ஆதியாகமம் 31 : 1 (OCVTA)
யாக்கோபும் லாபானும் பிரிதல் “யாக்கோபு எங்கள் தகப்பனின் சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுக்குச் சொந்தமானவற்றிலிருந்தே யாக்கோபு செல்வந்தனாகிவிட்டான்” என்றும் லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேள்விப்பட்டான்.
ஆதியாகமம் 31 : 2 (OCVTA)
அத்துடன் தன்னைக் குறித்த லாபானின் அணுகுமுறை முன்புபோல் இல்லாதிருப்பதையும் யாக்கோபு கவனித்தான்.
ஆதியாகமம் 31 : 3 (OCVTA)
அப்பொழுது யெகோவா யாக்கோபிடம், “நீ உன் தந்தையரின் நாட்டிற்கும் உன் உறவினரிடத்திற்கும் திரும்பிப்போ; நான் உன்னுடன் இருப்பேன்” என்றார்.
ஆதியாகமம் 31 : 4 (OCVTA)
எனவே யாக்கோபு ராகேலையும், லேயாளையும் தன் மந்தைகள் இருக்கும் வயல்வெளிக்கு வரும்படி சொல்லியனுப்பினான்.
ஆதியாகமம் 31 : 5 (OCVTA)
அவன் அவர்களிடம், “உங்கள் தகப்பனின் அணுகுமுறை என்னிடம் முன்போல் இல்லையென நான் காண்கிறேன்; ஆனால் என் தந்தையின் இறைவன் என்னுடன் இருக்கிறார்.
ஆதியாகமம் 31 : 6 (OCVTA)
நான் உங்கள் தகப்பனுக்காக என் முழுப்பெலத்துடனும் வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஆதியாகமம் 31 : 7 (OCVTA)
ஆனால் உங்கள் தகப்பனோ பத்துமுறை என் கூலியை மாற்றி என்னை ஏமாற்றினார். அப்படியிருந்தும், அவர் எனக்குத் தீங்குசெய்ய இறைவன் அவரை அனுமதிக்கவில்லை.
ஆதியாகமம் 31 : 8 (OCVTA)
‘கலப்பு நிற ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளை ஈன்றன. ‘வரியுடைய ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளையே ஈன்றன.
ஆதியாகமம் 31 : 9 (OCVTA)
இவ்விதமாக இறைவன் உங்கள் தகப்பனின் வளர்ப்பு மிருகங்களை எல்லாம் எடுத்து அவற்றை எனக்குக் கொடுத்துவிட்டார்.
ஆதியாகமம் 31 : 10 (OCVTA)
“ஒருமுறை ஆடுகள் சினைப்படும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன்; அதில் நான் ஏறெடுத்துப் பார்க்கும்பொழுது மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் வரியும், கலப்பு நிறமும், புள்ளிகளும் உள்ளதாயிருந்தன.
ஆதியாகமம் 31 : 11 (OCVTA)
இறைவனின் தூதன் அந்தக் கனவில், ‘யாக்கோபே’ என்று என்னைக் கூப்பிட்டார். ‘இதோ, நான் இருக்கிறேன்’ என்று நான் பதிலளித்தேன்.
ஆதியாகமம் 31 : 12 (OCVTA)
அப்பொழுது அவர் என்னிடம், ‘இதோ பார், மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் எல்லாம் வரிகளும், கலப்பு நிறமும், புள்ளிகளுமுள்ளனவாய் இருக்கின்றன. ஏனெனில் உனக்கு லாபான் செய்வதெல்லாவற்றையும் நான் கண்டேன்.
ஆதியாகமம் 31 : 13 (OCVTA)
நீ ஒரு தூணை அபிஷேகம் செய்து, என்னுடன் பொருத்தனை செய்துகொண்ட இடமான, பெத்தேலின் இறைவன் நானே; உடனே இந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டு, உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போ’ என்றார்” என்றான்.
ஆதியாகமம் 31 : 14 (OCVTA)
அதற்கு ராகேலும் லேயாளும் யாக்கோபிடம், “எங்கள் தகப்பனுடைய குடும்பச் சொத்தின் உரிமையிலே எங்களுக்கு இன்னும் பங்கு உண்டோ?
ஆதியாகமம் 31 : 15 (OCVTA)
அவர் எங்களை அந்நியராய் நினைக்கவில்லையா? எங்களை விற்றது மட்டுமல்ல; எங்களுக்காகச் செலுத்தப்பட்ட கூலியையும் அபகரித்து விட்டாரே!
ஆதியாகமம் 31 : 16 (OCVTA)
இறைவன் எங்கள் தகப்பனிடமிருந்து எடுத்துக்கொண்ட செல்வங்களெல்லாம், நிச்சயமாக எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்குமே சொந்தம். ஆகையால் இறைவன் உமக்குச் சொன்னவற்றையெல்லாம் செய்யும்” என்றார்கள்.
ஆதியாகமம் 31 : 17 (OCVTA)
பின்பு யாக்கோபு தன் பிள்ளைகளையும் மனைவிகளையும் ஒட்டகங்களில் ஏற்றி,
ஆதியாகமம் 31 : 18 (OCVTA)
தனக்குச் சொந்தமான வளர்ப்பு மிருகங்களையும் தனக்கு முன்னால் ஓட்டிக்கொண்டு, தான் பதான் அராமிலே சம்பாதித்த தன் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, கானான் நாட்டிலுள்ள தன் தகப்பன் ஈசாக்கிடம் போகப் புறப்பட்டான்.
ஆதியாகமம் 31 : 19 (OCVTA)
லாபான் தன் செம்மறியாடுகளுக்கு மயிர்கத்தரிக்கச் சென்றிருந்த வேளை, ராகேல் தன் தகப்பன் வீட்டு சிலைகளைத் திருடி மறைத்து வைத்துக்கொண்டாள்.
ஆதியாகமம் 31 : 20 (OCVTA)
அதுமட்டுமல்ல, யாக்கோபு அரமேயனான லாபானுக்குச் சொல்லாமலே ஓடிப்போனதினால் அவனை ஏமாற்றினான்.
ஆதியாகமம் 31 : 21 (OCVTA)
இவ்வாறு யாக்கோபு தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஐபிராத்து ஆற்றைக் கடந்து தப்பியோடி, கீலேயாத் மலைநாட்டை நோக்கிப் போனான்.
ஆதியாகமம் 31 : 22 (OCVTA)
லாபான் யாக்கோபைப் பின்தொடர்தல் யாக்கோபு தப்பி ஓடிவிட்டான் என்று மூன்றாம் நாளில் லாபானுக்குச் சொல்லப்பட்டது.
ஆதியாகமம் 31 : 23 (OCVTA)
லாபான் தன் உறவினர்களோடு ஏழு நாட்களாக யாக்கோபைப் பின்தொடர்ந்து சென்று கீலேயாத் மலையில் அவனிருந்த இடத்தை அடைந்தான்.
ஆதியாகமம் 31 : 24 (OCVTA)
அன்றிரவு இறைவன் அரமேயனான லாபானின் கனவிலே தோன்றி, “நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ தீமையானவற்றையோ பேசக்கூடாது” என எச்சரித்தார்.
ஆதியாகமம் 31 : 25 (OCVTA)
லாபான் யாக்கோபைக் கண்டபோது, அவன் கீலேயாத் மலைநாட்டிலே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தான். லாபானும் அவன் உறவினர்களும் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கினார்கள்.
ஆதியாகமம் 31 : 26 (OCVTA)
அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என்ன செய்துவிட்டாய்? நீ என்னை ஏமாற்றி, என் மகள்களை போர் கைதிகளைப்போல் கொண்டு வந்திருக்கிறாயே!
ஆதியாகமம் 31 : 27 (OCVTA)
எனக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமாய் ஓடிவந்து என்னை ஏமாற்றியது ஏன்? நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் மேளதாளம், யாழிசையோடு கூடிய பாடலுடனும் மகிழ்ச்சியாய் உன்னை வழியனுப்பியிருப்பேனே.
ஆதியாகமம் 31 : 28 (OCVTA)
என் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு வழியனுப்பக்கூட நீ விடவில்லை. நீ மூடத்தனமாய் நடந்துகொண்டாய்.
ஆதியாகமம் 31 : 29 (OCVTA)
உனக்குத் தீங்குசெய்ய என்னால் இயலும்; ஆனால், கடந்த இரவு உன் தகப்பனுடைய இறைவன், ‘நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ, தீமையானவற்றையோ பேசாதபடி கவனமாயிரு’ என்று எனக்குச் சொன்னார்.
ஆதியாகமம் 31 : 30 (OCVTA)
நீ உன் தகப்பனுடைய வீட்டிற்குப் போவதற்கு ஆவலாயிருந்தபடியாலேயே இப்படிப் புறப்பட்டு வந்துவிட்டாய். ஆனால், ஏன் என் வீட்டுச் சிலைகளைத் திருடினாய்?” என்று கேட்டான்.
ஆதியாகமம் 31 : 31 (OCVTA)
அதற்கு யாக்கோபு லாபானிடம், “உம்முடைய மகள்களை என்னிடமிருந்து பலாத்காரமாய் எடுத்துப்போடுவீரென்று பயந்தே இப்படிச் செய்தேன்.
ஆதியாகமம் 31 : 32 (OCVTA)
ஆனால் உம்முடைய வீட்டுச் சிலைகளை வைத்திருப்பவன் எவனையாவது நீர் கண்டுபிடித்தால், அவன் உயிரோடிருக்கமாட்டான். உம்முடைய பொருள்களில் ஏதாவது என்னிடத்திலிருக்கிறதா என்று நீர் எனது உறவினர் முன்னிலையில் சோதித்துப்பாரும்; அப்படியிருந்தால், அவற்றை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் வீட்டுச் சிலைகளைத் திருடியதை யாக்கோபு அறியாதிருந்தான்.
ஆதியாகமம் 31 : 33 (OCVTA)
அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள்ளும், லேயாளின் கூடாரத்துக்குள்ளும், இரண்டு பணிப்பெண்களின் கூடாரத்துக்குள்ளும் தேடிப்பார்த்தும் ஒன்றையும் காணவில்லை. அவன் லேயாளின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியே வந்து, பின் ராகேலின் கூடாரத்துக்குள் போனான்.
ஆதியாகமம் 31 : 34 (OCVTA)
அங்கு ராகேல், லாபானின் வீட்டுச் சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் வைத்து அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுதும் தேடியும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆதியாகமம் 31 : 35 (OCVTA)
ராகேல் தன் தகப்பனிடம், “ஐயா, உமக்குமுன் நான் எழுந்து நிற்கவில்லையென்று கோபிக்க வேண்டாம்; பெண்களுக்குரிய மாதவிடாய் எனக்கு உண்டாயிருக்கிறது” என்றாள். ஆகவே அவன் தேடியும் வீட்டுச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆதியாகமம் 31 : 36 (OCVTA)
யாக்கோபு கோபமடைந்து லாபானுடன் வாதாடி, “நான் செய்த குற்றமென்ன? நீர் என்னைத் துரத்தி வருவதற்கு நான் செய்த பாவமென்ன?
ஆதியாகமம் 31 : 37 (OCVTA)
இப்பொழுது என் வீட்டுப் பொருட்களை எல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உமது வீட்டுக்குரிய பொருட்களில் எதையேனும் கண்டெடுத்தீரோ? அவற்றை உமக்கும் எனக்கும் உறவினர்களான, இவர்கள்முன் இங்கே வையும்; இவர்கள் நம் இருவருக்கும் இடையில் நியாயம் தீர்க்கட்டும்.
ஆதியாகமம் 31 : 38 (OCVTA)
“நான் உம்முடன் இருபது வருடங்கள் இருந்துவிட்டேன். உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், சினையழியவில்லை; உமது மந்தையிலிருந்த கடாக்களை நான் சாப்பிடவுமில்லை.
ஆதியாகமம் 31 : 39 (OCVTA)
காட்டு மிருகங்களால் கிழித்துக் கொல்லப்பட்டவற்றை உம்மிடத்தில் கொண்டுவராமல், அந்த அழிவை நானே ஈடுசெய்தேன்; ஆனால் நீரோ இரவிலோ, பகலிலோ திருட்டுப்போன எவ்வேளையிலும் என்னிடமிருந்தே நஷ்டஈட்டைக் கேட்டு வாங்கிக்கொண்டீர்.
ஆதியாகமம் 31 : 40 (OCVTA)
பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என்னை வாட்டின, என் கண்கள் நித்திரையின்றி இருந்தன. இதுவே என் நிலைமையாய் இருந்தது.
ஆதியாகமம் 31 : 41 (OCVTA)
இவ்விதமாக நான் உமது வீட்டில் இருபது வருடங்கள் இருந்தேன். உமது இரு மகள்களுக்காக பதினாலு வருடங்களும், உம்முடைய மந்தைக்காக ஆறு வருடங்களும் உம்மிடம் வேலைசெய்தேன். நீரோ என் கூலியை பத்துமுறை மாற்றினீர்.
ஆதியாகமம் 31 : 42 (OCVTA)
என் தகப்பனின் இறைவனும், ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் பயபக்திக்கு உரியவருமானவர் என்னோடு இருந்திராவிட்டால், நீர் என்னை நிச்சயமாய் வெறுங்கையுடனேயே அனுப்பியிருப்பீர். ஆனால் இறைவனோ என் கஷ்டங்களையும், என் கையின் வேலைகளையும் கண்டு, நேற்றிரவு உம்மைக் கண்டித்தார்” என்றான்.
ஆதியாகமம் 31 : 43 (OCVTA)
அதற்கு லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தையும் என்னுடையதே. நீ காண்பவையெல்லாம் என்னுடையவை. ஆனாலும் என் மகள்களுக்காகவும், அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்காகவும் நான் என்ன செய்யமுடியும்?
ஆதியாகமம் 31 : 44 (OCVTA)
இப்பொழுது நீ வா; நீயும் நானும் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம். அது நம் இருவருக்கும் இடையே சாட்சியாக இருக்கட்டும்” என்றான்.
ஆதியாகமம் 31 : 45 (OCVTA)
எனவே யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை ஒரு தூணாக நிறுத்தினான்.
ஆதியாகமம் 31 : 46 (OCVTA)
அவன் தன் உறவினரிடம், “கற்களைக் குவியுங்கள்” என்றான்; அப்படியே அவர்கள் கற்களை எடுத்து ஒரு குவியலாய்க் குவித்து, அதனருகில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
ஆதியாகமம் 31 : 47 (OCVTA)
அவ்விடத்திற்கு லாபான், ஜெகர் சகதூதா* அராமியத்தில் ஜெகர் சகதூதா என்றால் சாட்சிக் குவியல் என்று அர்த்தம். என்றும், யாக்கோபு, கலயெத் † எபிரெயத்தில் கலயெத் என்றால் சாட்சிக் குவியல் என்று அர்த்தம். என்றும் பெயரிட்டார்கள்.
ஆதியாகமம் 31 : 48 (OCVTA)
அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “இக்குவியல் உனக்கும் எனக்குமிடையே இன்று சாட்சியாக இருக்கிறது” என்றான். அதினாலேயே அது கலயெத் என அழைக்கப்பட்டது.
ஆதியாகமம் 31 : 49 (OCVTA)
அது மிஸ்பா‡ மிஸ்பா என்றால் கண்காணித்தல் என்று அர்த்தம். என்றும் அழைக்கப்பட்டது. ஏனெனில் அவன் யாக்கோபிடம், “நாம் ஒருவரையொருவர் விட்டுத் தூரமாய் போகும்போது, யெகோவா எனக்கும் உனக்கும் இடையே கண்காணிப்பாராக.
ஆதியாகமம் 31 : 50 (OCVTA)
நீ என் மகள்களைத் துன்பப்படுத்தினாலோ அல்லது அவர்களைவிட்டு வேறு பெண்களைத் திருமணம் செய்தாலோ, அதற்கு வேறு யாரும் சாட்சியாக இல்லாவிட்டாலும், இறைவனே உனக்கும் எனக்கும் இடையில் சாட்சியாயிருக்கிறார் என்று நினைவில் வைத்துக்கொள்” என்றான்.
ஆதியாகமம் 31 : 51 (OCVTA)
மேலும் லாபான் யாக்கோபிடம், “இதோ இக்குவியலும், எனக்கும் உனக்கும் இடையில் நான் வைத்த தூணும் இங்கே இருக்கின்றன.
ஆதியாகமம் 31 : 52 (OCVTA)
நான் இக்குவியலைக் கடந்து உனக்குத் தீங்குசெய்ய உன் பக்கம் வரமாட்டேன் என்பதற்கும், நீயும் இக்குவியலையும், தூணையும் கடந்து என் பக்கமாய் எனக்குத் தீங்குசெய்ய வரமாட்டாய் என்பதற்கும் இக்குவியல் ஒரு சாட்சி; இந்தத் தூணும் ஒரு சாட்சி.
ஆதியாகமம் 31 : 53 (OCVTA)
ஆபிரகாமின் இறைவனும், நாகோரின் இறைவனும், அவர்கள் தகப்பனின் இறைவனுமாய் இருக்கிறவர் நமக்கிடையில் நியாயம் தீர்ப்பாராக” என்றான். அப்படியே யாக்கோபும் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவரின் பெயரால் ஆணையிட்டான்.
ஆதியாகமம் 31 : 54 (OCVTA)
பின்பு யாக்கோபு அந்த மலைநாட்டில் பலிசெலுத்தி, தன் உறவினர்களைச் சாப்பாட்டுக்கு அழைத்தான். அவர்கள் சாப்பிட்டபின் அன்றிரவு அவ்விடத்தில் தங்கினார்கள்.
ஆதியாகமம் 31 : 55 (OCVTA)
லாபான் மறுநாள் காலையில் தன் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின்பு அவன் புறப்பட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
❮
❯