யாழினதும் இசைக்கேற்ப இருக்கும்.
ஏசாயா 30 : 33 (OCVTA)
தோபேத் வெகுகாலமாகவே ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது; அது அரசனுக்காகத் தயாராயிருக்கிறது. அதன் நெருப்புக்குழி ஆழமாகவும், அகலமாகவும் செய்யப்பட்டு, அதிலே ஏராளமான விறகும் நெருப்பும் இருக்கின்றன. யெகோவாவின் மூச்சு கந்தகச் சுவாலைப்போல் வந்து அதைப் பற்றியெரியச் செய்யும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33