ஏசாயா 3 : 1 (OCVTA)
யூதா, எருசலேம் நியாயத்தீர்ப்பு இப்பொழுது பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும் எல்லா ஆதரவையும் உதவியையும் நிறுத்தப் போகிறார்: உணவு வழங்குவதையும், தண்ணீர் வழங்குவதையும் நிறுத்தப் போகிறார்.
ஏசாயா 3 : 2 (OCVTA)
மாவீரனையும், போர்வீரனையும், நீதிபதியையும், இறைவாக்கினனையும், குறிசொல்பவனையும், சபைத்தலைவனையும்,
ஏசாயா 3 : 3 (OCVTA)
ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும், தொழிலில் சாமர்த்தியமுள்ளவனையும், மாயவித்தையில் கெட்டிக்காரனையும் அகற்றப்போகிறார்.
ஏசாயா 3 : 4 (OCVTA)
“நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்; விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆட்சிசெய்வார்கள்.”
ஏசாயா 3 : 5 (OCVTA)
மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்: ஒருவருக்கொருவரும், அயலானுக்கு விரோதமாக அயலானும், இளையோர் முதியோருக்கு விரோதமாகவும், கீழோர் மேலோருக்கு விரோதமாகவும் எழும்புவார்கள்.
ஏசாயா 3 : 6 (OCVTA)
ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து, “உன்னிடம் மேலுடை இருக்கிறது; நீயே எங்களுக்குத் தலைவனாயிரு. பாழடைந்த இவ்விடத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும்” என்று சொல்வான்.
ஏசாயா 3 : 7 (OCVTA)
ஆனால் அவனோ அந்நாளில், “என் வீட்டில் உணவோ, உடையோ கிடையாது; இதற்கு எந்தவிதத் தீர்வும் என்னிடம் இல்லை. என்னை மக்களுக்குத் தலைவனாக்காதே” என்று மறுத்துவிடுவான்.
ஏசாயா 3 : 8 (OCVTA)
எருசலேம் நகரம் தள்ளாடுகிறது, யூதா நாடு வீழ்ச்சியடைகிறது; அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது, அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள்.
ஏசாயா 3 : 9 (OCVTA)
அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது; சோதோம் நகரத்தைப்போல தங்கள் பாவங்களைப் பறைசாற்றுகிறார்கள். அவைகளை மறைத்து வைக்கவில்லை. ஐயோ! அவர்களுக்குக் கேடு; அவர்கள் தங்களுக்குத் தாங்களே பேராபத்தை வருவித்துக் கொண்டார்கள்.
ஏசாயா 3 : 10 (OCVTA)
நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்; ஏனெனில் அவர்கள், தமது செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.
ஏசாயா 3 : 11 (OCVTA)
கொடியவர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்களின் கைகளின் செயல்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்குச் செய்யப்படும்.
ஏசாயா 3 : 12 (OCVTA)
வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள், பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். எனது மக்களே, உங்கள் வழிகாட்டிகள் உங்களைத் தவறான வழியில் நடத்துகிறார்கள்; அவர்கள் உங்களை வழிவிலகிப்போகச் செய்கிறார்கள்.
ஏசாயா 3 : 13 (OCVTA)
யெகோவா வழக்காட ஆயத்தமாகி, மக்களை நியாயந்தீர்க்க எழுந்து நிற்கிறார்.
ஏசாயா 3 : 14 (OCVTA)
யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும் விரோதமாய் நியாயத்தீர்ப்பு செய்கிறார். “என் திராட்சைத் தோட்டத்தைப் பாழாக்கியவர்கள் நீங்களே; எளியவர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்கள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.
ஏசாயா 3 : 15 (OCVTA)
நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன? ஏழைகளின் முகத்தை உருக்குலைப்பதின் பொருள் என்ன?” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
ஏசாயா 3 : 16 (OCVTA)
மேலும் யெகோவா சொன்னதாவது: “சீயோனின் பெண்களோ கர்வம் கொண்டிருக்கிறார்கள்; தங்கள் கழுத்தை வளைக்காது அகங்காரமாய் நடக்கிறார்கள், அவர்கள் தங்கள் கண்களினால் மருட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்க ஒய்யாரமாய் நடந்து திரிகிறார்கள்.
ஏசாயா 3 : 17 (OCVTA)
ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்; அவர்களின் தலைகளை யெகோவா வழுக்கையாக்குவார்.”
ஏசாயா 3 : 18 (OCVTA)
அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள்,
ஏசாயா 3 : 19 (OCVTA)
காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள்
ஏசாயா 3 : 20 (OCVTA)
தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள்,
ஏசாயா 3 : 21 (OCVTA)
மோதிரங்கள், மூக்குத்திகள்;
ஏசாயா 3 : 22 (OCVTA)
உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள்,
ஏசாயா 3 : 23 (OCVTA)
கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார்.
ஏசாயா 3 : 24 (OCVTA)
அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்; ஒட்டியாணம் இருக்கும் இடத்தில் கயிறு கட்டப்படும். அழகாய் முடிக்கப்பட்ட கூந்தல் இல்லாதுபோய், அது வழுக்கைத் தலையாய் இருக்கும்; அலங்கார உடைக்குப் பதிலாக அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொள்வார்கள்; அழகுக்குப் பதிலாக அடிமைகளின் நெருப்புச்சூட்டுத் தழும்பு அவர்களுக்கு இருக்கும்.
ஏசாயா 3 : 25 (OCVTA)
உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்; உங்களின் இராணுவவீரர் போர்க்களத்தில் சாவார்கள்.
ஏசாயா 3 : 26 (OCVTA)
சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்; அவள் ஆதரவற்றவளாகத் தரையில் உட்காருவாள் என்கிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26