எசேக்கியேல் 4 : 1 (OCVTA)
எருசலேமுக்கு வரவிருக்கும் அழிவு “மனுபுத்திரனே, நீ காய்ந்த செங்கல் ஒன்றை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதன்மேல் எருசலேம் நகரை வரைந்துகொள்.
எசேக்கியேல் 4 : 2 (OCVTA)
அதன்பின் அதை முற்றுகையிட்டு, அதற்கு விரோதமாய் முற்றுகைத்தளங்களை அமைத்து, கோட்டை கட்டி, மண்மேடுகளைப் போடு. அதற்கு விரோதமாக முகாம்களை அமைத்து, சுற்றிலும் சுவரை இடிக்கும் இயந்திரங்களை வை.
எசேக்கியேல் 4 : 3 (OCVTA)
பின்னர் இரும்புச்சட்டி ஒன்றை எடுத்து, அதை உனக்கும் நகருக்கும் இடையிலான இரும்புச்சுவராக்கி, அதற்கு நேராக உனது முகத்தைத் திருப்பிக்கொள். அது முற்றுகையிடப்பட்டிருக்கும். நீயே அதை முற்றுகையிடுவாய். இது இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஒரு அடையாளமாய் இருக்கும்.
எசேக்கியேல் 4 : 4 (OCVTA)
“மேலும் நீ இடது புறமாய்ப் படுத்து இஸ்ரயேல் குடும்பத்தின் பாவங்களை உன்மீது சுமந்துகொள். அவ்வாறு நீ படுத்திருக்கும் நாட்களின் அளவுக்கு அவர்களுடைய பாவங்களைச் சுமப்பாய்.
எசேக்கியேல் 4 : 5 (OCVTA)
அவர்களுடைய பாவங்களின் வருடங்களுக்கு ஏற்ப அதேயளவு நாட்களை நான் உனக்கு நியமித்திருக்கிறேன். ஆகவே, நீ முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரை இஸ்ரயேல் வீட்டாரின் பாவத்தைச் சுமப்பாய்.
எசேக்கியேல் 4 : 6 (OCVTA)
“அது நிறைவேறியபின் மீண்டும் நீ வலப்பக்கமாய்ப் படுத்து, நாற்பது நாட்கள்வரை யூதா வீட்டாரின் பாவத்தைச் சுமக்கவேண்டும். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வருடமாக நான் கணக்கிட்டிருக்கிறேன்.
எசேக்கியேல் 4 : 7 (OCVTA)
ஆகவே, எருசலேம் முற்றுகையிடப்படுவதைத் தொடர்ந்து காண்பித்து நீ உன் முகத்தைத் திருப்பி, உன் கரங்களை உயர்த்தி அதற்கு விரோதமாக இறைவாக்குச் சொல்லவேண்டும்.
எசேக்கியேல் 4 : 8 (OCVTA)
உனது முற்றுகையின் நாட்களை நிறைவேற்றம்வரை, நீ ஒருபுறம் இருந்து மறுபுறம் புரளாதபடிக்குக் கயிறுகளால் உன்னைக் கட்டுவேன்.
எசேக்கியேல் 4 : 9 (OCVTA)
“நீ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமைகோதுமை ஆகியவற்றை எடுத்துக்கொள். அவைகளைப் பாத்திரம் ஒன்றிலிட்டு உனக்கு அப்பம் சுடுவாய். நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும் முந்நூற்றுத்தொண்ணூறு நாட்களும் அவைகளைச் சாப்பிடவேண்டும்.
எசேக்கியேல் 4 : 10 (OCVTA)
ஒரு நாளைக்கு இருபது சேக்கல்* அதாவது, சுமார் 8 அவுன்ஸ் அல்லது சுமார் 230 கிராம் ஆகும் உணவை நிறுத்துத் தினமும் குறிக்கப்பட்ட நேரத்தில் அதைச் சாப்பிடு.
எசேக்கியேல் 4 : 11 (OCVTA)
அத்துடன் ஆறில் ஒரு ஹின் அதாவது, சுமார் 2/3 காலாண்டு அல்லது சுமார் 0.6 லிட்டர் ஆகும் அளவு தண்ணீரையும் அளந்து குறிக்கப்பட்ட நேரத்தில் குடிக்கவேண்டும்.
எசேக்கியேல் 4 : 12 (OCVTA)
ஒவ்வொரு நாளும் உன் உணவை வாற்கோதுமை அப்பத்தைப்போலவே தயார் செய். அதை அவர்கள் காணும்படி மனித கழிவுகளை எரிபொருளாக்கி, அந்த நெருப்பிலேயே அதைச் சுடவேண்டும்.”
எசேக்கியேல் 4 : 13 (OCVTA)
இவ்விதமாகவே, “இஸ்ரயேல் மக்கள் நான் அவர்களைத் துரத்தும் நாடுகளிடையே தமது உணவைத் தீட்டுள்ளதாய் சாப்பிடுவார்கள்” என்று யெகோவா சொன்னார்.
எசேக்கியேல் 4 : 14 (OCVTA)
அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, அப்படியல்ல; நான் என்னை ஒருபோதும் கறைப்படுத்தவில்லை. என் இளவயதுமுதல் இன்றுவரை இயற்கையாய் இறந்ததையோ, காட்டு மிருகங்களால் கொல்லப்பட்டதையோ நான் சாப்பிட்டதே இல்லையே! அசுத்தமான இறைச்சி எதுவுமே என் வாய்க்குள் போனதும் இல்லையே!” என்றேன்.
எசேக்கியேல் 4 : 15 (OCVTA)
அதற்கு அவர், “சரி; அப்படியானால் மனித கழிவுக்கு பதிலாக பசுவின் சாணத்தில் அப்பத்தைச்சுட உனக்கு அனுமதியளிக்கிறேன்” என்றார்.
எசேக்கியேல் 4 : 16 (OCVTA)
மேலும் அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எருசலேமில் வழங்கப்படும் உணவை நிறுத்தப்போகிறேன். மக்கள் அப்பத்தை நிறை பார்த்து ஏக்கத்தோடு சாப்பிடுவார்கள். தண்ணீரையும் அளவு பார்த்து வேதனையோடே குடிப்பார்கள்.
எசேக்கியேல் 4 : 17 (OCVTA)
ஏனெனில் அங்கே உணவும் தண்ணீரும் குறைந்துபோகும். அவர்கள் ஒருவரைப்பார்த்து ஒருவர் கலக்கமடைந்து, தங்கள் பாவத்தினிமித்தம் நலிந்துபோவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17