யாத்திராகமம் 3 : 1 (OCVTA)
மோசேயும் எரிகின்ற புதரும் மோசே மீதியான் நாட்டு ஆசாரியரான தன் மாமன் எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; ஒரு நாள் அவன் மந்தையை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தின் தூரமான பகுதிக்கு, ஓரேப்* ஓரேப் என்பது சீனாய் மலையின் மற்றொரு பெயர். என்னும் இறைவனின் மலைக்கு வந்தான்.
யாத்திராகமம் 3 : 2 (OCVTA)
அப்பொழுது அங்கே புதரிலிருந்து வந்த ஒரு அக்கினி ஜூவாலையில், யெகோவாவின் தூதனானவர் அவனுக்குக் காட்சியளித்தார்; அந்தப் புதரில் நெருப்பு பற்றியிருந்தும் எரிந்து போகாதிருந்ததை மோசே கண்டான்.
யாத்திராகமம் 3 : 3 (OCVTA)
எனவே மோசே, “புதர் எரிந்து போகாதிருக்கும் இந்த ஆச்சரியமான காட்சியை நான் போய்ப்பார்ப்பேன்” என்றான்.
யாத்திராகமம் 3 : 4 (OCVTA)
அவன் அதைப் பார்ப்பதற்காக அங்கு போயிருந்ததை யெகோவா கண்டபோது, இறைவன் புதரின் நடுவிலிருந்து, “மோசே! மோசே!” என்று அவனைக் கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான்.
யாத்திராகமம் 3 : 5 (OCVTA)
இறைவன் அவனிடம், “இதற்குமேல் நெருங்கி வராதே, உன் காலிலுள்ள செருப்பைக் கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்தமான நிலமாய் இருக்கிறது” என்றார்.
யாத்திராகமம் 3 : 6 (OCVTA)
மேலும் அவர், “நான் உன் முற்பிதாக்களின் இறைவனாகிய ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்” என்றார். அதைக் கேட்டதும் மோசே இறைவனைப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
யாத்திராகமம் 3 : 7 (OCVTA)
பின்னும் யெகோவா, “எகிப்தில் என் மக்களின் துன்பத்தை நான் உண்மையாகவே கண்டேன்; அடிமைகளை நடத்தும் கண்காணிகளின் நிமித்தம் அவர்கள் அழுவதைக் கேட்டேன்; அவர்களுடைய துன்பங்களைக்குறித்து கரிசனையாயிருக்கிறேன்.
யாத்திராகமம் 3 : 8 (OCVTA)
அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவே வந்திருக்கிறேன்; அவர்களைப் பாலும் தேனும் வழிந்தோடுகிற, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அந்நாடு கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் வாழும் நாடாகும்.
யாத்திராகமம் 3 : 9 (OCVTA)
இப்பொழுதும் இஸ்ரயேலரின் அழுகுரல் எனக்கு எட்டியிருக்கிறது; எகிப்தியர் அவர்களை ஒடுக்கும் விதத்தைக் கண்டிருக்கிறேன்.
யாத்திராகமம் 3 : 10 (OCVTA)
ஆகையால் நீ இப்பொழுதே போ. நான் என் மக்களான இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” என்றார்.
யாத்திராகமம் 3 : 11 (OCVTA)
ஆனால் மோசேயோ இறைவனிடம், “பார்வோனிடம் போய், இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நான் யார்?” என்றான்.
யாத்திராகமம் 3 : 12 (OCVTA)
அதற்கு இறைவன், “நான் உன்னோடு இருப்பேன். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே உனக்கு அடையாளம்: நீ எகிப்திலிருந்து மக்களை வெளியே கொண்டுவந்ததும் நீங்கள் இந்த மலையிலேயே இறைவனை வழிபடுவீர்கள்” என்றார்.
யாத்திராகமம் 3 : 13 (OCVTA)
அப்பொழுது மோசே இறைவனிடம், “நான் இஸ்ரயேலரிடம் போய், ‘உங்கள் முற்பிதாக்களின் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னால், அவர்கள் என்னிடம், ‘அவருடைய பெயர் என்ன?’ என்று கேட்பார்கள். அப்பொழுது நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” என்றான்.
யாத்திராகமம் 3 : 14 (OCVTA)
அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர்” என்றார். “நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ”
யாத்திராகமம் 3 : 15 (OCVTA)
மேலும் இறைவன் மோசேயிடம், “ ‘ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். “இதுவே என்றென்றும் என் பெயராய் இருக்கிறது, இந்தப் பெயராலேயே நான் தலைமுறை தலைமுறையாக அழைக்கப்பட வேண்டும்.
யாத்திராகமம் 3 : 16 (OCVTA)
“நீ போய், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களைக் கூட்டி அவர்களிடம், ‘ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா எனக்குக் காட்சியளித்துச் சொன்னதாவது: நான் உங்களில் கண்ணோக்கமாயிருந்து, எகிப்தில் உங்களுக்கு செய்யப்பட்டதைக் கண்டேன்.
யாத்திராகமம் 3 : 17 (OCVTA)
உங்களை எகிப்திலுள்ள அவலத்திலிருந்து விடுவித்து, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களின் நாடான, பாலும் தேனும் நிரம்பிவழியும் செழிப்புள்ள நாட்டிற்குக் கொண்டுவருவதாக வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன்’ என்று சொல்.
யாத்திராகமம் 3 : 18 (OCVTA)
“இஸ்ரயேலருடைய சபைத்தலைவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்கள். அதன்பின் நீயும் சபைத்தலைவர்களும் எகிப்தின் அரசனிடம் போய், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்திருக்கிறார். இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிகளை செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, பாலைவனத்துக்குப்போக எங்களுக்கு அனுமதி தாரும்’ என்று சொல்லுங்கள்.
யாத்திராகமம் 3 : 19 (OCVTA)
ஆனால் வல்லமையான ஒரு கரம் எகிப்தின் அரசனைப் பலவந்தப்படுத்தினால் ஒழிய, அவன் உங்களைப் போகவிடமாட்டான் என்று எனக்குத் தெரியும்.
யாத்திராகமம் 3 : 20 (OCVTA)
ஆதலால் நான் என் கரத்தை நீட்டி, எகிப்தியர் மத்தியில் செய்யப்போகும் எல்லா விதமான அதிசய செயல்களினால் அவர்களை வாதிப்பேன். அதன்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
யாத்திராகமம் 3 : 21 (OCVTA)
“எகிப்தியர்கள் இந்த இஸ்ரயேல் மக்களுக்குத் தயவுகாட்டும்படி நான் செய்வேன்; அதனால் நீங்கள் புறப்பட்டுப் போகும்போது, வெறுங்கையுடன் போகமாட்டீர்கள்.
யாத்திராகமம் 3 : 22 (OCVTA)
ஒவ்வொரு பெண்ணும் தன் அண்டை வீட்டாரிடமும், தன் வீட்டில் தங்கியிருக்கும் அந்நியப் பெண்ணிடமும் வெள்ளி நகைகளையும், தங்க நகைகளையும் உடைகளையும் கேட்டு வாங்கவேண்டும்; அவற்றை உங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும் அணிவிக்கவேண்டும். இவ்வாறு நீங்கள் எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22