யாத்திராகமம் 1 : 1 (OCVTA)
இஸ்ரயேலர் ஒடுக்கப்படுதல் யாக்கோபுடனும் அவனுடைய குடும்பங்களுடனும் எகிப்திற்குப்போன இஸ்ரயேலுடைய மகன்களின் பெயர்களாவன:
யாத்திராகமம் 1 : 2 (OCVTA)
ரூபன், சிமியோன், லேவி, யூதா,
யாத்திராகமம் 1 : 3 (OCVTA)
இசக்கார், செபுலோன், பென்யமீன்,
யாத்திராகமம் 1 : 4 (OCVTA)
தாண், நப்தலி, காத், ஆசேர்.
யாத்திராகமம் 1 : 5 (OCVTA)
யாக்கோபின் சந்ததிகள் மொத்தம் எழுபதுபேர். யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
யாத்திராகமம் 1 : 6 (OCVTA)
இப்பொழுது யோசேப்பும், அவனுடைய சகோதரர்கள் எல்லோரும், அந்த தலைமுறையினர் யாவரும் இறந்துபோனார்கள்.
யாத்திராகமம் 1 : 7 (OCVTA)
இஸ்ரயேல் என அழைக்கப்பட்ட, யாக்கோபின் சந்ததிகள் வளம்பெற்று, அதிகமாய்ப் பெருகினார்கள்; நாடு அவர்களால் நிரம்பும் அளவுக்கு அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் பெருகினார்கள்.
யாத்திராகமம் 1 : 8 (OCVTA)
பின்பு யோசேப்பைப்பற்றி அறியாத ஒரு புதிய அரசன் எகிப்தில் ஆட்சிக்கு வந்தான்.
யாத்திராகமம் 1 : 9 (OCVTA)
அவன் தன் மக்களிடம், “பாருங்கள், இஸ்ரயேலரோ நம்மைவிட எண்ணிக்கையில் அதிகமாயும், பலமுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள்.
யாத்திராகமம் 1 : 10 (OCVTA)
வாருங்கள், நாம் அவர்களுடன் விவேகமாய் நடந்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்கள் இன்னும் எண்ணிக்கையில் அதிகமாய்ப் பெருகிவிடுவார்கள், யுத்தம் ஒன்று உண்டானால் அவர்கள் நம் பகைவர்களோடு சேர்ந்து, நமக்கு விரோதமாகப் போரிட்டு நாட்டைவிட்டுப் போய்விடுவார்கள்” என்றான்.
யாத்திராகமம் 1 : 11 (OCVTA)
எனவே இஸ்ரயேலர்களைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தி ஒடுக்குவதற்கு, அடிமைகளை நடத்தும் அதிகாரிகளை அவர்களுக்கு மேலாக நியமித்தார்கள்; இவ்வாறு அவர்கள் பித்தோம், ராமசேஸ் என்னும் களஞ்சியப் பட்டணங்களைப் பார்வோனுக்காகக் கட்டினார்கள்.
யாத்திராகமம் 1 : 12 (OCVTA)
ஆனால் இஸ்ரயேலர் எவ்வளவு அதிகமாய் ஒடுக்கப்பட்டார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் பெருகிப் பரவினார்கள்; இதனால் எகிப்தியர் இஸ்ரயேலர்களுக்குப் பயந்து,
யாத்திராகமம் 1 : 13 (OCVTA)
அவர்கள் இஸ்ரயேலரைக் கொடூரமாய் நடத்தி வேலை வாங்கினார்கள்.
யாத்திராகமம் 1 : 14 (OCVTA)
செங்கல்லும் சாந்தும் செய்யும் கடினமான வேலைகளினாலும், வயல்களில் செய்யும் எல்லா விதமான வேலைகளினாலும், எகிப்தியர் அவர்களுடைய வாழ்க்கையைக் கசப்பாக்கினார்கள்; இரக்கமின்றி அவர்களுடைய எல்லாக் கடின வேலைகளிலும் அவர்களைக் கொடூரமாய் நடத்தினார்கள்.
யாத்திராகமம் 1 : 15 (OCVTA)
எகிப்திய அரசன், சிப்பிராள், பூவாள் என்னும் எபிரெய மருத்துவச்சிகளிடம்,
யாத்திராகமம் 1 : 16 (OCVTA)
“எபிரெய பெண்களின் பிரசவ நேரத்தில் அவர்கள் மணையின்மேல் இருக்கையில் நீங்கள் பார்த்து, பிறக்கும் பிள்ளை ஆண் குழந்தையானால், அதைக் கொன்றுபோடுங்கள்; பெண் குழந்தையானால் அதை வாழவிடுங்கள்” என்றான்.
யாத்திராகமம் 1 : 17 (OCVTA)
ஆனாலும் மருத்துவச்சிகளோ இறைவனுக்குப் பயந்து, எகிப்திய அரசன் தங்களுக்குச் செய்யச் சொல்லியிருந்ததைச் செய்யவில்லை; அவர்கள் ஆண்பிள்ளைகளையும் வாழவிட்டார்கள்.
யாத்திராகமம் 1 : 18 (OCVTA)
இதை அறிந்த எகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைப்பித்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் பிள்ளைகளை ஏன் வாழ விட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
யாத்திராகமம் 1 : 19 (OCVTA)
மருத்துவச்சிகள் பார்வோனுக்குப் பதிலளித்து, “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப் போன்றவர்களல்ல; அவர்கள் பலமுள்ளவர்கள், அதனால் மருத்துவச்சிகள் வந்து சேருமுன்பே அவர்கள் குழந்தைகளைப் பெற்றுவிடுகிறார்கள்” என்றார்கள்.
யாத்திராகமம் 1 : 20 (OCVTA)
இறைவன் மருத்துவச்சிகளுக்குத் தயவு காட்டினார்; இஸ்ரயேல் மக்கள் பெருகி எண்ணிக்கையில் இன்னும் அதிகரித்தார்கள்.
யாத்திராகமம் 1 : 21 (OCVTA)
மருத்துவச்சிகள் இறைவனுக்குப் பயந்தபடியால், அவர் அவர்களுடைய சொந்தக் குடும்பங்களை விருத்தியடையச் செய்தார்.
யாத்திராகமம் 1 : 22 (OCVTA)
பின்பு பார்வோன் தன் மக்கள் எல்லோருக்கும் கட்டளை கொடுத்து, “எபிரெயருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் நீங்கள் நைல் நதியில் எறிந்துவிடவேண்டும்; ஆனால், எல்லா பெண் குழந்தைகளையும் வாழவிடுங்கள்” என்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22