ஆதியாகமம் 29 : 1 (OCVTA)
பதான் அராமில் யாக்கோபு பின்பு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்குத் திசையாரின் நாட்டிற்குப் போனான்.
ஆதியாகமம் 29 : 2 (OCVTA)
அங்குள்ள வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே மூன்று ஆட்டுமந்தைகள் படுத்திருப்பதையும் அவன் கண்டான்; அக்கிணற்றில் இருந்தே அவற்றுக்குத் தண்ணீர் கொடுக்கப்படும். கிணற்றின் வாயை மூடியிருந்த கல் பெரிதாயிருந்தது.
ஆதியாகமம் 29 : 3 (OCVTA)
எல்லா மந்தைகளும் சேர்ந்தவுடன் மேய்ப்பர்கள் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லைப் புரட்டி, செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் கொடுப்பார்கள். அதன்பின் திரும்பவும் அக்கல்லைக் கிணற்றின் வாயின்மேல் முன்பிருந்த இடத்தில் புரட்டி வைப்பார்கள்.
ஆதியாகமம் 29 : 4 (OCVTA)
யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “என் சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.
ஆதியாகமம் 29 : 5 (OCVTA)
யாக்கோபு அவர்களிடம், “உங்களுக்கு நாகோரின் பேரன் லாபானைத் தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “ஆம்; எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
ஆதியாகமம் 29 : 6 (OCVTA)
“அவர் சுகமாயிருக்கிறாரா?” என்று யாக்கோபு விசாரித்தான். “சுகமாயிருக்கிறார்; இதோ அவருடைய மகள் ராகேல் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்றார்கள்.
ஆதியாகமம் 29 : 7 (OCVTA)
அதற்கு யாக்கோபு அவர்களிடம், “இன்னும் சூரியன் மறையவில்லையே; இது மந்தைகளைச் சேர்க்கிற நேரமும் இல்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுத்து மறுபடியும் மேயவிடலாம்” என்றான்.
ஆதியாகமம் 29 : 8 (OCVTA)
அதற்கு அவர்கள், “எல்லா மந்தைகளும் சேரும்வரை அப்படிச் செய்யமுடியாது. சேர்ந்ததும் கிணற்றின் வாயிலிருக்கும் கல் புரட்டப்படும். அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்றார்கள்.
ஆதியாகமம் 29 : 9 (OCVTA)
அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், ராகேல் மந்தை மேய்ப்பவளாய் இருந்தபடியால், தன் தகப்பனின் ஆடுகளுடன் அங்கே வந்தாள்.
ஆதியாகமம் 29 : 10 (OCVTA)
யாக்கோபு தன் தாயின் சகோதரன் லாபானின் மகள் ராகேலையும், லாபானின் செம்மறியாடுகளையும் கண்டவுடனே, அவன் கிணற்றண்டை போய் அதன் வாயிலிருந்த கல்லை உருட்டி, தன் மாமனின் செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
ஆதியாகமம் 29 : 11 (OCVTA)
பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து சத்தமிட்டு அழத்தொடங்கினான்.
ஆதியாகமம் 29 : 12 (OCVTA)
அவன் ராகேலிடம், “நான் உன் தகப்பனின் உறவினன்; ரெபெக்காளின் மகன்” என்று சொன்னான். உடனே அவள் ஓடிப்போய் அதைத் தன் தகப்பனுக்குச் சொன்னாள்.
ஆதியாகமம் 29 : 13 (OCVTA)
தன் சகோதரியின் மகன் யாக்கோபைப் பற்றிய செய்தியைக் கேட்ட லாபான் அவனைச் சந்திப்பதற்காக விரைவாய் வந்தான். அவன் அவனைக் கட்டி அணைத்து, முத்தமிட்டு, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். நடந்த எல்லாவற்றையும் யாக்கோபு தன் மாமன் லாபானுக்கு சொன்னான்.
ஆதியாகமம் 29 : 14 (OCVTA)
அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என் சொந்த இரத்த சம்மந்தமான உறவினன்” என்றான். யாக்கோபின் திருமணம் யாக்கோபு லாபானுடன் ஒரு மாதம் தங்கியிருந்தான்.
ஆதியாகமம் 29 : 15 (OCVTA)
அதன்பின்பு லாபான் யாக்கோபிடம், “நீ எனக்கு உறவினன் என்பதால், கூலியில்லாமல் எனக்கு வேலைசெய்ய வேண்டுமோ? நீ விரும்பும் கூலியைக் கேள்” என்றான்.
ஆதியாகமம் 29 : 16 (OCVTA)
லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
ஆதியாகமம் 29 : 17 (OCVTA)
லேயாள் பார்வை குறைந்த கண்களை உடையவள். ராகேலோ நல்ல உடலமைப்பும் அழகும் உடையவள்.
ஆதியாகமம் 29 : 18 (OCVTA)
யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன் லாபானிடம், “உமது இளையமகள் ராகேலுக்காக நான் உம்மிடம் ஏழு வருடங்கள் வேலை செய்வேன்” என்றான்.
ஆதியாகமம் 29 : 19 (OCVTA)
அதற்கு லாபான், “நான் அவளை வேறொருவனுக்குக் கொடுப்பதைப் பார்க்கிலும் உனக்குக் கொடுப்பது நல்லது; நீ என்னுடன் இங்கேயே தங்கியிரு” என்றான்.
ஆதியாகமம் 29 : 20 (OCVTA)
அப்படியே யாக்கோபு ராகேலை அடைவதற்காக லாபானிடம் ஏழு வருடங்கள் வேலைசெய்தான். அவன் ராகேலின்மேல் வைத்திருந்த நேசத்தினால், அந்த ஏழு வருடங்களும் அவனுக்கு சிலநாட்கள் போலவே இருந்தன.
ஆதியாகமம் 29 : 21 (OCVTA)
பின்பு யாக்கோபு லாபானிடம், “நான் உம்மிடம் உடன்பட்ட காலம் நிறைவாகிவிட்டது; நான் ராகேலை திருமணம் செய்துகொள்ளும்படி அவளை எனக்குக் கொடும்” என்றான்.
ஆதியாகமம் 29 : 22 (OCVTA)
அப்பொழுது லாபான், அந்த இடத்தின் மக்களையெல்லாம் ஒன்றாய்க் கூட்டி, ஒரு விருந்து கொடுத்தான்.
ஆதியாகமம் 29 : 23 (OCVTA)
ஆனால் அன்று இரவு லாபான், தன் மகள் லேயாளை அழைத்துக் கொண்டுபோய், யாக்கோபிடம் கொடுத்தான். யாக்கோபு அவளுடன் உறவுகொண்டான்.
ஆதியாகமம் 29 : 24 (OCVTA)
லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் சில்பாளை தன் மகள் லேயாளுக்குப் பணிப்பெண்ணாக அனுப்பினான்.
ஆதியாகமம் 29 : 25 (OCVTA)
பொழுது விடிந்ததும், யாக்கோபு தன்னுடன் இருந்தவள் லேயாள் என்பதைக் கண்டான். அப்பொழுது யாக்கோபு லாபானிடம், “எனக்கு நீர் செய்திருப்பது என்ன? நான் ராகேலுக்காக அல்லவோ உம்மிடம் வேலைசெய்தேன்; நீர் ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்று கேட்டான்.
ஆதியாகமம் 29 : 26 (OCVTA)
அதற்கு லாபான், “மூத்தவள் இருக்க இளைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பது இங்கு எங்கள் வழக்கமல்ல.
ஆதியாகமம் 29 : 27 (OCVTA)
மணமகளுக்குரிய ஏழு நாட்களை நீ நிறைவேற்று. பின்பு உனக்கு இளைய மகளையும் கொடுப்போம், அவளுக்காகவும் இன்னும் ஏழு வருடங்கள் நீ என்னிடத்தில் வேலைசெய்” என்றான்.
ஆதியாகமம் 29 : 28 (OCVTA)
யாக்கோபு அப்படியே செய்தான். லேயாளுக்குரிய ஏழு நாட்களையும் அவன் நிறைவேற்றியதும் லாபான் தன் மகள் ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
ஆதியாகமம் 29 : 29 (OCVTA)
லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் பில்காளை தன் மகள் ராகேலுக்குப் பணிப்பெண்ணாகக் கொடுத்தான்.
ஆதியாகமம் 29 : 30 (OCVTA)
யாக்கோபு ராகேலுடன் உறவுகொண்டான், யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசித்தான். அவன் ராகேலுக்காக மேலும் ஏழு வருடங்கள் லாபானிடம் வேலைசெய்தான்.
ஆதியாகமம் 29 : 31 (OCVTA)
யாக்கோபின் பிள்ளைகள் லேயாள் நேசிக்கப்படாமல் இருந்ததை யெகோவா கண்டபோது, அவள் கருத்தரிக்கும்படி செய்தார். ராகேலோ மலடியாய் இருந்தாள்.
ஆதியாகமம் 29 : 32 (OCVTA)
லேயாள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவா என் துன்பத்தைக் கண்டார்; நிச்சயம் என் கணவர் இப்பொழுது என்னிடம் அன்பாயிருப்பார்” என்று அவள் சொல்லி அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 29 : 33 (OCVTA)
மறுபடியும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் நேசிக்கப்படவில்லை என்பதை யெகோவா கண்டு இந்த மகனையும் எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 29 : 34 (OCVTA)
திரும்பவும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றபடியால், அவர் இப்பொழுது என்னுடன் ஒன்றிணைந்திருப்பார்” என்று சொன்னாள். அதனால் அவன் லேவி என்று பெயரிடப்பட்டான்.
ஆதியாகமம் 29 : 35 (OCVTA)
மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “இப்பொழுது நான் யெகோவாவைத் துதிப்பேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அதன்பின்பு அவள் பிள்ளைகள் பெறவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35