ஆமோஸ் 2 : 1 (OCVTA)
யெகோவா சொல்வது இதுவே: “மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். ஏனெனில் ஏதோமுடைய அரசனின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே.
ஆமோஸ் 2 : 2 (OCVTA)
மோவாபின்மேல் நெருப்பை அனுப்புவேன். அது கீரியோத்தின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும். யுத்த சத்தத்தின் மத்தியிலும், எக்காள முழக்கத்தின் மத்தியிலும் மோவாப் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து போகும்.
ஆமோஸ் 2 : 3 (OCVTA)
நான் அவளுடைய ஆளுநனை அழிப்பேன். அவளுடைய அதிகாரிகளை அவனுடன் கொல்லுவேன்” என்று யெகோவா சொல்லுகிறார்.
ஆமோஸ் 2 : 4 (OCVTA)
யெகோவா சொல்வது இதுவே: “யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். அவர்கள் யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து, அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள். ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய போலித் தெய்வங்கள் அவர்களை வழிவிலகப்பண்ணின.
ஆமோஸ் 2 : 5 (OCVTA)
ஆகையால் யூதாவின்மேல் நெருப்பை அனுப்புவேன். அது எருசலேமின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
ஆமோஸ் 2 : 6 (OCVTA)
இஸ்ரயேலின் நியாயத்தீர்ப்பு யெகோவா சொல்வது இதுவே: “இஸ்ரயேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். அவர்கள் நீதியானவர்களை வெள்ளிக்காகவும், சிறுமைப்பட்டவர்களை ஒரு ஜோடி செருப்புக்காகவும் விற்றார்களே.
ஆமோஸ் 2 : 7 (OCVTA)
தரையின் புழுதியை மிதிப்பதுபோல் ஏழைகளின் தலைகளை அவர்கள் மிதிக்கிறார்களே. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்க மறுக்கிறார்கள். தகப்பனும் மகனும் ஒரே பெண்ணிடம் உறவுகொண்டு, என் பரிசுத்த பெயரைத் தூய்மைக் கேடாக்குகிறார்கள்.
ஆமோஸ் 2 : 8 (OCVTA)
அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பலிபீடங்களின் அருகேயும் தாங்கள் அடைமானமாய் வாங்கிய உடைகளை விரித்துப் படுக்கிறார்கள். அபராதமாய்ப் பெற்ற திராட்சை இரசத்தைத் தங்கள் தெய்வத்தின் கோயில்களில் வைத்துக் குடிக்கிறார்கள்.
ஆமோஸ் 2 : 9 (OCVTA)
“எமோரியர் கேதுருமரங்களைப்போல் உயரமாயும், கர்வாலி மரங்களைப்போல் வைரமாயும் இருப்பினும், நான் என் மக்களுக்கு நாட்டைப் பெற்றுக் கொடுக்க அவர்களை இவர்களுக்கு முன்பாக அழித்தேன். மேலே அவர்களுடைய பழங்களையும், கீழே அவர்களுடைய வேர்களையும் நானே அழித்தேன்.
ஆமோஸ் 2 : 10 (OCVTA)
எமோரியர்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதற்காக, எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து, நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் உங்களை வழிநடத்தினேன்.
ஆமோஸ் 2 : 11 (OCVTA)
“நான் உங்கள் மகன்களிலிருந்து இறைவாக்கினரையும், உங்கள் வாலிபரிலிருந்து நசரேயர்களையும் எழுப்பினேன். இஸ்ரயேல் மக்களே, இது உண்மையல்லவா?” என யெகோவா அறிவிக்கிறார்.
ஆமோஸ் 2 : 12 (OCVTA)
“ஆனால் நீங்கள், நசரேயர்களை திராட்சை இரசம் குடிக்கப்பண்ணினீர்கள். இறைவாக்குச் சொல்லக்கூடாது என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.
ஆமோஸ் 2 : 13 (OCVTA)
“தானியத்தினால் நிறைந்த வண்டியில் நசுக்குவதுபோல, நான் உங்களை நசுக்குவேன்.
ஆமோஸ் 2 : 14 (OCVTA)
அப்பொழுது உங்களில் வேகமாய் ஓடக்கூடியவர்கள் தப்பமாட்டார்கள், பலமுள்ளவர்கள் தங்கள் பலத்தை ஒன்றுதிரட்டமாட்டார்கள், இராணுவவீரனுங்கூட தன் உயிரைத் தப்புவிக்கமாட்டான்.
ஆமோஸ் 2 : 15 (OCVTA)
வில்வீரனும் தனது இடத்தில் நிற்கமாட்டான், வேகமாய் ஓடும் இராணுவவீரனும் ஓடித்தப்பமாட்டான், குதிரைவீரனும் தன் உயிரைக் காப்பாற்றமாட்டான்.
ஆமோஸ் 2 : 16 (OCVTA)
அந்நாளில் துணிவுமிக்க வீரர்களும் நிர்வாணமாய் ஓடித்தப்புவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16