யாத்திராகமம் 26 : 1 (OCVTA)
இறைசமுகக் கூடாரம் இறைசமுகக் கூடாரத்தைப் பத்து மூடுதிரைகளைக் கொண்டு செய்யவேண்டும். அத்திரைகள் தரமாகத் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு நெய்யப்பட்டிருக்க வேண்டும். சிறந்த தொழில் வல்லுநரால் அதில் கேருபீன்களின் உருவம் சித்திர வேலையாய் செய்யப்படவேண்டும்.
யாத்திராகமம் 26 : 2 (OCVTA)
எல்லா திரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் அளவுள்ளதாய் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 26 : 3 (OCVTA)
அதில் ஐந்து திரைகளை ஒன்றாக இணை, மற்ற ஐந்து திரைகளுக்கும் அப்படியே செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 4 (OCVTA)
இணைக்கப்பட்ட ஒரு தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பில் நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்யவேண்டும். மற்ற தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பிலும் அப்படியே செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 5 (OCVTA)
ஒரு திரையில் ஐம்பது வளையங்களைச் செய்; மற்றத் தொகுப்பு திரையின் கடைசியிலும் ஐம்பது வளையங்களைச் செய்யவேண்டும். அந்த வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிரெதிராய் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 26 : 6 (OCVTA)
பின்பு தங்கத்தினால் ஐம்பது கொக்கிகளைச் செய், இந்த இறைசமுகக் கூடாரம் ஒரே இணைப்பாக இருக்கும்படி, இரண்டு தொகுப்பு திரைகளையும் ஒன்றாக இணைப்பதற்கு இக்கொக்கிகளைப் பயன்படுத்து.
யாத்திராகமம் 26 : 7 (OCVTA)
இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகக் கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரினால் பதினோரு திரைகளைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 8 (OCVTA)
அந்த பதினோரு திரைகளும் ஒரே அளவாய் இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும் நான்கு முழம் அகலமும் உடையதாய் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 26 : 9 (OCVTA)
இவற்றில் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளையும் இன்னொரு தொகுப்பாக ஒன்றிணைக்கவேண்டும். ஆறாவது திரையை கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடித்துப்போடவேண்டும்.
யாத்திராகமம் 26 : 10 (OCVTA)
ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், ஐம்பது வளையங்கள் செய்யவேண்டும். மற்ற தொகுப்பு திரையின் கடைசி விளிம்பு நெடுகிலும் அப்படியே செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 11 (OCVTA)
அதன்பின் ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கூடாரத்தை ஒரே பகுதியாக இணைப்பதற்கு அந்த வளையங்களில் அந்தக் கொக்கிகளைப் போடு.
யாத்திராகமம் 26 : 12 (OCVTA)
கூடாரத்திரைகளின் மீதமுள்ள கூடுதலான நீளத்தைப் பொறுத்தவரையில், விடப்பட்ட பாதி திரையை இறைசமுகக் கூடாரத்தின் பின்பக்கத்தில் தொங்கவிட வேண்டும்.
யாத்திராகமம் 26 : 13 (OCVTA)
கூடாரத்திரைகளின் நீளம் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு முழம் கூடுதலாக இருக்கும். மீதமிருப்பது இறைசமுகக் கூடாரத்தை மூடும்படியாக இரண்டு பக்கங்களிலும் தொங்கும்.
யாத்திராகமம் 26 : 14 (OCVTA)
அக்கூடாரத்திற்காக மூடுதிரையை, சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக் கடாவின் தோலினால் செய்யவேண்டும். அதற்கு மேலாகப் போடுவதற்காக, கடல்பசுத் தோலினால் மற்றொரு மூடுதிரையைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 15 (OCVTA)
இறைசமுகக் கூடாரத்திற்காக சித்தீம் மரத்தினால் நிமிர்ந்து நிற்கும் மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 16 (OCVTA)
ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாய் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 26 : 17 (OCVTA)
ஒவ்வொரு மரச்சட்டத்திலும் ஒன்றுக்கொன்று இணைந்ததாக அமைக்கப்பட்ட, இரண்டு முளைகள் இருக்கவேண்டும். இவ்விதமாக இறைசமுகக் கூடாரத்தின் எல்லா மரச்சட்டங்களும் செய்யப்படவேண்டும்.
யாத்திராகமம் 26 : 18 (OCVTA)
இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் நிறுத்துவதற்காக இருபது மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 19 (OCVTA)
அந்த இருபது மரச்சட்டங்களை வைப்பதற்கு வெள்ளியினால் நாற்பது அடித்தளங்களைச் செய்யவேண்டும். ஒவ்வொரு முளைக்கும் கீழே ஒரு அடித்தளமாக ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் இரண்டு அடித்தளங்களைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 20 (OCVTA)
மற்ற பக்கத்திற்கு, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கத்துக்கு அப்படியே இருபது மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 21 (OCVTA)
ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களையும் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 22 (OCVTA)
இறைசமுகக் கூடாரத்தின் மேற்குப் பக்கமான கடைசியில் நிறுத்துவதற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 23 (OCVTA)
கடைசியில் உள்ள இரண்டு மூலைகளிலும் நிறுத்துவதற்கு இரண்டு மரச்சட்டங்களைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 24 (OCVTA)
இந்த இரண்டு மூலைகளிலும் அவை கீழேயிருந்து மேலேவரை இரட்டைப் பலகைகளாக இணைக்கப்பட வேண்டும். அவைகள் ஒரு வளையத்திலே இணைக்கப்பட வேண்டும். இரண்டும் அவ்வாறே இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 26 : 25 (OCVTA)
அப்பொழுது அந்த எட்டு மரச்சட்டங்களும் ஒவ்வொரு மரச்சட்டத்தின் கீழும், இரண்டிரண்டு வெள்ளி அடித்தளங்களாக, பதினாறு வெள்ளி அடித்தளங்களும் இருக்கும்.
யாத்திராகமம் 26 : 26 (OCVTA)
அத்துடன் சித்தீம் மரத்தால் குறுக்குச் சட்டங்களைச் செய்யவேண்டும். இறைசமுகக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும்,
யாத்திராகமம் 26 : 27 (OCVTA)
மறுபக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும், இறைசமுகக் கூடாரத்தின் பின்பக்கமான மேற்குப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 28 (OCVTA)
நடுவிலுள்ள குறுக்குச் சட்டம், மரச்சட்டங்களின் நடுவிலே ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை நீண்டிருக்க வேண்டும்.
யாத்திராகமம் 26 : 29 (OCVTA)
அந்த மரச்சட்டங்களைத் தங்கத்தகட்டால் மூடி, குறுக்குச் சட்டங்களை மாட்டுவதற்காக தங்க வளையங்களையும் செய்யவேண்டும். குறுக்குச் சட்டங்களையும் தங்கத்தகட்டால் மூடவேண்டும்.
யாத்திராகமம் 26 : 30 (OCVTA)
மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே இறைசமுகக் கூடாரத்தை அமைக்கவேண்டும்.
யாத்திராகமம் 26 : 31 (OCVTA)
நீலம், ஊதா, சிவப்பு நூல்களினாலும், திரித்த மென்பட்டினாலும் ஒரு திரைச்சீலையைச் செய்து, அதில் திறமையான கலைஞரைக்கொண்டு கேருபீன்களின் சித்திரவேலையைச் செய்யவேண்டும்.
யாத்திராகமம் 26 : 32 (OCVTA)
அந்தத் திரையைத் தங்கத்தகட்டால் மூடப்பட்ட சித்தீம் மரத்தாலான நான்கு கம்பங்களில், தங்கக் கொக்கிகளால் தொங்கவிட வேண்டும். அந்த நான்கு கம்பங்களும் நான்கு வெள்ளி அடித்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
யாத்திராகமம் 26 : 33 (OCVTA)
கொக்கிகளிலிருந்து திரையைத் தொங்கவிட்டுச் சாட்சிப்பெட்டியை திரைக்குப் பின்பாக வை. அத்திரை பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும்.
யாத்திராகமம் 26 : 34 (OCVTA)
மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வை.
யாத்திராகமம் 26 : 35 (OCVTA)
திரைக்கு வெளியே இறைசமுகக் கூடாரத்தின் வடக்குப் பக்கத்தில் மேஜையையும், மேஜைக்கு எதிரே தென்புறமாகக் குத்துவிளக்கையும் வை.
யாத்திராகமம் 26 : 36 (OCVTA)
கூடாரத்தின் வாசலுக்கு நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச் செய்யவேண்டும். அது ஒரு சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருக்கவேண்டும்.
யாத்திராகமம் 26 : 37 (OCVTA)
அத்திரைக்குத் தங்கக் கொக்கிகளையும், சித்தீம் மரத்தால் ஐந்து கம்பங்களையும் செய்து, அதைத் தங்கத்தகட்டால் மூடவேண்டும். அந்தக் கம்பங்களுக்கு வெண்கலத்தால் ஐந்து அடித்தளங்களையும் செய்யவேண்டும்.
❮
❯