ஏசாயா 14 : 1 (OCVTA)
யெகோவா யாக்கோபின்மேல் இரக்கம்கொள்வார். இஸ்ரயேலை மீண்டும் ஒருமுறை தெரிந்துகொண்டு, அவர்களைத் தங்கள் சொந்த நாட்டில் குடியேற்றுவார்; பிறநாட்டினரும் அவர்களோடு சேர்ந்து, யாக்கோபின் குடும்பத்தாருடன் இணைந்துகொள்வார்கள்.
ஏசாயா 14 : 2 (OCVTA)
பிறநாடுகள் இஸ்ரயேலுக்கு உதவிசெய்து, அவர்களைத் தங்களுடைய சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவார்கள். இஸ்ரயேல் குடும்பத்தார் பல நாடுகளையும் தமக்குச் சொந்தமாக்கி, யெகோவாவினுடைய நாட்டில் வேலைக்காரர்களாகவும், வேலைக்காரிகளாகவும் கையாளுவார்கள். தங்களைச் சிறைப்படுத்தியவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கியவர்களை ஆளுவார்கள்.
ஏசாயா 14 : 3 (OCVTA)
யெகோவா உங்கள் வேதனையிலும், துன்பத்திலும் கொடூரமான அடிமைத்தனத்திலுமிருந்து உங்களை மீட்டு, உங்களுக்கு ஆறுதல் தந்த நாளிலே,
ஏசாயா 14 : 4 (OCVTA)
நீங்கள் பாபிலோனிய அரசனுக்கு விரோதமாக இவ்வாறு கேலி செய்வீர்கள்: ஒடுக்கினவன் எவ்வாறு ஒழிந்துபோனான்; அவன் கோபம் என்ன ஆனது?
ஏசாயா 14 : 5 (OCVTA)
ஆளுநரின் கொடுங்கோலை, கொடியவரின் கோலை யெகோவா முறித்துவிட்டார்.
ஏசாயா 14 : 6 (OCVTA)
அந்தக் கொடுங்கோல் மக்கள் கூட்டங்களைத் தன் கோபத்தில் ஓயாமல் அடித்து வீழ்த்தியது. அது நாடுகளைத் தன் கடுங்கோபத்தில் ஓயாது துன்புறுத்தி, அவர்களை அடக்கியது.
ஏசாயா 14 : 7 (OCVTA)
நாடுகளெல்லாம் ஆறுதலடைந்து, சமாதானமாய் இருக்கின்றன; அவர்கள் அகமகிழ்ந்து பாடுகிறார்கள்.
ஏசாயா 14 : 8 (OCVTA)
தேவதாரு மரங்களும், லெபனோனின் கேதுரு மரங்களும், உன் வீழ்ச்சியில் மகிழ்ந்து சொல்கிறதாவது: “பாபிலோனே, நீ கீழே வீழ்த்தித் தள்ளப்பட்டிருக்கிறாய். அதனால் இப்பொழுது எங்களை ஒரு மரவெட்டியும் அணுகவில்லை.”
ஏசாயா 14 : 9 (OCVTA)
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது, உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது. அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது; அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள். அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது; அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள்.
ஏசாயா 14 : 10 (OCVTA)
அவர்கள் எல்லோரும் உன்னிடம், “நீயும் எங்களைப்போல் பெலவீனமாகிவிட்டாய்; நீயும் எங்களைப் போலாகிவிட்டாய்” என்று சொல்வார்கள்.
ஏசாயா 14 : 11 (OCVTA)
உனது பகட்டான ஆடம்பரமெல்லாம், உனது யாழோசையுடன் பாதாளத்திற்குக் கீழே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கூட்டுப் புழுக்கள் உனக்குக் கீழே பரவி, புழுக்கள் உன்னை மூடுகின்றன.
ஏசாயா 14 : 12 (OCVTA)
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஒருகாலத்தில் நாடுகளை வீழ்த்திய நீ, பூமிக்குத் தள்ளப்பட்டு விட்டாயே!
ஏசாயா 14 : 13 (OCVTA)
நீ உன் இருதயத்தில், “நான் வானத்திற்கு ஏறுவேன்; இறைவனின் நட்சத்திரங்களுக்கு மேலாக என் அரியணையை உயர்த்துவேன். பரிசுத்த மலையின் மிக உயரத்தில், சபைக்கூடும் மலையில் நான் அரியணையில் அமர்ந்திருப்பேன்.
ஏசாயா 14 : 14 (OCVTA)
மேகங்களின் மேலாக உயரத்தில் ஏறுவேன்; மகா உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று சொன்னாயே.
ஏசாயா 14 : 15 (OCVTA)
ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு, படுகுழிக்குள் தள்ளப்பட்டாய்.
ஏசாயா 14 : 16 (OCVTA)
உன்னைக் காண்போர் உற்றுப்பார்ப்பார்கள். அவர்கள் உன் நிலையைச் சிந்தித்து, “பூமியை நிலைகுலையச் செய்து அரசுகளை நடுங்கப் பண்ணியவன் இவன்தானா?
ஏசாயா 14 : 17 (OCVTA)
உலகத்தைப் பாலைவனமாக்கி, பட்டணங்களைக் கவிழ்த்து, கைதிகளை வீட்டிற்குத் திரும்பவிடாதவன் இவன்தானா?” என்று சொல்வார்கள்.
ஏசாயா 14 : 18 (OCVTA)
நாடுகளின் அரசர் அனைவரும் அவரவர் தங்கள் கல்லறையில் சிறப்புடன் படுத்திருக்கிறார்கள்.
ஏசாயா 14 : 19 (OCVTA)
ஆனால் நீயோ ஒதுக்கப்பட்ட கிளையைப்போல் கல்லறைக்கு வெளியே எறியப்பட்டிருக்கிறாய். வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட பிரேதங்களால் நீ மூடப்பட்டிருக்கிறாய். நீயும் அவர்களுடன் கற்குழிக்குள் எறியப்பட்டிருக்கிறாய். நீ காலின்கீழ் மிதிபடும் பிணத்தைப் போலானாய்.
ஏசாயா 14 : 20 (OCVTA)
அந்த அரசர்களுடன் நீ அடக்கம் செய்யப்படமாட்டாய். ஏனெனில் உனது நாட்டையே நீ அழித்து உன் மக்களைக் கொன்றாய். கொடியவரின் சந்ததியினரைக் குறித்து இனியொருபோதும் சொல்லப்பட மாட்டாது.
ஏசாயா 14 : 21 (OCVTA)
அவர்களுடைய முற்பிதாக்களின் பாவங்களுக்காக அவர்களுடைய பிள்ளைகளைக் கொலைசெய்வதற்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துங்கள்; அவர்கள் எழுந்து நாட்டை உரிமையாக்கவோ, பூமியைத் தங்கள் பட்டணங்களால் நிரப்பவோ கூடாது.
ஏசாயா 14 : 22 (OCVTA)
“நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “பாபிலோனின் பெயரையும், அங்கு தப்பியிருப்பவர்களையும், அவளுடைய சந்ததிகளையும் அகற்றிவிடுவேன்” என யெகோவா அறிவிக்கிறார்.
ஏசாயா 14 : 23 (OCVTA)
“மேலும், அவ்விடத்தை சதுப்பு நிலமாகவும், ஆந்தைகளின் வசிப்பிடமாகவும் ஆக்குவேன்; அழிவின் துடைப்பத்தால் அவனைக் கூட்டித்தள்ளுவேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
ஏசாயா 14 : 24 (OCVTA)
சேனைகளின் யெகோவா ஆணையிட்டிருக்கிறார்: “நிச்சயமாக நான் திட்டமிட்டபடியே அது நடக்கும், என் நோக்கத்தின்படியே அது நிலைநிற்கும்.
ஏசாயா 14 : 25 (OCVTA)
நான் அசீரியனை என் நாட்டிலேயே முறியடிப்பேன்; என் மலைகளிலேயே அவனை மிதித்துவிடுவேன். அவனுடைய நுகம் என் மக்களிடமிருந்து எடுக்கப்படும்; அவனுடைய சுமை அவர்களின் தோள்களிலிருந்து நீக்கப்படும்.”
ஏசாயா 14 : 26 (OCVTA)
முழு உலகத்துக்கும் தீர்மானிக்கப்பட்ட திட்டம் இதுவே; எல்லா நாடுகளுக்கும் மேலாக நீட்டப்பட்ட கரம் இதுவே.
ஏசாயா 14 : 27 (OCVTA)
சேனைகளின் யெகோவா அதைத் தீர்மானித்திருக்கிறார், அவரைத் தடுக்க யாரால் முடியும்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, அதை எவரால் திருப்ப முடியும்?
ஏசாயா 14 : 28 (OCVTA)
பெலிஸ்தியருக்கு எதிரான இறைவாக்கு ஆகாஸ் அரசன் இறந்த வருடத்தில் இந்த இறைவாக்கு வந்தது:
ஏசாயா 14 : 29 (OCVTA)
பெலிஸ்தியரே, நீங்கள் எல்லோரும், உங்களை அடித்த கோல் முறிந்தது என்று மகிழவேண்டாம். அந்த பாம்பின் வேரிலிருந்து விரியன் பாம்பு தோன்றும். அதன் கனியோ பறக்கும் விஷப் பாம்பாய் இருக்கும்.
ஏசாயா 14 : 30 (OCVTA)
* ஏழைகளின் தலைப்பிள்ளைகள் ஏழைகளிலும் ஏழைகளாய் இருப்பவர்கள் உணவைப் பெற்றுக்கொள்வார்கள்; தரித்திரர் பாதுகாப்பாக இளைப்பாறுவார்கள். ஆனால் உன் வேரையோ பஞ்சத்தால் அழிப்பேன்; அது உன்னில் மீதமிருப்போரைக் கொன்றுவிடும்.
ஏசாயா 14 : 31 (OCVTA)
வாசலே, புலம்பு! பட்டணமே, கதறியழு! பெலிஸ்தியரே, நீங்கள் அனைவரும் உருகிப்போங்கள்! வடக்கிலிருந்து ஒரு புகைமேகம் வருகிறது; அதன் அணிவகுப்பிலிருந்து விலகுவோர் அங்கு ஒருவரும் இல்லை.
ஏசாயா 14 : 32 (OCVTA)
அந்த நாட்டின் தூதுவருக்கு என்ன பதில் சொல்லலாம்? “யெகோவா சீயோனை நிலைநாட்டியிருக்கிறார். துன்புறுத்தப்பட்ட அவரது மக்கள் அங்கு அடைக்கலம் புகுவார்கள்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32