ஏசாயா 24 : 1 (OCVTA)
பூமியின் அழிவு இதோ, யெகோவா பூமியை அழித்து சீர்குலைக்கப்போகிறார். அதன் மேற்பரப்பைப் பாழாக்கி, குடிகளைச் சிதறடிப்பார்.
ஏசாயா 24 : 2 (OCVTA)
மக்களைப்போலவே ஆசாரியனுக்கும், வேலைக்காரனைப் போலவே தலைவனுக்கும், வேலைக்காரியைப் போலவே தலைவிக்கும், வாங்குபவனைப் போலவே விற்பவனுக்கும், இரவல் வாங்குபவனைப் போலவே இரவல் கொடுப்பவனுக்கும், கடனாளியைப்போலவே கடன் கொடுப்பவனுக்குமாக எல்லோருக்கும் ஒரேவிதமாகவே நடக்கும்.
ஏசாயா 24 : 3 (OCVTA)
பூமி முழுவதும் அழிக்கப்பட்டு முழுமையாகக் கொள்ளையடிக்கப்படும். யெகோவாவே இந்த வார்த்தையைப் பேசியிருக்கிறார்.
ஏசாயா 24 : 4 (OCVTA)
பூமி வறண்டு வாடுகிறது, உலகம் நலிந்து வாடுகிறது; பூமியில் உயர்த்தப்பட்டவர்கள் தளர்ந்து போகிறார்கள்.
ஏசாயா 24 : 5 (OCVTA)
பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அதன் ஒழுங்குவிதிகளைச் சீர்குலைத்து, நித்திய உடன்படிக்கையையும் மீறினார்கள்.
ஏசாயா 24 : 6 (OCVTA)
ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது. பூமியின் மக்களே தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். ஆதலால் பூமியின் குடிகள் எரிக்கப்பட்டுப் போனார்கள். மிகச் சிலரே மீந்திருக்கிறார்கள்.
ஏசாயா 24 : 7 (OCVTA)
புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது; மகிழ்ச்சியாயிருக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.
ஏசாயா 24 : 8 (OCVTA)
மேளத்தின் ஆனந்த ஒலி ஓய்ந்தது, களிகூர்ந்தவர்களின் சத்தமும் நின்றுவிட்டது; யாழின் இன்னிசை அடங்கிற்று.
ஏசாயா 24 : 9 (OCVTA)
இனிமேல் அவர்கள் திராட்சை இரசத்தைப் பாட்டுடன் குடிப்பதில்லை, மதுபானம் அதைக் குடிப்பவருக்குக் கசப்பாய் இருக்கும்.
ஏசாயா 24 : 10 (OCVTA)
அழிக்கப்பட்ட பட்டணம் பாழாய்க் கிடக்கிறது; வீடுகளின் நுழைவாசல்கள் ஒவ்வொன்றும் அடைபட்டுக் கிடக்கும்.
ஏசாயா 24 : 11 (OCVTA)
அவர்கள் வீதிகளில் திராட்சை இரசத்திற்காக அழுகிறார்கள்; இன்பமெல்லாம் துன்பமாக மாறுகின்றன; சந்தோஷம் அனைத்தும் பூமியினின்று அகற்றப்படுகின்றன.
ஏசாயா 24 : 12 (OCVTA)
பட்டணம் பாழாக விடப்பட்டிருக்கிறது, அதன் வாசல் கதவுகள் துண்டுகளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன.
ஏசாயா 24 : 13 (OCVTA)
அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு, பழம் பறித்தபின் சில பழங்கள் மீந்திருப்பது போலவும், திராட்சை அறுவடையின்பின் கிளைகளில் சில பழங்கள் மீந்திருப்பது போலுமே பூமியின்மேலும், நாடுகளின் இடையேயும் மீந்திருப்போர் மட்டுமே விடப்பட்டிருப்பர்.
ஏசாயா 24 : 14 (OCVTA)
அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி, மகிழ்ச்சியுடன் சத்தமிடுகிறார்கள்; அவர்கள் மேற்கிலிருந்து யெகோவாவின் மாட்சிமையைப் பாராட்டுகிறார்கள்.
ஏசாயா 24 : 15 (OCVTA)
ஆகவே கிழக்கிலே யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; கடலின் தீவுகளில் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து உயர்த்துங்கள்.
ஏசாயா 24 : 16 (OCVTA)
“நீதியுள்ளவருக்கே மகிமை” என்று பாடுவதை பூமியின் கடைசிகளிலிருந்து நாம் கேட்கிறோம். ஆனால் நானோ, “நான் அழிகிறேன், நான் அழிகிறேன் ஐயோ எனக்குக் கேடு! துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்! துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்” என்றேன்.
ஏசாயா 24 : 17 (OCVTA)
பூமியின் குடிகளே, பயங்கரமும், படுகுழியும், கண்ணியுமே உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
ஏசாயா 24 : 18 (OCVTA)
பயங்கரத்தின் சத்தம் கேட்டு ஓடுபவன் படுகுழிக்குள் விழுவான். குழியிலிருந்து வெளியேறுபவன் கண்ணியில் அகப்படுவான். வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டிருக்கின்றன, பூமியின் அஸ்திபாரங்கள் அசைகின்றன.
ஏசாயா 24 : 19 (OCVTA)
பூமி உடைந்து போயிருக்கிறது, பூமி பிளக்கப்பட்டுப் போயிருக்கிறது, பூமி அதிர்ந்து நடுங்குகிறது.
ஏசாயா 24 : 20 (OCVTA)
பூமி போதை கொண்டவன்போல் தள்ளாடுகிறது, அது காற்றில் அடிபடும் கூடாரத்தைப்போல் அசைகிறது; மீறுதலின் பாவம் அதன்மேல் அவ்வளவாய் இருப்பதால், ஒருபோதும் திரும்ப எழும்பாது விழுகிறது.
ஏசாயா 24 : 21 (OCVTA)
அந்த நாளிலே, மேலே வானத்தில் இருக்கும் வல்லமைகளையும், கீழே பூமியில் இருக்கும் அரசர்களையும் யெகோவா தண்டிப்பார்.
ஏசாயா 24 : 22 (OCVTA)
இருண்ட அறைக்குள் கட்டப்பட்டுள்ள கைதிகளைப்போல், அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அநேக நாட்களுக்குப்பின் தண்டிக்கப்படுவார்கள்.
ஏசாயா 24 : 23 (OCVTA)
சந்திரன் நாணமடையும், சூரியன் வெட்கமடையும்; ஏனெனில், சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் அதன் முதியோர் முன்னிலையில் மகிமையோடு ஆளுகை செய்வார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23