ஆமோஸ் 1 : 1 (OCVTA)
தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்: அக்காலத்தில் உசியா, யூதாவுக்கு அரசனாகவும், யோவாசின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலுக்கு அரசனாகவுமிருந்தார்கள்.
ஆமோஸ் 1 : 2 (OCVTA)
அவன் சொன்னதாவது: “யெகோவா சீயோனிலிருந்து கர்ஜிக்கிறார்; எருசலேமிலிருந்து முழங்குகிறார். மேய்ப்பர்களின் மேய்ச்சல் நிலங்கள் உலர்ந்து போகின்றன. கர்மேல் மலையுச்சியும் காய்ந்து போகிறது.”
ஆமோஸ் 1 : 3 (OCVTA)
இஸ்ரயேலரின் அயலவர்மேல் நியாயத்தீர்ப்பு யெகோவா சொல்வது இதுவே: “தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத்தை இரும்பு பற்களுள்ள கருவிகளால் போரடித்தார்களே.
ஆமோஸ் 1 : 4 (OCVTA)
ஆசகேலின் வீட்டின்மேல் நெருப்பை அனுப்புவேன். அது அவனுடைய மகன் பெனாதாதின் அரண்களையும் எரித்துப்போடும்.
ஆமோஸ் 1 : 5 (OCVTA)
தமஸ்குவின் வாசலை நான் உடைப்பேன். ஆவேன் பள்ளத்தாக்கிலுள்ள அரசனை அழித்து, பெத் ஏதேனில் செங்கோல் பிடிப்பவனையும் அழிப்பேன்; ஆராமின் மக்களை கீருக்கு நாடுகடத்துவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
ஆமோஸ் 1 : 6 (OCVTA)
யெகோவா சொல்வது இதுவே: “காசா பட்டணம் திரும்பதிரும்ப செய்த அநேக பாவங்களின் நிமித்தம், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். ஏனெனில் அவர்கள் முழுச்சமுதாயத்தையும் சிறைப்பிடித்து ஏதோமியரிடம் விற்றார்களே.
ஆமோஸ் 1 : 7 (OCVTA)
காசாவின் மதில்களின்மேல் நெருப்பை அனுப்புவேன்; அது அதன் அரண்களை சுட்டெரிக்கும்.
ஆமோஸ் 1 : 8 (OCVTA)
அஸ்தோத்தின் அரசனை நான் அழிப்பேன். அஸ்கலோனில் செங்கோல் பிடிப்பவனையும் ஒழிப்பேன். பெலிஸ்தியரில் கடைசியாய் இருப்பவன் சாகும்வரைக்கும், எக்ரோனுக்கெதிராக என் கரத்தை நீட்டுவேன்” என்று ஆண்டவராகிய யெகோவா சொல்கிறார்.
ஆமோஸ் 1 : 9 (OCVTA)
யெகோவா சொல்வது இதுவே: “தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். ஏனென்றால் சகோதர உடன்படிக்கையை உதாசீனம் செய்து, சிறைப்பிடிக்கப்பட்ட முழுச்சமுதாயத்தையும் ஏதோமுக்கு விற்றார்களே.
ஆமோஸ் 1 : 10 (OCVTA)
தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
ஆமோஸ் 1 : 11 (OCVTA)
யெகோவா சொல்வது இதுவே: “ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். இரக்க உணர்வின்றி தன் சகோதரனான இஸ்ரயேலை வாளுடன் துரத்திச் சென்றானே. அத்துடன் அவன் கோபம் அடங்காமல், அவனுடைய மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.
ஆமோஸ் 1 : 12 (OCVTA)
தேமானின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். அது போஸ்றாவின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.”
ஆமோஸ் 1 : 13 (OCVTA)
யெகோவா சொல்வது இதுவே: “அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். தன் எல்லைகளை விரிவாக்கும்படி கீலேயாத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே.
ஆமோஸ் 1 : 14 (OCVTA)
ரப்பாவின் மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன். அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும். அது யுத்தநாளின் முழக்கத்தின் மத்தியிலும், புயல் நாளின் சூறாவளியின் மத்தியிலும் நடக்கும்.
ஆமோஸ் 1 : 15 (OCVTA)
அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான். அவனும் அவனுடைய அதிகாரிகளும் ஒன்றாக சிறைப்படுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15