ஆதியாகமம் 20 : 1 (OCVTA)
ஆபிரகாமும் அபிமெலேக்கும் ஆபிரகாம் அவ்விடம் விட்டு நெகேப் பிரதேசத்திற்குப் போய் அங்கே காதேஷ், சூர் என்னும் இடங்களுக்கு இடையே வசித்தான். சிறிதுகாலம் அவன் கேராரில் தங்கினான்.
ஆதியாகமம் 20 : 2 (OCVTA)
ஆபிரகாம் அங்கே தன் மனைவி சாராளைத், “தன் சகோதரி” என்று சொல்லியிருந்தான். அப்பொழுது கேராரின் அரசன் அபிமெலேக்கு தன் ஆட்களை அனுப்பி, சாராளை எடுத்துக்கொண்டான்.
ஆதியாகமம் 20 : 3 (OCVTA)
ஆனால் இறைவன் ஒரு இரவில் அபிமெலேக்குவுக்கு கனவில் தோன்றி, “நீ கொண்டுவந்திருக்கும் பெண்ணின் காரணமாக நீ செத்து அழியப்போகிறாய்; அவள் இன்னொருவனுடைய மனைவியாய் இருக்கிறாள்” என்றார்.
ஆதியாகமம் 20 : 4 (OCVTA)
அபிமெலேக்கு அதுவரை சாராளை நெருங்கவில்லை; அதனால் அவன், “யெகோவாவே, குற்றமற்ற மக்களை நீர் அழிப்பீரோ?
ஆதியாகமம் 20 : 5 (OCVTA)
‘அவள் என் சகோதரி’ என்று அவன் எனக்குச் சொல்லவில்லையா? அவளும், ‘அவன் என் சகோதரன்’ என்று சொல்லவில்லையா? அதனால் சுத்த மனசாட்சியுடனும், குற்றமற்ற கைகளுடனுமே நான் இதைச் செய்தேன்” என்றான்.
ஆதியாகமம் 20 : 6 (OCVTA)
இறைவன் அந்த கனவில் அவனிடம், “ஆம், சுத்த மனசாட்சியுடனே நீ இதைச் செய்தாய் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் நீ எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைக் காத்துக்கொண்டேன். நீ அவளைத் தொட நான் உன்னை விடவில்லை
ஆதியாகமம் 20 : 7 (OCVTA)
அந்தப் பெண்ணை அவளுடைய கணவனிடமே திருப்பி அனுப்பிவிடு, அவன் ஒரு இறைவாக்கினன்; அவன் உனக்காக மன்றாடுவான், நீயும் பிழைப்பாய். நீ அவளைத் திருப்பி அனுப்பாவிட்டால், நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் சாகிறது நிச்சயம்” என்றார்.
ஆதியாகமம் 20 : 8 (OCVTA)
அடுத்தநாள் அதிகாலையிலே அபிமெலேக்கு எழுந்து, தன் அலுவலர்கள் அனைவரையும் அழைப்பித்து, நடந்த யாவற்றையும் அவர்களுக்குச் சொன்னான்; அப்போது அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
ஆதியாகமம் 20 : 9 (OCVTA)
அதன்பின்பு அபிமெலேக்கு ஆபிரகாமை அழைத்து, “நீ எங்களுக்குச் செய்திருப்பது என்ன? நீ என்மேலும் என் அரசின்மேலும் இத்தகைய குற்றத்தைச் சுமத்துவதற்கு நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? செய்யத் தகாதவற்றை நீ எனக்குச் செய்துவிட்டாயே!” என்றான்.
ஆதியாகமம் 20 : 10 (OCVTA)
மேலும் அபிமெலேக்கு, “நீ இதைச் செய்ததன் காரணமென்ன?” என்று ஆபிரகாமிடம் கேட்டான்.
ஆதியாகமம் 20 : 11 (OCVTA)
ஆபிரகாம் அதற்குப் மறுமொழியாக, “இந்த இடத்தில் நிச்சயமாக இறைவனைப்பற்றிய பயம் இல்லையென்றும், அதனால் என் மனைவியை அபகரிப்பதற்காக என்னைக் கொலைசெய்துவிடுவார்கள் என்றும் நினைத்தேன்.
ஆதியாகமம் 20 : 12 (OCVTA)
அவள் என் சகோதரி என்பது உண்மையே. அவள் என் தாய்க்குப் பிறக்காவிட்டாலும், என் தகப்பனின் மகளாய் இருக்கிறாள்; ஆனால் இப்பொழுது அவள் என் மனைவி.
ஆதியாகமம் 20 : 13 (OCVTA)
இறைவன் என்னை என் தந்தையின் குடும்பத்தைவிட்டு அலைந்து திரியப்பண்ணியபோது, நான் அவளிடம், ‘நாம் எங்கு சென்றாலும், என்னை உன் சகோதரன் என்றே நீ சொல்லவேண்டும். நீ என்மேல் கொண்டிருக்கும் அன்பை இவ்விதமாகவே காண்பிக்கவேண்டும்’ என்று சொல்லியிருந்தேன்” என்றான்.
ஆதியாகமம் 20 : 14 (OCVTA)
அப்பொழுது அபிமெலேக்கு, செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண், பெண் அடிமைகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவி சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்படைத்தான்.
ஆதியாகமம் 20 : 15 (OCVTA)
அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது. நீ விரும்பிய இடத்தில் குடியிரு” என்றான்.
ஆதியாகமம் 20 : 16 (OCVTA)
அவன் சாராளைப் பார்த்து, “உன் சகோதரனுக்கு ஆயிரம் சேக்கல்* அதாவது, சுமார் 25 பவுண்டுகள் அல்லது 12 கிலோகிராம் வெள்ளிக்காசைக் கொடுக்கிறேன். உனக்கு விரோதமான குற்றத்திற்கு ஈடாக இங்கு உன்னுடன் நிற்கிறவர்களுக்கு முன்பாக நான் இவற்றைக் கொடுக்கிறேன். நீ குற்றமற்றவள் என்று முழுவதுமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறாய்” என்றான்.
ஆதியாகமம் 20 : 17 (OCVTA)
ஆபிரகாம் இறைவனிடம் வேண்டுதல் செய்தபோது, அவர் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவனுடைய வீட்டிலுள்ள பணிப்பெண்களையும் குணமாக்கி, அவர்கள் மீண்டும் பிள்ளைப்பேறு உள்ளவர்களாகும்படிச் செய்தார்.
ஆதியாகமம் 20 : 18 (OCVTA)
ஏனெனில், ஆபிரகாமின் மனைவி சாராளின் நிமித்தம், யெகோவா அபிமெலேக்கின் வீட்டுப்பெண்களின் கருப்பைகளை எல்லாம் அடைத்திருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18