ஏசாயா 23 : 1 (OCVTA)
தீருவைப் பற்றிய இறைவாக்கு தீருவைப் பற்றிய ஒரு இறைவாக்கு: தர்ஷீசின் கப்பல்களே, புலம்புங்கள்! தீரு அழிந்துபோனது; அது வீடோ, துறைமுகமோ இல்லாமல் கிடக்கின்றது. சைப்பிரஸ் நாட்டிலிருந்து அவர்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.
ஏசாயா 23 : 2 (OCVTA)
தீவின் மக்களே, கப்பலோட்டிகளில் செல்வந்தரான சீதோனின் வணிகர்களே, மவுனமாயிருங்கள்.
ஏசாயா 23 : 3 (OCVTA)
சீகோரின் பெருவெள்ளத்தினால் விளையும் தானியமும், நைல் நதியின் அறுவடையுமே தீருவுக்கு வருமானமாயிருந்தது. தீரு நாடுகளின் சந்தைகூடும் இடமாகியது.
ஏசாயா 23 : 4 (OCVTA)
ஆகையால் சீதோனே, வெட்கப்படு; “நான் பிரசவ வேதனைப்படவுமில்லை, பிள்ளை பெறவுமில்லை; நான் இளைஞர்களைப் பராமரிக்கவோ, கன்னிகைகளை வளர்க்கவோ இல்லை” என்று கடல் சொல்கின்றது; கடற்கோட்டை பேசுகின்றது.
ஏசாயா 23 : 5 (OCVTA)
செய்தி எகிப்திற்கு எட்டியதும், அங்குள்ளவர்கள் தீருவிலிருந்து வந்த அந்தச் செய்தியின் நிமித்தம் வேதனைப்படுவார்கள்.
ஏசாயா 23 : 6 (OCVTA)
தீவுகளின் மக்களே, தர்ஷீசுக்குக் கடந்துசென்று அழுது புலம்புங்கள்.
ஏசாயா 23 : 7 (OCVTA)
அந்தப் பழைய பட்டணம் இதுதானா? களியாட்டத்தில் ஈடுபட்ட உங்கள் பட்டணம் இதுவா? தூர நாடுகளில் குடியிருக்கும்படி, தன் மக்களை அனுப்பிய பட்டணம் இதுவா?
ஏசாயா 23 : 8 (OCVTA)
தீருவுக்கு விரோதமாக இவ்வாறு திட்டமிட்டது யார்? அது மகுடங்களை வழங்கியதே, தீருவின் வர்த்தகர்கள் இளவரசர்களாயும், அதன் வியாபாரிகள் பூமியில் பெயர் பெற்றவர்களாயும் இருந்தனரே!
ஏசாயா 23 : 9 (OCVTA)
சேனைகளின் யெகோவாவே இதைத் திட்டமிட்டார்; எல்லாச் சிறப்பின் பெருமையையும் சிறுமைப்படுத்துவதற்கும், பூமியில் புகழ்ப்பெற்ற அனைவரையும் தாழ்த்துவதற்குமே இவ்வாறு செய்தார்.
ஏசாயா 23 : 10 (OCVTA)
தர்ஷீசின் மகளே, நைல் நதியைப்போல் உன் நாட்டின் வழியாகப் போ; ஏனெனில் இனி ஒருபோதும் உனக்குத் துறைமுகம் இருக்காது.
ஏசாயா 23 : 11 (OCVTA)
யெகோவா தனது கரத்தைக் கடலின் மேலாக நீட்டி, அதன் அரசுகளை நடுங்கச் செய்துள்ளார். கானானின் கோட்டைகளை அழிக்கும்படி அவர் கட்டளையிட்டிருக்கிறார்.
ஏசாயா 23 : 12 (OCVTA)
மேலும் அவர், “கன்னியாகிய சீதோனின் மகளே, இப்போது நசுக்கப்பட்டுக் கிடக்கிறாயே! இனி உனக்கு ஒருபோதும் களியாட்டம் இல்லை. “நீ எழுந்து சைப்பிரஸுக்குப் போ, அங்கேயும் நீ ஆறுதலைக் காணமாட்டாய்” என்றார்.
ஏசாயா 23 : 13 (OCVTA)
கல்தேயரின் நாட்டைப் பார், அதன் மக்கள் இப்பொழுது ஒரு பொருட்டாய் எண்ணப்படாதிருக்கிறார்களே! இப்பொழுது அசீரியர் அந்நாட்டைப் பாலைவனப் பிராணிகளின் இருப்பிடமாக்கி விட்டார்கள். முற்றுகைக் கோபுரங்களை எழுப்பி, அதன் கோட்டைகளை வெறுமையாக்கிப் பாழிடமாக்கி விட்டார்கள்.
ஏசாயா 23 : 14 (OCVTA)
தர்ஷீசின் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் கோட்டை அழிக்கப்பட்டது!
ஏசாயா 23 : 15 (OCVTA)
அந்த நாளிலே, தீரு எழுபது வருடங்களுக்கு மறக்கப்பட்டுவிடும்; இதுவே ஒரு அரசனின் ஆயுட்காலம். ஆனாலும் அந்த எழுபது வருடங்களின் முடிவில், தீருவின் நிலைமை வேசியின் பாடலில் உள்ளபடியே இருக்கும்:
ஏசாயா 23 : 16 (OCVTA)
“மறக்கப்பட்ட வேசியே, வீணையை எடு, பட்டணத்தைச்சுற்றி நட; உன்னை நினைவுகூரும்படியாக வீணையை நன்றாக வாசித்து, அநேக பாடல்களைப் பாடு.”
ஏசாயா 23 : 17 (OCVTA)
யெகோவா தீருவுக்கு எழுபது வருட முடிவில் தண்டனை கொடுப்பார். அவள் மறுபடியும் தனது வேசித்தன வாழ்வுக்கே திரும்புவாள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுடனும் தன் வேசித்தொழிலைச் செய்வாள்.
ஏசாயா 23 : 18 (OCVTA)
ஆயினும் அவளது இலாபமும், வருமானமும் யெகோவாவுக்கென்று ஒதுக்கி வைக்கப்படும். அவை சேமித்து வைக்கப்படவோ, பதுக்கி வைக்கப்படவோ மாட்டாது. அவளுடைய அந்த இலாபம் யெகோவாவுக்கு முன்பாக இருப்போருக்கான போதிய அளவு உணவுக்கும், சிறந்த உடைகளுக்குமே செலவிடப்படும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18