ஆதியாகமம் 44 : 1 (OCVTA)
சாக்கில் வெள்ளிக்கிண்ணம் அதன்பின் யோசேப்பு, தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் தூக்கிச் சுமக்கக்கூடிய அளவு தானியத்தால் நிரப்பி, ஒவ்வொருவரின் சாக்குகளின் வாயிலும் அவனவன் வெள்ளிக்காசை வைத்துக் கட்டு.
ஆதியாகமம் 44 : 2 (OCVTA)
இளையவன் பென்யமீனுடைய சாக்கின் வாயிலே என் வெள்ளிக்கிண்ணத்தையும் தானியத்துக்கான வெள்ளிக்காசையும் வைத்துக் கட்டு” என்று கட்டளையிட்டான். யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.
ஆதியாகமம் 44 : 3 (OCVTA)
காலை விடிந்தபோது, அவர்கள் தங்கள் கழுதைகளுடன் வழியனுப்பப்பட்டனர்.
ஆதியாகமம் 44 : 4 (OCVTA)
அவர்கள் பட்டணத்திலிருந்து அதிக தூரம் போகுமுன் யோசேப்பு தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், “நீ உடனே அவர்களைப் பின்தொடர்ந்து போ; அவர்களைப் பிடித்தவுடன் அவர்களிடம், ‘நீங்கள் நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்தது ஏன்?
ஆதியாகமம் 44 : 5 (OCVTA)
இது என் எஜமான் பானம் பண்ணுவதற்கும் எதிர்காலத்தை கணிக்கவும் பயன்படுத்தும் பாத்திரமல்லவா? நீங்கள் செய்திருப்பது கொடிய செயல்’ என்று சொல்” என்றான்.
ஆதியாகமம் 44 : 6 (OCVTA)
அவன் அவர்களைச் சென்றடைந்தபோது, அவ்வார்த்தைகளை அப்படியே சொன்னான்.
ஆதியாகமம் 44 : 7 (OCVTA)
ஆனால் அவர்கள் அவனிடம், “ஏன் ஐயா இப்படியானவற்றைச் சொல்கிறீர்? இப்படிப்பட்ட எதையும் செய்ய உமது அடியாராகிய நாங்கள் எண்ணியும் பார்க்கவில்லை!
ஆதியாகமம் 44 : 8 (OCVTA)
முன்பு எங்கள் சாக்குகளில் நாங்கள் கண்ட பணத்தைக்கூட கானானிலிருந்து மீண்டும் கொண்டுவந்தோம். அப்படியிருக்க, உமது எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையோ தங்கத்தையோ நாங்கள் ஏன் திருடவேண்டும்?
ஆதியாகமம் 44 : 9 (OCVTA)
உமது அடியாரில் எவராவது அதை வைத்திருப்பதை நீர் கண்டால் அவன் சாகவேண்டும்; மற்றவர்கள் என் எஜமானின் அடிமைகளாவோம்” என்றார்கள்.
ஆதியாகமம் 44 : 10 (OCVTA)
அதற்கு அவன், “அப்படியானால் சரி; நீங்கள் சொன்னபடியே ஆகட்டும். உங்களில் எவனுடைய சாக்கில் அந்த வெள்ளிப் பாத்திரம் இருக்கிறதோ, அவன் எனக்கு அடிமையாவான்; மற்றவர்கள் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்” என்றான்.
ஆதியாகமம் 44 : 11 (OCVTA)
அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் சாக்கைக் கீழே இறக்கி, அதை அவிழ்த்தார்கள்.
ஆதியாகமம் 44 : 12 (OCVTA)
அப்பொழுது மேற்பார்வையாளன் மூத்தவனுடைய சாக்கிலிருந்து இளையவனுடைய சாக்குவரை சோதிக்கத் தொடங்கினான். அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கில் இருக்கக் காணப்பட்டது.
ஆதியாகமம் 44 : 13 (OCVTA)
அதைக் கண்டவுடனே அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். பின்பு, அவர்கள் எல்லோரும் தங்கள் கழுதைகளில் சுமைகளை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்குத் திரும்பி வந்தார்கள்.
ஆதியாகமம் 44 : 14 (OCVTA)
யூதாவும் அவன் சகோதரரும் திரும்பிவந்தபோது, யோசேப்பு இன்னும் தன் வீட்டிலேயே இருந்தான். அவர்கள் யோசேப்பின் முன் தரையில் முகங்குப்புற விழுந்தார்கள்.
ஆதியாகமம் 44 : 15 (OCVTA)
யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் செய்திருப்பது என்ன? என்னைப்போன்ற ஒரு மனிதன், சம்பவிக்கப் போவதை முன்பே கணித்துவிடுவான் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்றான்.
ஆதியாகமம் 44 : 16 (OCVTA)
அதற்கு யூதா, “ஆண்டவனே, உமக்கு நாங்கள் என்ன சொல்வோம்? நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை எப்படி நிரூபிப்போம்? இறைவன் உமது அடியாரின் குற்றத்தை வெளிப்படுத்திவிட்டார். நாங்களும் உமது பாத்திரத்தை வைத்திருப்பவனும் இப்பொழுது என் எஜமானுக்கு அடிமைகள்” என்றான்.
ஆதியாகமம் 44 : 17 (OCVTA)
ஆனால் யோசேப்போ, “அப்படிப்பட்ட செயலைச் செய்வதை என்னால் எண்ணிப்பார்க்கவும் முடியாது! கிண்ணத்தை வைத்திருக்கக் காணப்பட்டவன் மட்டுமே எனக்கு அடிமையாவான். மற்றவர்கள் உங்கள் தகப்பனிடம் சமாதானத்துடன் திரும்பிப்போங்கள்” என்றான்.
ஆதியாகமம் 44 : 18 (OCVTA)
யூதா யோசேப்பிடம் சென்று, “ஆண்டவனே, உமது அடியானாகிய நான், உம்மிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதியும். நீர் பார்வோனுக்குச் சமமாய் இருக்கிறபோதிலும், உமது அடியவன்மேல் கோபிக்க வேண்டாம்.
ஆதியாகமம் 44 : 19 (OCVTA)
ஆண்டவனே, நீர் உமது அடியார்களிடம், ‘உங்களுக்குத் தகப்பனாவது சகோதரராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டீர்.
ஆதியாகமம் 44 : 20 (OCVTA)
அதற்கு நாங்கள் எங்கள் ஆண்டவனிடம், ‘ஆம், எங்களுக்கு வயதுசென்ற தகப்பனும், அவருக்கு முதிர்வயதில் பிறந்த ஒரு இளம் மகனும் இருக்கிறான். அவனுடைய சகோதரன் இறந்துபோனான், அவனுடைய தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே உயிரோடிருக்கிறான்; அவனுடைய தகப்பன் அவனை நேசிக்கிறார்’ என்று சொன்னோம்.
ஆதியாகமம் 44 : 21 (OCVTA)
“அப்பொழுது நீர் உமது அடியாரிடம், ‘நான் அவனைப் பார்ப்பதற்கு அவனை என்னிடம் இங்கு கொண்டுவாருங்கள்’ என்றீர்.
ஆதியாகமம் 44 : 22 (OCVTA)
அதற்கு நாங்கள் உம்மிடம், ‘ஐயா, அவன் தகப்பனைவிட்டு வரமுடியாது; அப்படி அவன் பிரிந்து வந்தால், அவனுடைய தகப்பன் இறந்து போவார்’ என்றோம்.
ஆதியாகமம் 44 : 23 (OCVTA)
ஆனால் நீரோ, ‘உங்கள் இளைய சகோதரன் உங்களுடன் வராவிட்டால், மீண்டும் என் முகத்தை உங்களால் பார்க்க முடியாது’ என்று உமது அடியாராகிய எங்களிடம் சொன்னீர்.
ஆதியாகமம் 44 : 24 (OCVTA)
நாங்கள் உமது அடியவனாகிய எங்கள் தகப்பனிடம் போனபோது, ஐயா, நீர் சொல்லியிருந்தவற்றை அவரிடம் சொன்னோம்.
ஆதியாகமம் 44 : 25 (OCVTA)
“எங்கள் தகப்பனோ, ‘நீங்கள் மறுபடியும்போய் இன்னும் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள்’ என்றார்.
ஆதியாகமம் 44 : 26 (OCVTA)
அப்போது நாங்கள் அவரிடம், ‘நாங்கள் அங்கே போகமுடியாது; எங்கள் இளைய சகோதரன் எங்களுடன் வந்தால்தான் நாங்கள் அங்கே போவோம். எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வராவிட்டால், நாங்கள் அந்த மனிதனின் முகத்தைப் பார்க்கவே முடியாது’ என்று சொன்னோம்.
ஆதியாகமம் 44 : 27 (OCVTA)
“அப்பொழுது உமது அடியானாகிய எங்கள் தகப்பன் எங்களிடம், ‘என் மனைவி இரண்டு மகன்களைப் பெற்றாள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆதியாகமம் 44 : 28 (OCVTA)
அவர்களில் ஒருவன் என்னைவிட்டுப் போய்விட்டான், “நிச்சயமாய் அவனை ஒரு கொடிய மிருகம் கிழித்துக் கொன்றிருக்க வேண்டும்.” அன்றிலிருந்து அவனை நான் காணவேயில்லை.
ஆதியாகமம் 44 : 29 (OCVTA)
நீங்கள் இவனையும் என்னிடமிருந்து கொண்டுபோய், இவனுக்குத் தீங்கு ஏதும் ஏற்பட்டுவிட்டால், முதியவனாகிய என்னைத் துக்கத்தோடே சவக்குழியில் இறங்கப் பண்ணுவீர்கள்’ என்றார்.
ஆதியாகமம் 44 : 30 (OCVTA)
“இந்த சிறுவனுடைய உயிருடன் என் தகப்பனின் உயிர் ஒன்றிணைந்து இருக்கின்றது. அதனால் இப்பொழுது நான் உமது அடியானாகிய என் தகப்பனிடம் போகும்போது,
ஆதியாகமம் 44 : 31 (OCVTA)
இந்த சிறுவன் அங்கு இல்லாததைக் கண்டால், அவர் இறந்துவிடுவார். அதனால் உமது அடியாராகிய நாங்கள், எங்கள் முதிர்வயதான தகப்பனைத் துக்கத்துடன் சவக்குழியில் இறங்கச் செய்வோம்.
ஆதியாகமம் 44 : 32 (OCVTA)
உமது அடியானாகிய நானே இந்த சிறுவனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தேன். நான் என் தகப்பனிடம், ‘என் தகப்பனே, இவனை மறுபடியும் உம்மிடம் கொண்டுவராவிட்டால், உமக்கு முன்பாக என் வாழ்நாளெல்லாம் அந்தப் பழியை நானே சுமப்பேன்’ என்றும் சொல்லியிருக்கிறேன்.
ஆதியாகமம் 44 : 33 (OCVTA)
“ஆகையால் இப்பொழுது இந்த சிறுவனுக்குப் மறுமொழியாக, ஐயா, உமது அடியானாகிய நான் உமது அடிமையாக இங்கே இருப்பேன், இவன் தன் சகோதரருடன் திரும்பிச் செல்லட்டும்.
ஆதியாகமம் 44 : 34 (OCVTA)
இவன் என்னுடன் இல்லாவிட்டால், நான் எப்படித் திரும்பிப் போகமுடியும்? முடியாது! என் தகப்பனுக்கு வரும் அவலத்தை என்னைப் பார்க்க விடாதேயும்” என்று சொன்னான்.
❮
❯