ஆதியாகமம் 48 : 1 (OCVTA)
மனாசேயும் எப்பிராயீமும் சிறிது காலத்தின் பின்னர், “உம்முடைய தகப்பன் உடல் நலமில்லாமல் இருக்கிறார்” என்று யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது. அவன் தன் இரு மகன்களான மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போனான்.
ஆதியாகமம் 48 : 2 (OCVTA)
“உம்முடைய மகன் யோசேப்பு வந்திருக்கிறான்” என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே இஸ்ரயேல் தன் பலத்தை ஒன்றுசேர்த்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான்.
ஆதியாகமம் 48 : 3 (OCVTA)
யாக்கோபு யோசேப்பிடம், “கானானிலுள்ள லூஸ் என்னும் இடத்திலே எல்லாம் வல்ல இறைவன் எனக்குமுன் தோன்றி, என்னை ஆசீர்வதித்தார்.
ஆதியாகமம் 48 : 4 (OCVTA)
அவர் என்னிடம், ‘நான் உன்னை இனவிருத்தியில் பெருகப்பண்ணி எண்ணிக்கையில் அதிகரிப்பேன். அத்துடன் நான் உன்னை பல மக்கள் கூட்டமாக்கி, இந்த நாட்டை உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் நித்திய உடைமையாகக் கொடுப்பேன்’ என்றார்.
ஆதியாகமம் 48 : 5 (OCVTA)
“எனவே, நான் இங்கே உன்னிடம் எகிப்திற்கு வருவதற்குமுன், உனக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளும் இப்பொழுதிலிருந்து என்னுடைய மகன்களாக எண்ணப்படுவார்கள்; ரூபனும், சிமியோனும் என் மகன்களாய் இருப்பதுபோல், எப்பிராயீமும் மனாசேயும் என் மகன்களாய் இருப்பார்கள்.
ஆதியாகமம் 48 : 6 (OCVTA)
அவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் எல்லோரும் உன்னுடையவர்களாய் இருப்பார்கள்; அந்த பிள்ளைகள் சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்ளும் இடங்கள், தங்கள் சகோதரரான மனாசே, எப்பிராயீம் ஆகியோரின் இடங்களிலிருந்தே கிடைக்கும்.
ஆதியாகமம் 48 : 7 (OCVTA)
நான் பதானைவிட்டுத் திரும்பி வருகையில், எப்பிராத்தாவுக்குச் சற்று தூரத்தில், கானான் நாட்டில் நாங்கள் வழியில் இருக்கும்போதே, ராகேல் இறந்தாள்; பெத்லெகேம் எனப்படும் எப்பிராத்தாவுக்குப் போகும் வழியின் அருகே நான் அவளை அடக்கம் செய்தேன்” என்றான்.
ஆதியாகமம் 48 : 8 (OCVTA)
இஸ்ரயேல் யோசேப்பின் மகன்களை கண்டபோது, “இவர்கள் யார்?” என்று அவனிடம் கேட்டான்.
ஆதியாகமம் 48 : 9 (OCVTA)
அதற்கு யோசேப்பு தன் தகப்பனிடம், “இவர்கள்தான் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகள்” என்றான். அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என்னிடம் கொண்டுவா” என்றான்.
ஆதியாகமம் 48 : 10 (OCVTA)
வயது சென்றபடியால் இஸ்ரயேலின் கண்பார்வை மங்கியிருந்தது, அதனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆகையால் யோசேப்பு அவர்களை அவனுக்கு அருகில் கொண்டுவந்தான்; யாக்கோபு அவர்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டான்.
ஆதியாகமம் 48 : 11 (OCVTA)
அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பிடம், “திரும்பவும் உன் முகத்தைப் பார்ப்பேனென்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுதோ இறைவன் நான் உன்னுடைய பிள்ளைகளையும் காணும்படி செய்தாரே” என்றான்.
ஆதியாகமம் 48 : 12 (OCVTA)
யோசேப்பு இஸ்ரயேலின் முழங்கால்கள் நடுவிலிருந்த தன் பிள்ளைகளை விலக்கிவிட்டு செய்து தரைமட்டும் குனிந்து தன் தகப்பனை வணங்கினான்.
ஆதியாகமம் 48 : 13 (OCVTA)
பின்பு யோசேப்பு அவர்கள் இருவரையும் பிடித்து, எப்பிராயீமை தன் வலதுகையினால் இஸ்ரயேலின் இடப்பக்கத்திலும், மனாசேயைத் தன் இடது கையினால் இஸ்ரயேலின் வலதுபக்கத்திலுமாகத் தன் தகப்பன் அருகே கொண்டுவந்தான்.
ஆதியாகமம் 48 : 14 (OCVTA)
ஆனால் இஸ்ரயேல், தன் இரு கைகளையும் குறுக்காக நீட்டி, எப்பிராயீம் இளையவனாயிருந்தபோதிலும் அவன் தலையின்மேல் தன் வலதுகையை வைத்தான்; மனாசே மூத்தவனாய் இருந்தபோதிலும், அவன் தலையின்மேல் இடதுகையை வைத்தான்.
ஆதியாகமம் 48 : 15 (OCVTA)
அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பை ஆசீர்வதித்து சொன்னது: “என் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோர் வழிபட்ட இறைவனும், என் வாழ்நாள் முழுவதும் இன்றுவரை என் மேய்ப்பராயிருந்த இறைவனும்,
ஆதியாகமம் 48 : 16 (OCVTA)
எல்லா தீங்குகளிலிருந்தும் என்னை விடுவித்த தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக. இவர்கள் என்னுடைய பெயராலும், என் தந்தையர்களான ஆபிரகாமினுடைய, ஈசாக்கினுடைய பெயர்களாலும் அழைக்கப்படுவார்களாக. இவர்கள் பூமியில் மிகுதியாய்ப் பெருகுவார்களாக.”
ஆதியாகமம் 48 : 17 (OCVTA)
தனது தகப்பன் அவருடைய வலதுகையை எப்பிராயீமுடைய தலையில் வைத்ததை யோசேப்பு கண்டான், அது அவனுக்கு விருப்பமில்லாதிருந்தது; அதனால் எப்பிராயீமுடைய தலையிலிருந்த யாக்கோபின் வலதுகையை மனாசேயின் தலையில் வைப்பதற்காகப் பிடித்தான்.
ஆதியாகமம் 48 : 18 (OCVTA)
யோசேப்பு தன் தகப்பனிடம், “அப்படியல்ல அப்பா, இவனே என் மூத்த மகன்; இவன் தலைமேல் உங்களுடைய வலதுகையை வையுங்கள்” என்றான்.
ஆதியாகமம் 48 : 19 (OCVTA)
ஆனால் யாக்கோபோ அப்படிச் செய்ய மறுத்து, “எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும். மனாசேயும் ஒரு பெரிய மக்கள் கூட்டமாவான், இவனும் பெரியவனாவான். எனினும் இவனுடைய இளைய சகோதரன் இவனிலும் பெரியவனாவான்; இவனுடைய சந்ததி பெருகி பல நாடுகளின் கூட்டமாகும்” என்றான்.
ஆதியாகமம் 48 : 20 (OCVTA)
அன்றையதினம் அவன் அவர்களை ஆசீர்வதித்துச் சொன்னது: “ ‘எப்பிராயீம், மனாசேயைப்போல் உங்களையும் இறைவன் பெருகப்பண்ணுவாராக’ என்று இஸ்ரயேலர் உங்கள் பெயரால் ஆசீர்வாதத்தைச் சொல்வார்கள்.” இவ்வாறு அவன் மனாசேயைவிட எப்பிராயீமுக்கு முதலிடம் கொடுத்தான்.
ஆதியாகமம் 48 : 21 (OCVTA)
பின்பு இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் சாகும் தருவாயில் இருக்கிறேன்; ஆனால் இறைவன் உங்களுடன் இருந்து, அவர் உங்களை உங்கள் முற்பிதாக்களின் நாட்டிற்குத் திரும்பவும் கூட்டிக்கொண்டு போவார்.
ஆதியாகமம் 48 : 22 (OCVTA)
உன் சகோதரருக்கு மேலானவனாக இருக்கிற உனக்கோ, எமோரியரிடமிருந்து நான் வாளினாலும் வில்லினாலும் கைப்பற்றிய மேட்டு நிலத்தைக் கொடுக்கிறேன்” என்றான்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22