எஸ்றா 8 : 1 (OCVTA)
எஸ்றாவுடன் திரும்பிய குடும்பத் தலைவர்கள் அர்தசஷ்டா அரசனின் ஆட்சிக்காலத்தில் பாபிலோனில் இருந்து என்னுடன் வந்த குடும்பத்தலைவர்களும், அவர்களுடன் பதிவு செய்யப்பட்டவர்களும் இவர்களே:
எஸ்றா 8 : 2 (OCVTA)
பினெகாசின் வழித்தோன்றலைச் சேர்ந்த கெர்சோம்; இத்தாமரின் வழித்தோன்றலைச் சேர்ந்த தானியேல்; தாவீதின் வழித்தோன்றலைச் சேர்ந்த அத்தூஸ்;
எஸ்றா 8 : 3 (OCVTA)
அத்தூஸ் செக்கனியாவினதும் வழித்தோன்றலைச் சேர்ந்தவன். பாரோஷின் வழித்தோன்றலைச் சேர்ந்த சகரியா, அவனுடன் பதிவு செய்யப்பட்ட 150 மனிதர்;
எஸ்றா 8 : 4 (OCVTA)
பாகாத் மோவாபின் வழித்தோன்றலைச் சேர்ந்த செரகியாவின் மகன் எலியோனாய், அவனுடன் 200 மனிதர்;
எஸ்றா 8 : 5 (OCVTA)
சத்தூவின் வழித்தோன்றலைச் சேர்ந்த யகாசியேலின் மகன் செக்கனியா, அவனுடன் 300 மனிதர்;
எஸ்றா 8 : 6 (OCVTA)
ஆதீனின் வழித்தோன்றலைச் சேர்ந்த யோனத்தானின் மகன் ஏபேது, அவனுடன் 50 மனிதர்;
எஸ்றா 8 : 7 (OCVTA)
ஏலாமின் வழித்தோன்றலைச் சேர்ந்த அதலியாவின் மகன் எஷாயா, அவனுடன் 70 மனிதர்;
எஸ்றா 8 : 8 (OCVTA)
செபத்தியாவின் வழித்தோன்றலைச் சேர்ந்த மிகாயேலின் மகன் செபதியா; அவனுடன் 80 மனிதர்;
எஸ்றா 8 : 9 (OCVTA)
யோவாபின் வழித்தோன்றலைச் சேர்ந்த யெகியேலின் மகன் ஒபதியா, அவனுடன் 218 மனிதர்;
எஸ்றா 8 : 10 (OCVTA)
பானியின் வழித்தோன்றலைச் சேர்ந்த யொசிபியாவின் மகன் செலோமித், அவனுடன் 160 மனிதர்;
எஸ்றா 8 : 11 (OCVTA)
பெபாயின் வழித்தோன்றலைச் சேர்ந்த, பெபாயின் மகன் சகரியா, அவனுடன் 28 மனிதர்;
எஸ்றா 8 : 12 (OCVTA)
அஸ்காதின் வழித்தோன்றலைச் சேர்ந்த அக்கத்தானின் மகன் யோகனான்; அவனுடன் 110 மனிதர்;
எஸ்றா 8 : 13 (OCVTA)
அதோனிகாமின் வழித்தோன்றலில் கடைசியானவர்களான எலிபேலேத், ஏயெல், செமாயா என்பவர்களுடன் 60 மனிதர்;
எஸ்றா 8 : 14 (OCVTA)
பிக்வாயின் வழித்தோன்றலைச் சேர்ந்த ஊத்தாய், சக்கூர் என்பவர்கள்; அவர்களுடன் 70 மனிதர்.
எஸ்றா 8 : 15 (OCVTA)
எஸ்றாவின் பயணம் அகாவா பட்டணத்தை நோக்கி ஓடுகிற கால்வாய் அருகே நான் அவர்களை ஒன்றுகூட்டி அங்கே நாங்கள் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம்; நான் அங்கேயுள்ள மக்களையும், ஆசாரியர்களையும் பார்வையிட்டபோது, அங்கே லேவியர்கள் ஒருவரையும் நான் காணவில்லை.
எஸ்றா 8 : 16 (OCVTA)
எனவே நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரீப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மெசுல்லாம் என்னும் தலைவர்களையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் கல்விமான்களையும் என்னிடம் அழைப்பித்தேன்.
எஸ்றா 8 : 17 (OCVTA)
அவர்களை கசிப்பியா பட்டணத்திலுள்ள லேவிய தலைவனாகிய இத்தோவிடம் அனுப்பினேன்; எங்கள் இறைவனின் ஆலய வேலைக்கு பணிவிடைக்காரரை எங்களிடம் கொண்டுவரும்படி இத்தோவுக்கும், கசிப்பியாவிலுள்ள ஆலய பணியாட்களான அவனுடைய உறவினர்களுக்கும் சொல்லும்படி இவர்களிடம் சொல்லி அனுப்பினேன்.
எஸ்றா 8 : 18 (OCVTA)
எங்கள் இறைவனின் அன்புக்கரம் எங்கள்மேல் இருந்ததால், அவர்கள் செரெபியாவையும், அவன் மகன்களும், சகோதரர்களுமான பதினெட்டு பேரையும் கொண்டுவந்தார்கள். செரெபியா ஒரு திறமைவாய்ந்த மனிதன். அவன் இஸ்ரயேல் கோத்திரத்தைச் சேர்ந்த லேவியின் மகனான மகேலியின் வழித்தோன்றலைச் சேர்ந்தவன்.
எஸ்றா 8 : 19 (OCVTA)
அத்துடன் அஷபியாவையும், மெராரியின் வழிவந்த எஷாயாவையும், அவனுடைய சகோதரர்களும், பெறாமகன்களுமான இருபது பேரையும் கொண்டுவந்தார்கள்.
எஸ்றா 8 : 20 (OCVTA)
இன்னும் அவர்கள் லேவியர்களுக்கு உதவிசெய்யும்படி, தாவீதும் அவனுடைய அலுவலர்களும் நியமித்திருந்த ஆலய பணியாட்களிலிருந்து இருநூற்று இருபது பேரையும் எம்மிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லோரும் தங்கள் பெயர்களின்படியே பதிவு செய்யப்பட்டார்கள்.
எஸ்றா 8 : 21 (OCVTA)
எங்கள் இறைவனுக்கு முன்னால் எங்களைத் தாழ்த்தி எங்கள் பிரயாணத்தில் எங்களை வழிநடத்தி, எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் உடைமைகளையும் பாதுகாக்கும்படி வேண்டிக்கொள்வதற்கு அகாவா கால்வாய் அருகே நான் ஒரு உபவாசத்தை அறிவித்தேன்.
எஸ்றா 8 : 22 (OCVTA)
நாங்கள் அரசனிடம், “எங்கள் இறைவனின் கிருபையின்கரம் அவரை நோக்கிப் பார்க்கிற ஒவ்வொருவர்மேலும் இருக்கிறது என்றும், அவரை விட்டுவிடுகிறவர்களுக்கு எதிராக அவரது பெரிதான கோபம் இருக்கிறது” என்றும் சொல்லியிருந்தோம். இதனால் வழியிலே பகைவரிடமிருந்து எங்களைப் பாதுகாப்பதற்கு அரசனிடமிருந்து இராணுவவீரரையும், குதிரைவீரரையும் கேட்பதற்கு நான் வெட்கப்பட்டேன்.
எஸ்றா 8 : 23 (OCVTA)
எனவே நாங்கள் உபவாசித்து இதைக்குறித்து எங்கள் இறைவனிடம் விண்ணப்பம் செய்தோம். அவரும் எங்கள் மன்றாட்டுக்குப் பதிலளித்தார்.
எஸ்றா 8 : 24 (OCVTA)
அதன்பின்பு நான் செரெபியாவையும், அஷபியாவையும் அவர்களின் சகோதரர்கள் பத்துப் பேருமாக, பன்னிரண்டு பிரதான ஆசாரியர்களையும் பிரித்தெடுத்தேன்.
எஸ்றா 8 : 25 (OCVTA)
நான் அவர்களிடம், அரசனும் அவனுடைய ஆலோசகர்களும் அவனுடைய அலுவலர்களும் அங்கேயிருந்த எல்லா இஸ்ரயேலரும், இறைவனின் ஆலயத்திற்கென அன்பளிப்பாய்க் கொடுத்திருந்த காணிக்கையான வெள்ளி, தங்கம் மற்றும் பாத்திரங்களையும் நிறுத்துத்கொடுத்தேன்.
எஸ்றா 8 : 26 (OCVTA)
இவ்வாறு அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியை அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தேன். வெள்ளிப் பாத்திரங்கள் நூறு தாலந்து, தங்கம் நூறு தாலந்து,
எஸ்றா 8 : 27 (OCVTA)
ஆயிரம் தங்கக்காசு* அதாவது, சுமார் 8.4 கிலோகிராம் தங்கம் மதிப்புடைய இருபது தங்கக் கிண்ணங்கள், தங்கத்தைப்போல் மதிப்புடைய, மினுக்கப்பட்ட இரண்டு சிறந்த வெண்கல கிண்ணங்கள் ஆகியவற்றையும் நிறுத்துக் கொடுத்தேன்.
எஸ்றா 8 : 28 (OCVTA)
பின்பு நான் ஆசாரியர்களிடம், “நீங்கள் இந்த பாத்திரங்களுடன் யெகோவாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றீர்கள். வெள்ளியும், தங்கமும் உங்கள் தந்தையர்களின் இறைவனான யெகோவாவுக்குச் சுயவிருப்பக் காணிக்கைகளாகும்.
எஸ்றா 8 : 29 (OCVTA)
நீங்கள் அவற்றை எருசலேமிலுள்ள ஆசாரியர்கள், லேவியர்கள், இஸ்ரயேலின் குடும்பத் தலைவர்களுக்கு முன்பாக நிறுத்து, யெகோவாவின் களஞ்சியத்துக்குக் கொடுக்கும்வரை கவனமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என கூறினேன்.
எஸ்றா 8 : 30 (OCVTA)
அவ்வாறே ஆசாரியரும், லேவியர்களும் நிறுத்துக் கொடுக்கப்பட்ட வெள்ளி, தங்கம், அர்ப்பணிக்கப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்திற்குக் கொண்டுபோவதற்கென ஏற்றுக்கொண்டார்கள்.
எஸ்றா 8 : 31 (OCVTA)
அதன்பின்பு நாங்கள் அகாவா கால் வாயிலிருந்து, முதல் மாதம் பன்னிரண்டாம் நாள் எருசலேமுக்குப் போக பிரயாணமானோம்; எங்கள் இறைவனின் கரம் எங்களோடிருந்தது. அவர் எங்களை எதிரிகளிடமிருந்தும், வழியிலுள்ள திருடர்களிடமிருந்தும் பாதுகாத்தார்.
எஸ்றா 8 : 32 (OCVTA)
அப்படியே நாங்கள் எருசலேமுக்கு வந்துசேர்ந்து அங்கே மூன்று நாட்கள் இளைப்பாறினோம்.
எஸ்றா 8 : 33 (OCVTA)
நான்காம் நாள் நாங்கள் எங்கள் இறைவனின் ஆலயத்தில் அந்த வெள்ளியையும், தங்கத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட பாத்திரங்களையும் நிறுத்து, உரியாவின் மகனான ஆசாரியன் மெரெமோத்திடம் கொடுத்தோம். அங்கே அவனுடன் பினெகாசின் மகன் எலெயாசாரும் இருந்தான். அவர்களுடன் லேவியர்களான யெசுவாவின் மகன் யோசபாத்தும், பின்னூயின் மகன் நோவதியாவும் இருந்தனர்.
எஸ்றா 8 : 34 (OCVTA)
அவையெல்லாம் எண்ணப்பட்டு, நிறுக்கப்பட்டு, கணக்குவைக்கப்பட்டன. அந்த நேரத்தில் முழுநிறையும் பதிவு செய்யப்பட்டது.
எஸ்றா 8 : 35 (OCVTA)
அதன்பின்பு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் இஸ்ரயேலின் இறைவனுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்தினார்கள். அவர்கள் இஸ்ரயேல் முழுவதற்குமாக பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு செம்மறியாட்டுக் கடாக்களையும், எழுபத்தேழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் பலியிட்டார்கள். அத்துடன் பாவநிவாரண காணிக்கையாக பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்களைச் செலுத்தினார்கள். இவை எல்லாம் யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகச் செலுத்தப்பட்டன.
எஸ்றா 8 : 36 (OCVTA)
அத்துடன் அவர்கள் அரசனின் உத்தரவுகளை சிற்றரசர்களுக்கும் ஐபிராத்து நதிக்கு மறுகரையிலுள்ள ஆளுநர்களுக்கும் கொடுத்தார்கள். எனவே அவர்கள் எல்லோரும் மக்களுக்கும், இறைவனின் ஆலயத்திற்கும் தங்கள் உதவியை வழங்கினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36