எசேக்கியேல் 29 : 1 (OCVTA)
எகிப்திற்கு விரோதமாய் இறைவாக்கு பார்வோன் மீதான தீர்ப்பு அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பத்தாம் வருடம், பத்தாம் மாதம், பன்னிரண்டாம் நாளிலே, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
எசேக்கியேல் 29 : 2 (OCVTA)
“மனுபுத்திரனே, நீ எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தை திருப்பி, அவனுக்கும் முழு எகிப்திற்கும் விரோதமாய் இறைவாக்குரைத்து சொல்.
எசேக்கியேல் 29 : 3 (OCVTA)
நீ அவனோடு பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ ‘எகிப்தின் அரசனாகிய பார்வோனே, நீரோடைகளின் நடுவே கிடக்கும் பெரும் இராட்சத முதலையே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். “நீயோ, நைல் நதி என்னுடையது; அதை எனக்காக நானே உண்டாக்கினேன்” என சொல்லிக்கொள்கிறாய்.
எசேக்கியேல் 29 : 4 (OCVTA)
ஆனால் நான் உன் தாடைகளில் தூண்டில் மாட்டி, உன் நீரோடைகளின் மீன்களை உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன். உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும் எல்லா மீன்களோடும் சேர்த்து, உன் நீரோடைகளின் நடுவிலிருந்து நான் உன்னை இழுத்தெடுப்பேன்.
எசேக்கியேல் 29 : 5 (OCVTA)
நான் உன்னையும் உன் நீரோடைகளின் எல்லா மீன்களையும் பாலைவனத்தில் விட்டுவிடுவேன். திறந்த வெளியிலே நீ விழுவாய். நீ சேர்க்கப்படவோ எடுக்கப்படவோமாட்டாய். நான் உன்னைப் பூமியின் மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.
எசேக்கியேல் 29 : 6 (OCVTA)
6 அப்பொழுது எகிப்தில் வாழும் அனைவரும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். “ ‘நீ இஸ்ரயேலருக்கு நாணல் புல்லினாலான ஊன்றுகோலாயிருந்தாய்.
எசேக்கியேல் 29 : 7 (OCVTA)
அவர்கள் உன்னைத் தங்கள் கைகளினால் இறுக்கி பிடித்தபோது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகச்செய்வாய்.
எசேக்கியேல் 29 : 8 (OCVTA)
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நானே உனக்கு விரோதமாய் ஒரு வாளைக் கொண்டுவந்து, உன் மனிதர்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன்.
எசேக்கியேல் 29 : 9 (OCVTA)
எகிப்து அழிந்து பாழ்நிலமாகும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். “ ‘நைல் நதி என்னுடையது; “நானே அதை உன்டாக்கினேன்” என்று நீ சொன்னாய் அல்லவோ?
எசேக்கியேல் 29 : 10 (OCVTA)
ஆகவே நான் உனக்கும் உன் நீரோடைகளுக்கும் விரோதமாக இருக்கிறேன். மிக்தோல் தொடக்கம்முதல் அஸ்வான்வரை, எத்தியோப்பியாவின் எல்லைவரையுள்ள எகிப்து நாட்டை இடிபாடுகளுடைய பாழ்நிலமாக்குவேன்.
எசேக்கியேல் 29 : 11 (OCVTA)
மனித கால்களோ, மிருகத்தின் கால்களோ அதைக் கடப்பதில்லை. நாற்பது வருடங்களுக்கு ஒருவரும் அங்கு வாழப்போவதுமில்லை.
எசேக்கியேல் 29 : 12 (OCVTA)
பாழாய்ப்போன நாடுகளின் மத்தியில் எகிப்தையும் நான் பாழாக்குவேன். இடிபாடுகளுள்ள பட்டணங்களிடையே, அவளது பட்டணம் நாற்பது வருடங்கள் கிடக்கும். நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறிப்போகச்செய்து அவர்களை நாடுகளுக்கூடே சிதறடிப்பேன்.
எசேக்கியேல் 29 : 13 (OCVTA)
“ ‘எனினும், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே நான் அந்த நாற்பது வருடங்களின் முடிவில், எகிப்தியரை, சிதறடிக்கப்பட்டிருந்த பல நாடுகளுக்குள்ளும் இருந்து, ஒன்றுசேர்ப்பேன்.
எசேக்கியேல் 29 : 14 (OCVTA)
திரும்பவும் நான் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து கொண்டுவந்து அவர்களுடைய முன்னோரின் நாடாகிய எகிப்தின் பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்கள் ஒரு சிறிய அரசாக இருப்பார்கள்.
எசேக்கியேல் 29 : 15 (OCVTA)
அது அரசுகளிலெல்லாம் சிறியதாயிருக்கும். இனியொருபோதும் மற்ற நாடுகளின்மேல் தன்னை அது உயர்த்தாது. இனியொருகாலமும் அது நாடுகளுக்குமேல் ஆளுகைசெய்யாத அளவுக்கு அதை நான் பலவீனப்படுத்துவேன்.
எசேக்கியேல் 29 : 16 (OCVTA)
எகிப்து இனியொருபோதும் இஸ்ரயேலரின் நம்பிக்கையின் ஆதாரமாய் இருக்கமாட்டாது. ஆனால் ஆதரவுக்காக அவளிடம் திரும்பியவர்களின் பாவத்தின் ஒரு ஞாபகமாய் அது இருக்கும். அப்பொழுது அவர்கள் ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.’ ”
எசேக்கியேல் 29 : 17 (OCVTA)
எகிப்து நேபுகாத்நேச்சாருக்குக் கொடுக்கப்படுதல் அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட இருபத்தேழாம் வருடம், முதலாம் மாதம், முதலாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம்,
எசேக்கியேல் 29 : 18 (OCVTA)
“மனுபுத்திரனே, பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சார் தனது இராணுவத்தைத் தீருவுக்கு விரோதமாய் அனுப்பி, கடும் தாக்குதலை மேற்கொண்டான். ஒவ்வொருவனின் தலையும் மொட்டையாக்கப்பட்டு, ஒவ்வொருவனின் தோலும் புண்ணாகும்வரை தோலுரிக்கப்பட்டன. அப்படியிருந்தும் அவனும் அவனுடைய இராணுவமும், தீருவுக்கு எதிராக நடத்திய படையெடுப்பின் பலனைப் பெறவில்லை.”
எசேக்கியேல் 29 : 19 (OCVTA)
ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் எகிப்தை பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாருக்குக் கையளிக்கப்போகிறேன். அதன் செல்வத்தை அவன் எடுத்துக்கொண்டு போவான். அவன் தன் இராணுவங்களுக்குக் கூலியாக நாட்டைச் சூறையாடிக் கொள்ளையிடுவான்.
எசேக்கியேல் 29 : 20 (OCVTA)
அவனும் அவனுடைய இராணுவமும் அதை எனக்காகச் செய்தபடியினால், அம்முயற்சிக்கு வெகுமதியாக எகிப்தை அவனுக்குக் கொடுத்திருக்கிறேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
எசேக்கியேல் 29 : 21 (OCVTA)
“அந்த நாளிலே நான் இஸ்ரயேலருக்குப் புதுப்பெலனைக் கொடுத்து, அவர்கள் மத்தியில் உன் வாயைத் திறப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21