அபகூக் 2 : 1 (OCVTA)
நான் போய் என் காவல் கோபுரத்தில் நிற்பேன். காவல் அரண்கள்மேல் நான் நிலைகொள்வேன், யெகோவா எனக்கு என்ன சொல்வார் என்று அறியும்படி நான் பார்த்திருப்பேன். நான் கண்டிக்கப்பட்டால், என்ன மறுமொழி சொல்வேன் எனவும் சிந்தித்துக் கொண்டிருப்பேன்.
அபகூக் 2 : 2 (OCVTA)
யெகோவாவின் பதில் அப்பொழுது யெகோவா பதிலளித்துச் சொன்னதாவது: “இந்த வெளிப்படுத்துதலை எழுதிவை, அதை கற்பலகையில் தெளிவாய் பொறித்து வை. தூதுவன் அதனுடன் விரைவாய் ஓடி அறிவிக்கக்கூடியதாக இருக்கட்டும்.
அபகூக் 2 : 3 (OCVTA)
இந்த வெளிப்படுத்தல், அதற்கு நியமிக்கப்பட்ட காலத்தில் நிறைவேறக் காத்திருக்கிறது. அது முடிவு காலத்தைப்பற்றிச் சொல்கிறது, அது பொய்யாய் போகமாட்டாது. அது வருவதற்குக் காலம் தாழ்த்தினாலும், அதற்காகக் காத்திரு, அது நிச்சயமாய் வரும், அது தாமதிக்காது.
அபகூக் 2 : 4 (OCVTA)
“பார், தற்பெருமை கொண்டிருக்கிறானே, அவனுடைய ஆசைகள் நேர்மையானவை அல்ல; ஆனால் நீதிமானோ விசுவாசத்தினாலே வாழ்வான்.
அபகூக் 2 : 5 (OCVTA)
உண்மையாகவே, மதுபானமும், செல்வமும் அவனுக்கு துரோகம் செய்கிறது; அவன் அகந்தையாய் இருப்பதனால், அமைதியற்று இருக்கிறான். ஏனெனில் அவன் பாதாளத்தைப்போல் பேராசை உள்ளவனாயும், சாவைப்போல் திருப்தி அற்றவனாயும் இருக்கிறான். அதனால் அவன் எல்லா நாடுகளையும் தனக்கெனச் சேர்த்துக்கொள்கிறான். எல்லா மக்கள் கூட்டங்களையும் கைதிகளாகக் கொண்டுபோகிறான்.
அபகூக் 2 : 6 (OCVTA)
“அவர்கள் எல்லோரும் அவனை நிந்தித்து அவதூறு செய்து, “ ‘இவ்வாறு பழிசொல்லமாட்டார்களோ: ஐயோ, களவாடிய பொருட்களைக் குவித்து, பலவந்தமாய் பணம் பறித்து செல்வந்தனாகிற உனக்குக் கேடு, எவ்வளவு காலத்துக்கு இது நடக்கப்போகிறது?’
அபகூக் 2 : 7 (OCVTA)
உன் கடன்காரர்கள் திடீரென்று எழும்பமாட்டார்களோ? அவர்கள் எழுந்து உன்னை நடுங்கவைக்கமாட்டார்களோ? அப்பொழுது நீ அவர்களுடைய தண்டனைக்கு ஆளாவாயே.
அபகூக் 2 : 8 (OCVTA)
பல நாடுகளை நீ கொள்ளையடித்ததினால், மீந்திருக்கும் மக்கள் கூட்டங்கள் உன்னைக் கொள்ளையடிப்பார்கள். ஏனெனில் நீ மனிதர்களின் இரத்தத்தைச் சிந்தினாய்; நாடுகளையும், நகரங்களையும் அங்குள்ள அனைவரையும் அழித்தாயே.
அபகூக் 2 : 9 (OCVTA)
“ஐயோ, அநியாயமான ஆதாயத்தினால் தன் வீட்டைக் கட்டுகிறவனுக்குக் கேடு, அவன் அழிவின் பிடியிலிருந்து தப்பும்படி தன் கூட்டை உயரத்தில் கட்டப் பார்க்கிறானே!
அபகூக் 2 : 10 (OCVTA)
நீ அநேக மக்கள் கூட்டங்களை அழிக்கும்படி சூழ்ச்சி செய்தாய். அதனால் உன் வீட்டிற்கு வெட்கத்தையும், உன் உயிருக்கு ஆபத்தையும் தேடிக் கொண்டாய்.
அபகூக் 2 : 11 (OCVTA)
உன் வீட்டுச் சுவரின் கற்கள் கூக்கூரலிடும். மரவேலைப்பாடுகள் உள்ள உத்திரங்கள் எதிரொலிக்கும்.
அபகூக் 2 : 12 (OCVTA)
“ஐயோ, இரத்தம் சிந்துவதினால் ஒரு நகரத்தைக் கட்டியெழுப்பி, குற்றச் செயலால் ஒரு பட்டணத்தை நிலைநிறுத்துகிற பாபிலோனுக்குக் கேடு!
அபகூக் 2 : 13 (OCVTA)
சேனைகளின் யெகோவா, மக்களின் உழைப்பு நெருப்புக்கான விறகாகும் என்றும், நாடுகளின் முடிவில்லாத உழைப்பு பயனற்றதாய் போகும் என்றும் அறிவிக்கிறாரே.
அபகூக் 2 : 14 (OCVTA)
கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பதுபோல, பூமி யெகோவாவின் மகிமையைப்பற்றிய அறிவினால் நிறைந்திருக்கும்.
அபகூக் 2 : 15 (OCVTA)
“ஐயோ, தன் அயலவர்களுக்கு அவர்கள் வெறிக்கும்வரை தோல் குடுவையிலிருந்து மதுவை ஊற்றிக் கொடுக்கிறவனுக்குக் கேடு, அவன் அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படி இப்படிச் செய்கிறானே!
அபகூக் 2 : 16 (OCVTA)
நீ மகிமைக்குப் பதிலாய் வெட்கத்தினால் நிரப்பப்படுவாய். இப்பொழுது உன்னுடைய முறை வந்துவிட்டது! நீயும் குடித்து உன் நிர்வாணத்தை வெளியே காட்டு! யெகோவாவின் வலதுகையிலுள்ள தண்டனையின் கிண்ணம் உன்மேல் வருகிறது, அப்பொழுது உன் மகிமையை அவமானம் மூடிவிடும்.
அபகூக் 2 : 17 (OCVTA)
நீ லெபனோனுக்குச் செய்த கொடுமைகள் உன்னை மேற்கொள்ளும். நீ மிருகங்களுக்குச் செய்த பேரழிவு உனக்குத் திகிலூட்டும். ஏனெனில் நீ மனிதனுடைய இரத்தத்தைச் சிந்தினாய்; நாடுகளையும், நகரங்களையும் அங்குள்ள அனைவரையும் அழித்தாயே.
அபகூக் 2 : 18 (OCVTA)
“ஒரு விக்கிரகத்திற்கு என்ன மதிப்பு உண்டு, அதை மனிதன்தானே செதுக்கினான்? பொய்களை போதிக்கும் ஒரு உருவச்சிலைக்கு என்ன மதிப்பு உண்டு? ஏனென்றால் அதை செய்பவன், தான் உருவாக்கியதிலேயே நம்பிக்கையை வைக்கிறான்; அவன் பேசமுடியாத விக்கிரகங்களைச் செய்கிறான்.
அபகூக் 2 : 19 (OCVTA)
ஐயோ, மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகத்தைப்பார்த்து, ‘உயிர் பெறு’ என்றும், உயிரற்ற சிலையைப்பார்த்து, ‘எழுந்திரு’ என்றும் சொல்கிற பாபிலோனுக்குக் கேடு! இவற்றினால் வழிகாட்ட முடியுமா? இவை தங்கத்தினாலும் வெள்ளியினாலும் மூடப்பட்டிருக்கின்றன; இவற்றிலே சுவாசம் இல்லை.”
அபகூக் 2 : 20 (OCVTA)
ஆனால் யெகோவாவோ தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமி முழுவதும் அவருக்குமுன் மவுனமாய் இருப்பதாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20