ஏசாயா 1 : 1 (OCVTA)
ஆமோஸின் மகன் ஏசாயா, யூதாவின் அரசர்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் அரசாண்ட காலங்களில் யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றி கண்ட தரிசனம்.
ஏசாயா 1 : 2 (OCVTA)
யூதாவுக்கு யெகோவாவின் நியாயத்தீர்ப்பு வானங்களே, கேளுங்கள், பூமியே, கவனித்துக் கேள்! ஏனெனில் யெகோவா பேசியிருக்கிறார்: “நான் என் பிள்ளைகளை பராமரித்துப் பாதுகாத்து வளர்த்தேன்; ஆனால் அவர்கள் எனக்கெதிராகக் கலகம் பண்ணினார்கள்.
ஏசாயா 1 : 3 (OCVTA)
எருது தன் எஜமானையும், கழுதை தன் எஜமானின் தொழுவத்தையும் அறியும். ஆனால் இஸ்ரயேலரோ என்னை அறிந்துகொள்ளாமலும், என் மக்கள் என்னைப் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள்.”
ஏசாயா 1 : 4 (OCVTA)
ஐயோ, இவர்கள் பாவம் நிறைந்த நாடு, குற்றம் நிறைந்த மக்கள், தீயவர்களின் கூட்டம், கேடு கெட்டு நடக்கும் பிள்ளைகள்! இவர்கள் யெகோவாவை விட்டுவிட்டார்கள், இவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை அவமதித்து, அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள்.
ஏசாயா 1 : 5 (OCVTA)
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? உங்கள் தலை முழுவதும் காயப்பட்டும், உங்கள் இருதயம் முழுவதும் வேதனையுற்றும் இருக்கிறதே! தொடர்ந்து ஏன் நீங்கள் கலகம் செய்கிறீர்கள்?
ஏசாயா 1 : 6 (OCVTA)
உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை, நீங்கள் ஆரோக்கியம் அற்றவர்களாய் இருக்கிறீர்கள். ஆறாத புண்களும், அடிகாயங்களும், சீழ்வடியும் புண்களுமே இருக்கின்றன. அவை சுத்தமாக்கப்படவோ, கட்டுப்போடப்படவோ, எண்ணெய் பூசி குணமாக்கப்படவோ இல்லை.
ஏசாயா 1 : 7 (OCVTA)
உங்கள் நாடு பாழடைந்திருக்கிறது; உங்கள் நகரங்கள் தீயினால் எரிந்துபோய்க் கிடக்கின்றன. உங்கள் கண்முன்பதாகவே உங்கள் வயல்கள் அந்நியரால் கொள்ளையிடப்படுகின்றன; உங்கள் நாடு பிறநாட்டினரால் தோற்கடிக்கப்பட்டு பாழடைந்ததைப் போல் இருக்கிறதே!
ஏசாயா 1 : 8 (OCVTA)
சீயோனின் மகள்* சீயோனின் மகள் அல்லது எருசலேம் பட்டணம். திராட்சைத் தோட்டத்திலுள்ள கொட்டில் போலவும், வெள்ளரித் தோட்டத்தின் குடில்போலவும், முற்றுகையிட்ட பட்டணம் போலவும் தனித்து விடப்பட்டிருக்கிறாள்.
ஏசாயா 1 : 9 (OCVTA)
எல்லாம் வல்ல யெகோவா நம்மில் ஒரு சிலரைத் தப்பிப்பிழைக்க விட்டிராமல் இருந்தால், நாம் சோதோமைப் போலாகியிருப்போம்; நாம் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.
ஏசாயா 1 : 10 (OCVTA)
சோதோமின் ஆளுநர்களே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது இறைவனின் கட்டளைக்குச் செவிகொடுங்கள்!
ஏசாயா 1 : 11 (OCVTA)
“உங்கள் ஏராளமான பலிகள் எனக்கு எதற்கு?” என யெகோவா கேட்கிறார். “செம்மறியாட்டுக் கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மந்தைகளின் கொழுப்பும், எனக்குச் சலித்துவிட்டன; காளைகள், செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தினால் எனக்கு மகிழ்ச்சி இல்லை.
ஏசாயா 1 : 12 (OCVTA)
நீங்கள் என் முன்னிலையில் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டுவந்து, இப்படி என் பிராகாரங்களை மிதிக்கவேண்டுமென உங்களிடம் கூறியவர் யார்?
ஏசாயா 1 : 13 (OCVTA)
உங்களது அர்த்தமற்ற காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்! உங்கள் தூபம் எனக்கு அருவருப்பாயிருக்கிறது. அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள், சபைக்கூட்டங்கள் போன்ற ஒழுங்கற்ற ஒன்றுகூடுதலை இனி என்னால் சகிக்க முடியாது.
ஏசாயா 1 : 14 (OCVTA)
உங்களது அமாவாசை நாட்களையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது. அவை எனக்கு சுமையாகிவிட்டன; நான் அவைகளைச் சுமந்து களைத்துப் போனேன்.
ஏசாயா 1 : 15 (OCVTA)
நீங்கள் ஜெபிப்பதற்காகக் கைகளை உயர்த்தும்போது, நான் உங்களிடமிருந்து என் கண்களை மறைத்துக்கொள்வேன்; அநேக ஜெபங்களைச் செய்தாலும், நான் செவிகொடுக்கமாட்டேன். “ஏனெனில் உங்கள் கைகள் குற்றமற்ற இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றது!
ஏசாயா 1 : 16 (OCVTA)
“உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள். உங்கள் கொடிய செயல்களை எனது பார்வையிலிருந்து நீக்கி, தீமை செய்வதை நிறுத்துங்கள்.
ஏசாயா 1 : 17 (OCVTA)
சரியானதைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்; விதவைக்காக வழக்காடுங்கள்.
ஏசாயா 1 : 18 (OCVTA)
“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்று யெகோவா கூறுகிறார். “உங்கள் பாவங்கள் செந்நிறமாய் இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்; அவை கருஞ்சிவப்பாய் இருந்தாலும், பஞ்சைப்போல் வெண்மையாகும்.
ஏசாயா 1 : 19 (OCVTA)
நீங்கள் இணங்கிக் கீழ்ப்படிந்தால், நாட்டின் சிறந்த பலனைச் சாப்பிடுவீர்கள்.
ஏசாயா 1 : 20 (OCVTA)
ஆனால் எதிர்த்துக் கலகம் பண்ணுவீர்களாயின், நீங்கள் பட்டயத்துக்கு இரையாவீர்கள்.” யெகோவாவின் வாயே இவற்றை சொல்லியிருக்கிறது.
ஏசாயா 1 : 21 (OCVTA)
பாருங்கள், எவ்வளவு உண்மையாய் இருந்த பட்டணம் இப்படி வேசியாயிற்று! முன்பு அது நியாயத்தால் நிரம்பியிருந்தது; நீதி அதில் குடியிருந்ததே, இப்பொழுதோ அது கொலைகாரரின் வசிப்பிடமாயிருக்கிறது.
ஏசாயா 1 : 22 (OCVTA)
உன் வெள்ளி களிம்பாகிவிட்டது, உன் சிறந்த திராட்சை இரசம் தண்ணீர் கலப்பாயிற்று.
ஏசாயா 1 : 23 (OCVTA)
உனது ஆளுநர்கள் கலகக்காரர், திருடரின் தோழர்; ஒவ்வொருவரும் இலஞ்சத்தை விரும்பி, வெகுமதியை நாடி விரைகிறார்கள். அநாதைகளுக்கு நியாயம் செய்யாதிருக்கிறார்கள்; விதவையின் வழக்கை எடுத்துப் பேசாதிருக்கிறார்கள்.
ஏசாயா 1 : 24 (OCVTA)
ஆகவே, யெகோவா, எல்லாம் வல்ல யெகோவாவாகிய இஸ்ரயேலின் வல்லவர் அறிவிக்கிறார்: “ஓ! நான் என் எதிரிகளிடமிருந்து விடுதலையடைந்து என் பகைவர்களைப் பழிவாங்குவேன்.
ஏசாயா 1 : 25 (OCVTA)
நான் என் கரத்தை உனக்கு எதிராகத் திருப்புவேன்; நான் உனது களிம்பு முற்றிலும் நீங்க உன்னை உருக்கி, உன் அசுத்தங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துவேன்.
ஏசாயா 1 : 26 (OCVTA)
முந்தைய நாட்களில் இருந்ததுபோல், நான் உன்னுடைய நியாயதிபதிகளைத் திரும்பவும் அமர்த்துவேன். ஆரம்பத்தில் இருந்ததுபோலவே உன் ஆலோசகர்களையும் மீண்டும் தருவேன். அதன்பின் நீ நீதியின் நகரம் என்றும், உண்மையுள்ள நகரம் என்றும் அழைக்கப்படுவாய்.”
ஏசாயா 1 : 27 (OCVTA)
சீயோன் நியாயத்தினாலும், அங்கு மனந்திரும்புவோர் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.
ஏசாயா 1 : 28 (OCVTA)
ஆனால் கலகக்காரரும் பாவிகளும் ஒருமித்து நொறுக்கப்படுவார்கள்; யெகோவாவைவிட்டு விலகுகிறவர்களோ அழிந்துபோவார்கள்.
ஏசாயா 1 : 29 (OCVTA)
“நீங்கள் விருப்பத்துடன் வணங்கிய புனித கர்வாலி மரங்களின் நிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் வழிபாட்டுக்கெனத் தெரிந்துகொண்ட தோட்டங்களினிமித்தம் அவமானப்படுவீர்கள்.
ஏசாயா 1 : 30 (OCVTA)
நீங்கள் இலையுதிர்ந்த கர்வாலி மரம் போலவும், தண்ணீரில்லாத தோட்டம்போலவும் இருப்பீர்கள்.
ஏசாயா 1 : 31 (OCVTA)
வலிமையுள்ளவன் காய்ந்த கூளம் போலவும் அவனுடைய செயல் ஒரு நெருப்புப்பொறியும் போலாகி, இரண்டும் அணைப்பாரின்றி ஏகமாய் எரிந்துபோகும்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31