ஆமோஸ் 9 : 1 (OCVTA)
இஸ்ரயேல் அழிக்கப்படுதல் யெகோவா பலிபீடத்தின் அருகே நிற்பதைக் கண்டேன்: அவர் சொன்னதாவது: தூண்களின் உச்சியை இடித்துப்போடுங்கள். தூண்களின் வாசல் நிலைகள் அசையட்டும். அவற்றை மக்கள் எல்லோரின் தலைகள்மேலும் விழப்பண்ணுங்கள். மீந்திருப்போரை நான் வாளினால் கொல்லுவேன். ஒருவனும் தப்பி ஓடமாட்டான், ஒருவனுமே தப்பமாட்டான்.
ஆமோஸ் 9 : 2 (OCVTA)
பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன்.
ஆமோஸ் 9 : 3 (OCVTA)
கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும், நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன். என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும் அவர்களைக் கடிக்க பாம்பிற்குக் கட்டளையிடுவேன்.
ஆமோஸ் 9 : 4 (OCVTA)
தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளையிடுவேன். “நன்மைக்காக அல்ல, தீமைக்காகவே அவர்கள்மேல் என் கண்களை வைப்பேன்.”
ஆமோஸ் 9 : 5 (OCVTA)
யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார், அது உருகுகிறது, அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்; முழு நாடும் நைல் நதியைப்போல் பொங்கி எழுகிறது, பின்னர் எகிப்தின் நதியைப்போல் வற்றிப்போகிறது.
ஆமோஸ் 9 : 6 (OCVTA)
யெகோவா வானங்களின் உயர்வில் தமது அரண்மனைகளைக் கட்டுகிறார், பூமியின்மேல் அஸ்திபாரத்தை அமைக்கிறார்; கடல்நீரை அழைத்து பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறார். யெகோவா என்பது அவர் பெயர்.
ஆமோஸ் 9 : 7 (OCVTA)
இஸ்ரயேலின் மக்களே, நீங்களும் எனக்கு எத்தியோப்பியரைப்போல் அல்லவோ இருக்கிறீர்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்தேன். பெலிஸ்தியரை கப்தோரிலிருந்தும், சீரியரை கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
ஆமோஸ் 9 : 8 (OCVTA)
“நிச்சயமாக ஆண்டவராகிய யெகோவாவின் கண்கள் பாவமுள்ள அரசின்மேல் இருக்கின்றன. பூமியின்மேல் இராதபடி அந்த அரசை அழிப்பேன். எனினும் யாக்கோபின் குடும்பத்தை நான் முற்றிலும் அழிக்கமாட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
ஆமோஸ் 9 : 9 (OCVTA)
“நானே கட்டளையிட்டு, தானியத்தை அரிதட்டில் போட்டு அரித்தெடுப்பதுபோல, எல்லா நாடுகளுக்குள்ளேயும் இஸ்ரயேல் குடும்பத்தை அரித்தெடுப்பேன். ஒரு கூழாங்கல்லும் தரையில் விழாது.
ஆமோஸ் 9 : 10 (OCVTA)
என் மக்களுள் வாழும் எல்லா பாவிகளும், பேராபத்து எங்களை மேற்கொள்ளவோ சந்திக்கவோ மாட்டாது என்று சொல்கின்ற எல்லோரும் வாளினால் சாவார்கள்.
ஆமோஸ் 9 : 11 (OCVTA)
இஸ்ரேலின் மறுசீரமைப்பு “அந்த நாளில் “நான் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் அமைப்பேன். நான் அதன் உடைந்த இடங்களை பழுதுபார்த்து, அதன் பாழிடங்களை சீரமைப்பேன். முன் இருந்ததுபோல அதைக் கட்டுவேன்,
ஆமோஸ் 9 : 12 (OCVTA)
அப்பொழுது என் மக்கள் ஏதோமில் மீதியாக இருப்போரையும், என் பெயரைத் தரித்திருக்கும் எல்லா நாடுகளையும் உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இவற்றைச் செயற்படுத்தப்போகிற யெகோவா அறிவிக்கிறார்.
ஆமோஸ் 9 : 13 (OCVTA)
“நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது அறுவடை செய்கிறவனை உழுகிறவன் முந்திக்கொள்வான்; நடுகிறவனை திராட்சைப் பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான். மலைகளிலிருந்து புது திராட்சை இரசம் வடிந்து எல்லாக் குன்றுகளின்மேலும் ஓடும்,
ஆமோஸ் 9 : 14 (OCVTA)
நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்நிலைக்குக் கொண்டுவருவேன். “அவர்கள் பாழடைந்த பட்டணங்களை திரும்பக் கட்டி, அவற்றில் குடியிருந்து, திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அதன் இரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
ஆமோஸ் 9 : 15 (OCVTA)
நான் இஸ்ரயேலை அவர்கள் சொந்த நாட்டிலே நாட்டுவேன். நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து, இனியொருபோதும் வேரோடு பிடுங்கப்படமாட்டார்கள் என்று” உங்கள் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15