ஏசாயா 17 : 1 (OCVTA)
தமஸ்குவுக்கு எதிரான இறைவாக்கு தமஸ்கு பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு: “பாருங்கள், தமஸ்கு இனிமேல் ஒரு பட்டணமாய் இராது; அது ஒரு இடிபாடுகளின் குவியலாகும்.
ஏசாயா 17 : 2 (OCVTA)
அரோவேரிலுள்ள பட்டணங்கள் கைவிடப்பட்டு, மந்தைகளுக்கு இளைப்பாறும் இடங்களாய் இருக்கும்; அவைகளைப் பயமுறுத்துவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
ஏசாயா 17 : 3 (OCVTA)
எப்பிராயீமிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணம் இல்லாது ஒழிந்துபோகும்; தமஸ்குவின் அரசாட்சியும் ஒழிந்துபோகும். இஸ்ரயேலின் மேன்மைக்கு நடந்ததுபோலவே, சீரியாவில் மீதியாய் இருப்பவர்களுக்கும் நடக்கும்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
ஏசாயா 17 : 4 (OCVTA)
“அந்த நாளில் யாக்கோபின் மகிமை குறைந்துபோகும்; அவளது உடலின் கொழுப்பு உருகிப்போகும்.
ஏசாயா 17 : 5 (OCVTA)
அறுவடை செய்பவன் ஓங்கி வளர்ந்த கதிர்களைச் சேர்த்து, தன் கையால் அறுவடை செய்வதுபோலவும், ஒரு மனிதன் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் சிந்திய கதிர்களைப் பொறுக்குவது போலவும் அது இருக்கும்.”
ஏசாயா 17 : 6 (OCVTA)
ஆயினும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது: “ஒலிவ மரத்தை உலுக்கி பழம் பறித்தபின், அதன் உச்சிக் கொப்புகளில் இரண்டு மூன்று பழங்கள் விழாமல் மீதமிருப்பதுபோலவும், பழம் நிறைந்த கொப்புகளில் நாலைந்து பழங்கள் விழாமல் மீந்திருப்பது போலவும் ஒரு சிலர் மீதமிருப்பார்கள்.”
ஏசாயா 17 : 7 (OCVTA)
அந்த நாளில் மக்கள் தங்களைப் படைத்தவரை நோக்கிப் பார்ப்பார்கள்; அவர்கள் தங்கள் கண்களை இஸ்ரயேலின் பரிசுத்தரின் பக்கமாய்த் திருப்புவார்கள்.
ஏசாயா 17 : 8 (OCVTA)
தமது கைகளால் செய்த பலிபீடங்களை நோக்கமாட்டார்கள்; அசேரா தேவதைகளின் தூண்களுக்கும், தங்கள் விரல்களினால் செய்யப்பட்ட தூப பீடங்களுக்கும் மதிப்புக் கொடுக்கவுமாட்டார்கள்.
ஏசாயா 17 : 9 (OCVTA)
இஸ்ரயேலர் நிமித்தம் அவர்கள் கைவிட்டுப்போன வலிமையுள்ள பட்டணங்கள் இந்த நாளில் புதர்களுக்கும், புற்தரைகளுக்கும் கைவிடப்பட்ட இடங்களைப் போலாகி, எல்லாம் பாழாய்க்கிடக்கும்.
ஏசாயா 17 : 10 (OCVTA)
நீங்கள் உங்கள் இரட்சகராகிய இறைவனை மறந்து, உங்கள் கோட்டையான கற்பாறையை நினையாமல் போனீர்கள். ஆதலால் சிறந்த தாவரங்களையும், வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திராட்சைக் கொடிகளையும் ஒழுங்காய் நாட்டினாலும்,
ஏசாயா 17 : 11 (OCVTA)
நட்ட நாளிலேயே நீ அவைகளை வளரப் பண்ணினாலும், விடியற்காலையிலேயே நீ அவைகளை மொட்டு வரப்பண்ணினாலும் அறுவடையில் ஒன்றும் இராது; வியாதியும் தீராத வேதனைகளுமே அந்த நாளில் இருக்கும்.
ஏசாயா 17 : 12 (OCVTA)
அநேக நாடுகள் கொதித்தெழுகிறார்கள்; அவர்கள் கொந்தளிக்கும் கடல்போல் எழுகிறார்கள். மக்கள் கூட்டங்கள் கிளர்ந்தெழுகிறார்கள்; பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் கர்ஜிக்கிறார்கள்.
ஏசாயா 17 : 13 (OCVTA)
பெருவெள்ளம் இரைவதுபோல் மக்கள் கூட்டங்கள் இரைந்தாலும், அவர் அவர்களைக் கடிந்துகொள்ளும்போது, அவர்கள் தூரமாய் ஓடிப்போகிறார்கள். அவர்கள் குன்றுகளின்மேல் காற்றினால் பறக்கடிக்கிறப் பதரைப்போலவும், புயல்காற்றில் சிக்குண்ட சருகு போலவும் அவர்கள் அடித்துச்செல்லப் படுகிறார்கள்.
ஏசாயா 17 : 14 (OCVTA)
மாலைவேளையில் திடீர்ப் பயங்கரம்; விடியுமுன் அழிவு; நம்மைக் கொள்ளையடிப்பவர்களின் நிலைமை இதுவே; நம்மைச் சூறையாடுவோரின் கதியும் இதுவே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14