ஆதியாகமம் 14 : 1 (OCVTA)
ஆபிராம் லோத்துவை காப்பாற்றுதல் அந்நாட்களில் சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு, ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால்
ஆதியாகமம் 14 : 2 (OCVTA)
ஆகிய இவர்கள் சோதோமின் அரசன் பேரா, கொமோராவின் அரசன் பிர்சா, அத்மாவின் அரசன் சினாபு, செபோயீமின் அரசன் செமேபர், பேலா என்னும் சோவாரை ஆண்ட அரசன் ஆகியோருடன் யுத்தம்செய்யப் புறப்பட்டார்கள்.
ஆதியாகமம் 14 : 3 (OCVTA)
இந்த பிந்தைய அரசர்கள், தங்கள் படைகளை உப்புக்கடல் என்னும் சித்தீம் பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி அணிவகுத்தார்கள்.
ஆதியாகமம் 14 : 4 (OCVTA)
பன்னிரண்டு வருடங்களாக கெதர்லாகோமேரின் ஆதிக்கத்திற்குள் இருந்த இவர்கள், பதிமூன்றாம் வருடத்தில் அவனை எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள்.
ஆதியாகமம் 14 : 5 (OCVTA)
பதினாலாவது வருடத்தில், கெதர்லாகோமேரும் அவனுடன் கூட்டுச்சேர்ந்த அரசர்களும் ஒன்றுசேர்ந்து, அஸ்தரோத் கர்னாயீமில் இருந்த ரெப்பாயீமியரையும், காமிலிருந்த சூசிமியரையும், சாவே கீரியாத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,
ஆதியாகமம் 14 : 6 (OCVTA)
பாலைவனத்துக்கு அருகே எல்பாரான் வரையுள்ள, சேயீர் மலைநாட்டில் வாழ்ந்த ஓரியரையும் தோற்கடித்தார்கள்.
ஆதியாகமம் 14 : 7 (OCVTA)
பின்பு அவர்கள் மற்றப் பக்கமாகத் திரும்பி, காதேஸ் எனப்படும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியரின் முழுப் பிரதேசத்தையும் கைப்பற்றிக்கொண்டார்கள். அதோடு அத்சாத்சோன் தாமாரில் இருந்த எமோரியரையும் வெற்றிகொண்டார்கள்.
ஆதியாகமம் 14 : 8 (OCVTA)
அப்பொழுது அவர்களை எதிர்க்க சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் (அது சோவார்), பேலா ஆகிய நாடுகளின் அரசர்கள் அணிவகுத்துச்சென்று, சித்தீம் பள்ளத்தாக்கில்
ஆதியாகமம் 14 : 9 (OCVTA)
ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால், சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு ஆகிய நான்கு அரசர்களும், மற்ற ஐந்து அரசர்களையும் எதிர்த்துப் போரிட்டார்கள்.
ஆதியாகமம் 14 : 10 (OCVTA)
சித்தீம் பள்ளத்தாக்கில் பல நிலக்கீல் குழிகள் இருந்தன; அந்த போரில் சோதோம், கொமோரா நாட்டு அரசர்கள் தோல்வியடைந்து தப்பி ஓடியபோது, அவர்கள் அக்குழிகளில் விழுந்தார்கள்; மற்றவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.
ஆதியாகமம் 14 : 11 (OCVTA)
வெற்றியடைந்த நான்கு அரசர்களும், சோதோமிலும் கொமோராவிலும் இருந்த எல்லா பொருட்களையும், உணவுப் பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள்.
ஆதியாகமம் 14 : 12 (OCVTA)
அத்துடன், சோதோமில் குடியிருந்த ஆபிராமுடைய சகோதரனின் மகனான லோத்தையும், அவனது உடைமைகளையும் கொண்டுபோய்விட்டார்கள்.
ஆதியாகமம் 14 : 13 (OCVTA)
தப்பியோடிய ஒருவன், எபிரெயனாகிய ஆபிராமிடம் வந்து அச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம், எமோரியனாகிய மம்ரேக்குச் சொந்தமான கருவாலி மரங்களின் அருகே குடியிருந்தான்; மம்ரே என்பவன் ஆபிராமுடன் நட்பு உடன்படிக்கை செய்திருந்த எஸ்கோல், ஆநேர் என்போரின் சகோதரன்.
ஆதியாகமம் 14 : 14 (OCVTA)
தன் உறவினனான லோத்து கைதியாகக் கொண்டு போகப்பட்டதைக் கேள்விப்பட்ட ஆபிராம், தன் வீட்டில் பிறந்தவர்களான முந்நூற்றுப் பதினெட்டு பயிற்சி பெற்ற மனிதருடன் அவர்களை தாண்வரை துரத்திச்சென்றான்.
ஆதியாகமம் 14 : 15 (OCVTA)
அன்றிரவு ஆபிராம், தன் ஆட்களை அணிகளாகப் பிரித்து, எதிரிகளைத் தாக்கினான்; அவன் அவர்களை தமஸ்குவுக்கு வடக்கே ஓபாவரை துரத்தி முறியடித்தான்.
ஆதியாகமம் 14 : 16 (OCVTA)
அவன் லோத்தையும், அவனுடைய எல்லா உடைமைகளையும், பெண்களையும், மற்றவர்களையும் மீட்டுக்கொண்டு திரும்பினான்.
ஆதியாகமம் 14 : 17 (OCVTA)
ஆபிராம், கெதர்லாகோமேரையும், அவனுடைய நண்பர்களாகிய அரசர்களையும் தோற்கடித்துத் திரும்பி வந்தபின், சோதோமின் அரசன், ஆபிராமைச் சந்திப்பதற்காக அரச பள்ளத்தாக்கு எனப்படும் சாவே பள்ளத்தாக்கிற்கு வந்தான்.
ஆதியாகமம் 14 : 18 (OCVTA)
அப்பொழுது சாலேமின் அரசனான மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டுவந்தான். மெல்கிசேதேக்கு என்பவன் மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனாய் இருந்தான்.
ஆதியாகமம் 14 : 19 (OCVTA)
அவன் ஆபிராமை ஆசீர்வதித்து சொன்னது: “வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய மகா உன்னதமான இறைவனால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படட்டும்.
ஆதியாகமம் 14 : 20 (OCVTA)
உன் பகைவரை உன் கையில் ஒப்படைத்த, மகா உன்னதமான இறைவன், துதிக்கப்படுவாராக.” ஆபிராம் தன்னிடமிருந்த எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை அவனுக்குக் கொடுத்தான்.
ஆதியாகமம் 14 : 21 (OCVTA)
அதன்பின் சோதோமின் அரசன் ஆபிராமிடம், “ஆட்களை என்னிடம் கொடும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான்.
ஆதியாகமம் 14 : 22 (OCVTA)
ஆனால் ஆபிராம் சோதோமின் அரசனிடம், “நான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய மகா உன்னதமான யெகோவாவுக்கு என் கைகளை உயர்த்தி சத்தியம் செய்கிறதாவது:
ஆதியாகமம் 14 : 23 (OCVTA)
‘ஆபிராமை நானே செல்வந்தன் ஆக்கினேன்’ என்று நீ சொல்லாதபடி, உன்னிடமிருந்து ஒரு நூலையோ, செருப்பின் வாரையோ அல்லது உனக்குச் சொந்தமான பொருள் எதையுமோ நான் எடுத்துக்கொள்ளமாட்டேன்.
ஆதியாகமம் 14 : 24 (OCVTA)
என் ஆட்கள் சாப்பிட்டதையும் என்னுடன் வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகிய மனிதரின் பங்கையும் தவிர, வேறொன்றையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சேரவேண்டிய பங்கை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24