யாத்திராகமம் 9 : 1 (OCVTA)
ஐந்தாம் வாதை வளர்ப்பு மிருகங்கள்மேல் அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போய் எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு போகவிடு.
யாத்திராகமம் 9 : 2 (OCVTA)
நீ அவர்களைப் போகவிட மறுத்து, அவர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால்,
யாத்திராகமம் 9 : 3 (OCVTA)
வயல்வெளிகளிலுள்ள உங்கள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், மந்தைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் ஆகிய எல்லா வளர்ப்பு மிருகங்கள்மேலும் கொடிய வாதையை யெகோவாவினுடைய கரம் கொண்டுவரும்.
யாத்திராகமம் 9 : 4 (OCVTA)
இஸ்ரயேலருடைய வளர்ப்பு மிருகங்களுக்கும், எகிப்தியருடைய வளர்ப்பு மிருகங்களுக்கும் இடையில் யெகோவா வித்தியாசம் காட்டுவார். அதனால் இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகாது’ என்று அவனுக்குச் சொல்” என்றார்.
யாத்திராகமம் 9 : 5 (OCVTA)
“யெகோவா நாளைக்கே இதை இந்த நாட்டில் செய்வார்” என்று சொல்லி யெகோவா ஒரு காலத்தைக் குறிப்பிட்டார்.
யாத்திராகமம் 9 : 6 (OCVTA)
மறுநாள் அப்படியே யெகோவா செய்தார்: எகிப்தியரின் வளர்ப்பு மிருகங்கள் எல்லாம் செத்துப்போனது; ஆனால் இஸ்ரயேலருக்குச் சொந்தமான மிருகம் ஒன்றாயினும் சாகவில்லை.
யாத்திராகமம் 9 : 7 (OCVTA)
பார்வோன் அதுபற்றி விசாரிக்க ஆட்களை அனுப்பி, இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்பதை அறிந்தான். ஆனாலும் அவனுடைய இருதயம் தொடர்ந்தும் கடினமாகவே இருந்தது, அவன் மக்களைப் போகவிடவில்லை.
யாத்திராகமம் 9 : 8 (OCVTA)
ஆறாம் வாதையாகிய கொப்புளங்கள் அப்பொழுது யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது: “நீங்கள் சூளையில் இருந்து கைநிறையப் புகையின் கரித்தூளை அள்ளிக்கொள்ளுங்கள். மோசே அதைப் பார்வோனுக்கு முன்பாக ஆகாயத்தில் வீசட்டும்.
யாத்திராகமம் 9 : 9 (OCVTA)
அது எகிப்து நாடு முழுவதிலும் தூசியாகி, நாடெங்குமுள்ள மனிதர்கள்மேலும், மிருகங்கள்மேலும் எரிச்சலூட்டும் கொப்புளங்களை உண்டாக்கும்” என்றார்.
யாத்திராகமம் 9 : 10 (OCVTA)
அப்படியே அவர்கள் சூளையிலிருந்து புகையின் கரித்தூளை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்குமுன் போய் நின்றார்கள். மோசே அதை ஆகாயத்தை நோக்கி வீசினான். உடனே மனிதர்மேலும் மிருகங்கள்மேலும் எரிச்சலூட்டும் கொப்புளங்கள் உண்டாயின.
யாத்திராகமம் 9 : 11 (OCVTA)
அவை மந்திரவாதிகள், எகிப்தியர் எல்லோர்மேலும் உண்டானதால், மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்க முடியவில்லை.
யாத்திராகமம் 9 : 12 (OCVTA)
யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயத்தை மேலும் கடினப்படுத்தினார். அவன் மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை.
யாத்திராகமம் 9 : 13 (OCVTA)
ஏழாம் வாதையாகிய ஆலங்கட்டி மழை அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ அதிகாலையில் எழுந்து பார்வோனின் எதிரில் போய் அவனிடம், எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு அவர்களைப் போகவிடு.
யாத்திராகமம் 9 : 14 (OCVTA)
இல்லையென்றால் இம்முறை உனக்கும், உன் அதிகாரிகளுக்கும், உன் நாட்டு மக்களுக்கும் எதிராக எனது வாதைகளின் முழு தாக்கத்தையும் அனுப்புவேன். இதனால் பூமியெங்கும் எனக்கு நிகரானவர் யாருமே இல்லை என்பதை நீ அறிந்துகொள்வாய்.
யாத்திராகமம் 9 : 15 (OCVTA)
ஏனெனில், நான் நினைத்திருந்தால் என் கரத்தை நீட்டி, பூமியிலிருந்து உங்களை முற்றிலும் அழித்துப்போடும் வாதை ஒன்றினால் உன்னையும் உன் மக்களையும் அப்பொழுதே அடித்திருப்பேன்.
யாத்திராகமம் 9 : 16 (OCVTA)
ஆனாலும் நான் என் வல்லமையை உனக்குக் காட்டி, பூமியெங்கும் என்னுடைய பெயரை அறிவிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன்.
யாத்திராகமம் 9 : 17 (OCVTA)
நீயோ இன்னும் என்னுடைய மக்களுக்கு விரோதமாய் இருந்து, அவர்களைப் போகவிடாமல் இருக்கிறாய்.
யாத்திராகமம் 9 : 18 (OCVTA)
ஆதலால் நாளை இதே நேரத்தில், எகிப்து நாடு உண்டானதுமுதல் இன்றுவரை அங்கே ஒருபோதும் விழுந்திராத மிகக் கடுமையான ஆலங்கட்டி மழையை அனுப்புவேன்.
யாத்திராகமம் 9 : 19 (OCVTA)
ஆகையால், இப்பொழுதே உன் வளர்ப்பு மிருகங்களையும், வயல்வெளியிலிருக்கும் உனக்குச் சொந்தமான மற்ற யாவற்றையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவரும்படி உத்தரவு கொடு. ஏனெனில் உள்ளே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் எல்லா மனிதர்மேலும், மிருகங்கள்மேலும் பனிக்கட்டிகள் விழும். அவர்கள் இறந்துவிடுவார்கள்’ என்று சொல்” என்றார்.
யாத்திராகமம் 9 : 20 (OCVTA)
யெகோவாவின் வார்த்தைக்குப் பயந்த பார்வோனின் அதிகாரிகள் தங்கள் அடிமைகளையும், வளர்ப்பு மிருகங்களையும் உள்ளே கொண்டுவருவதற்கு விரைந்து சென்றனர்.
யாத்திராகமம் 9 : 21 (OCVTA)
யெகோவாவினுடைய வார்த்தையை அலட்சியப் படுத்தியவர்களோ, தங்கள் அடிமைகளையும், வளர்ப்பு மிருகங்களையும் வெளியிலே விட்டுவிட்டார்கள்.
யாத்திராகமம் 9 : 22 (OCVTA)
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்து நாடெங்கும் ஆலங்கட்டி மழை விழும்படி உன் கையை ஆகாயத்துக்கு நேராக நீட்டு. அப்பொழுது மனிதர்மேலும், மிருகங்கள்மேலும், எகிப்தின் வயல்வெளியில் வளர்கின்ற எல்லாவற்றின்மேலும் பனிக்கட்டி விழும்” என்றார்.
யாத்திராகமம் 9 : 23 (OCVTA)
மோசே அவ்விதமே ஆகாயத்தை நோக்கித் தன் கோலை நீட்டியபோது, யெகோவா இடிமுழக்கத்தையும், ஆலங்கட்டி மழையையும் அனுப்பினார். மின்னல் தரைமட்டும் மின்னிப் பாய்ந்தது. இவ்வாறு யெகோவா பனிக்கட்டிகளை எகிப்து நாட்டின்மேல் பொழிந்தார்.
யாத்திராகமம் 9 : 24 (OCVTA)
பனிக்கட்டிகள் விழுந்தன. மின்னல் முன்னும் பின்னுமாக மின்னியது. எகிப்து ஒரு நாடான காலமுதல் ஒருபோதும் ஏற்படாத, கடுமையான புயலாய் அது இருந்தது.
யாத்திராகமம் 9 : 25 (OCVTA)
ஆலங்கட்டி மழை எகிப்து நாடெங்கும் பெய்து, வயல்வெளியிலுள்ள மனிதர்களும் மிருகங்களுமான எல்லாவற்றின்மேலும் விழுந்தது; வயல்வெளிகளில் முளைத்த பயிர்களையும் அடித்தது, மரங்களின் இலைகளும் உதிர்க்கப்பட்டன.
யாத்திராகமம் 9 : 26 (OCVTA)
இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்த கோசேன் பிரதேசம் மாத்திரமே ஆலங்கட்டி மழை விழாத இடமாயிருந்தது.
யாத்திராகமம் 9 : 27 (OCVTA)
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். யெகோவா நியாயமானவர். நானும் என் மக்களுமே தவறு செய்திருக்கிறோம்.
யாத்திராகமம் 9 : 28 (OCVTA)
யெகோவாவிடம் மன்றாடுங்கள். இந்த இடிமுழக்கமும், ஆலங்கட்டி மழையுமே எங்களுக்குப் போதும். நான் உங்களைப் போகவிடுவேன். இனியும் நீங்கள் இங்கிருக்க வேண்டியதில்லை” என்றான்.
யாத்திராகமம் 9 : 29 (OCVTA)
அதற்கு மோசே, “நான் பட்டணத்தைவிட்டுப் போனவுடன் என் கைகளை உயர்த்தி, யெகோவாவிடம் மன்றாடுவேன். அப்பொழுது இடிமுழக்கம் ஓய்ந்து பனிக்கட்டியும் நின்றுபோகும். பூமி யெகோவாவினுடையது என்று நீர் அறிந்துகொள்வீர்.
யாத்திராகமம் 9 : 30 (OCVTA)
ஆனால் நீரும், உமது அதிகாரிகளும் இறைவனாகிய யெகோவாவுக்கு இன்னும் பயப்படவில்லை என்பதை நான் அறிவேன்” என்றான்.
யாத்திராகமம் 9 : 31 (OCVTA)
சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டன. அவ்வேளையில் வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது, சணல் பூத்திருந்தது.
யாத்திராகமம் 9 : 32 (OCVTA)
கோதுமையும், கம்பும் முற்றாதிருந்தபடியால் அவை அழிக்கப்படவில்லை.
யாத்திராகமம் 9 : 33 (OCVTA)
பின்பு மோசே பார்வோனை விட்டு பட்டணத்துக்கு வெளியே வந்தான். அவன் யெகோவாவை நோக்கித் தன் கைகளை உயர்த்தினான்; உடனே இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிட்டன. மழையும் தொடர்ந்து தரையில் பெய்யாமல் ஓய்ந்தது.
யாத்திராகமம் 9 : 34 (OCVTA)
மழையும், பனிக்கட்டியும், இடிமுழக்கமும் நின்றதைப் பார்வோன் கண்டபோது, அவன் திரும்பவும் பாவம் செய்தான். அவனும் அவனுடைய அதிகாரிகளும் தங்களுடைய இருதயங்களை இன்னும் கடினப்படுத்தினார்கள்.
யாத்திராகமம் 9 : 35 (OCVTA)
யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35