யாத்திராகமம் 7 : 1 (OCVTA)
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார், நான் உன்னைப் பார்வோனுக்கு இறைவனைப்போல் ஆக்கியிருக்கிறேன், உன் சகோதரன் ஆரோன் உன் இறைவாக்கினனாக இருப்பான்.
யாத்திராகமம் 7 : 2 (OCVTA)
நான் உனக்குக் கட்டளையிடும் யாவற்றையும் நீ சொல்லவேண்டும், உன் சகோதரன் ஆரோன் பார்வோனிடம் இஸ்ரயேலரை அவனுடைய நாட்டிலிருந்து வெளியே போகவிடும்படிச் சொல்லவேண்டும்.
யாத்திராகமம் 7 : 3 (OCVTA)
ஆனாலும் நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன், எகிப்தில் என் அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் அதிகமாக்கினாலும்,
யாத்திராகமம் 7 : 4 (OCVTA)
பார்வோன் உனக்குச் செவிகொடுக்கமாட்டான். அப்பொழுது நான் எகிப்தின்மேல் என் கரத்தை வைத்து, தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களால், என் மக்களாகிய இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவேன்; அவர்களைக் கோத்திரப் பிரிவுகளாக கொண்டுவருவேன்.
யாத்திராகமம் 7 : 5 (OCVTA)
நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவரும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர் அறிந்துகொள்வார்கள்.”
யாத்திராகமம் 7 : 6 (OCVTA)
மோசேயும் ஆரோனும் யெகோவா தமக்குக் கட்டளையிட்டதையே செய்தார்கள்.
யாத்திராகமம் 7 : 7 (OCVTA)
அவர்கள் பார்வோனிடம் பேசின நாட்களில், மோசே 80 வயதுடையவனாகவும், ஆரோன் 83 வயதுடையவனாகவும் இருந்தார்கள்.
யாத்திராகமம் 7 : 8 (OCVTA)
ஆரோனின் கோல் பாம்பாக மாறுதல் யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது,
யாத்திராகமம் 7 : 9 (OCVTA)
“பார்வோன் உங்களிடம் ஒரு அற்புதத்தைக் கேட்பான். அப்பொழுது நீ ஆரோனிடம், ‘உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகக் கீழே எறிந்துவிடு’ என்று சொல், அது பாம்பாக மாறும்” என்றார்.
யாத்திராகமம் 7 : 10 (OCVTA)
அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய் யெகோவாவின் கட்டளைப்படி செய்தார்கள். பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக ஆரோன் தன் கோலைக் கீழே எறிந்தபோது, அது பாம்பாக மாறியது.
யாத்திராகமம் 7 : 11 (OCVTA)
அப்பொழுது பார்வோன், ஞானிகளையும் சூனியக்காரரையும் அழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள்:
யாத்திராகமம் 7 : 12 (OCVTA)
அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் கோலைக் கீழே போட்டபோது அவை பாம்பாக மாறின. ஆனால் ஆரோனின் கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிவிட்டது.
யாத்திராகமம் 7 : 13 (OCVTA)
ஆனாலும், யெகோவா சொல்லியிருந்தபடியே, பார்வோனுடைய இருதயம் கடினமாகியது; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
யாத்திராகமம் 7 : 14 (OCVTA)
முதலாம் வாதையாகிய இரத்தம் அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோனின் இருதயம் கடினமாகிவிட்டது; அவன் இஸ்ரயேலரை போகவிட மறுக்கிறான்.
யாத்திராகமம் 7 : 15 (OCVTA)
காலையில் பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது நீ அவனிடம் போ. பாம்பாக மாறிய கோலை உன் கையில் எடுத்துக்கொண்டு நைல் நதிக்கரையிலே அவனைச் சந்திக்கக் காத்து நில்.
யாத்திராகமம் 7 : 16 (OCVTA)
அவன் வந்ததும் நீ அவனிடம், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா என்னை உன்னிடம் அனுப்பி, பாலைவனத்திலே என்னை வழிபடும்படி என்னுடைய மக்களைப் போகவிடு’ என்று சொல்லியிருந்தார். ஆனாலும் இதுவரை நீர் அதைக் கேட்கவில்லை.
யாத்திராகமம் 7 : 17 (OCVTA)
அதனால் யெகோவா உனக்குச் சொல்வது இதுவே: ‘நானே யெகோவா என்பதை இதனால் நீ அறிந்துகொள்வாய்: என் கையிலுள்ள கோலினால் நைல் நதியின் தண்ணீரை அடிப்பேன், உடனே அது இரத்தமாக மாறும்.
யாத்திராகமம் 7 : 18 (OCVTA)
நைல் நதியிலுள்ள மீன்கள் செத்து, நதியோ நாற்றமெடுக்கும்; எகிப்தியரால் அதன் தண்ணீரைக் குடிக்கமுடியாமல் போகும்’ என்று சொல்” என்றார்.
யாத்திராகமம் 7 : 19 (OCVTA)
பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘எகிப்திலே தண்ணீருள்ள இடங்களான ஆறுகள், அருவிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் உள்ள எல்லா இடங்களின் மேலும் உன் கோலை எடுத்து, உன் கையை நீட்டு’ என்று சொல். அவை இரத்தமாக மாறிவிடும். எகிப்து எங்கும் இரத்தம் இருக்கும், மரத்தினால் மற்றும் கல்லினாலான பாத்திரங்களிலும் உள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்றார்.
யாத்திராகமம் 7 : 20 (OCVTA)
மோசேயும் ஆரோனும் யெகோவா கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக தன் கோலை நீட்டி, நைல் நதியிலிருந்த தண்ணீரின்மேல் அடித்தான்; தண்ணீர் முழுவதும் இரத்தமாக மாறிற்று.
யாத்திராகமம் 7 : 21 (OCVTA)
நைல் நதியிலுள்ள மீன்களெல்லாம் செத்துப்போயின; எகிப்தியர் நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி நைல் நதி துர்நாற்றமெடுத்தது. எகிப்தில் எங்கும் இரத்தமாயிருந்தது.
யாத்திராகமம் 7 : 22 (OCVTA)
எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்தார்கள், அதனால் பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை.
யாத்திராகமம் 7 : 23 (OCVTA)
அதற்குப் பதிலாக பார்வோன் திரும்பி, தன் அரண்மனைக்குள் போய்விட்டான், அவன் யெகோவா செய்ததைக்கூட பொருட்படுத்தவில்லை.
யாத்திராகமம் 7 : 24 (OCVTA)
ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியாதிருந்ததால், எகிப்தியர் குடிநீருக்காக நைல் நதியோரமெங்கும் தோண்டினார்கள்.
யாத்திராகமம் 7 : 25 (OCVTA)
இரண்டாம் வாதையாகிய தவளைகள் யெகோவா நைல் நதியை இரத்தமாக மாற்றி ஏழு நாட்கள் கடந்தன.
❮
❯