அப்போஸ்தலர்கள் 2 : 1 (OCVTA)
பரிசுத்த ஆவியானவரின் வருகை பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 2 (OCVTA)
அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
அப்போஸ்தலர்கள் 2 : 3 (OCVTA)
அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன.
அப்போஸ்தலர்கள் 2 : 4 (OCVTA)
அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 5 (OCVTA)
அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 6 (OCVTA)
அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 7 (OCVTA)
அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?
அப்போஸ்தலர்கள் 2 : 8 (OCVTA)
அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி?
அப்போஸ்தலர்கள் 2 : 9 (OCVTA)
பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா,
அப்போஸ்தலர்கள் 2 : 10 (OCVTA)
பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே.
அப்போஸ்தலர்கள் 2 : 11 (OCVTA)
இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 12 (OCVTA)
அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 13 (OCVTA)
ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 14 (OCVTA)
பேதுரு உரையாற்றுதல் அப்பொழுது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூதமக்களே, எருசலேமில் வாழுகிறவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்லுகிறேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 15 (OCVTA)
நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே!
அப்போஸ்தலர்கள் 2 : 16 (OCVTA)
இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது:
அப்போஸ்தலர்கள் 2 : 17 (OCVTA)
“ ‘இறைவன் சொல்லியபடி, கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள், உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 18 (OCVTA)
மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், என் ஆவியைப் பொழிவேன். அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 19 (OCVTA)
உயரே வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன், கீழே பூமியில் அடையாளங்களாக இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காண்பிப்பேன்.
அப்போஸ்தலர்கள் 2 : 20 (OCVTA)
பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே, சூரியன் இருண்டுபோகும்; சந்திரன் இரத்தமாக மாறும்.
அப்போஸ்தலர்கள் 2 : 21 (OCVTA)
கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’* யோயே. 2:28-32
அப்போஸ்தலர்கள் 2 : 22 (OCVTA)
“இஸ்ரயேலரே, இதைக் கேளுங்கள்: நீங்கள் அறிந்திருக்கிறபடி, இறைவன் உங்கள் மத்தியில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்களினால் அவர் இறைவனால் அங்கீகாரம் பெற்ற மனிதர் என்பதை நிரூபித்தார்.
அப்போஸ்தலர்கள் 2 : 23 (OCVTA)
இறைவன் தாம் தீர்மானித்திருந்த நோக்கத்தின்படியும், தமது முன்னறிவின்படியும், அவர் அந்த இயேசுவை உங்களிடம் ஒப்படைத்தார். நீங்களோ கொடியவர்களின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலைசெய்தீர்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 24 (OCVTA)
ஆனால் இறைவனோ, மரணத்தின் வேதனையிலிருந்து இயேசுவை விடுவித்து, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில், மரணத்தினால் அவரைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை.
அப்போஸ்தலர்கள் 2 : 25 (OCVTA)
தாவீது கிறிஸ்துவைக்குறித்துச் சொல்லியிருப்பதாவது: “ ‘நான் கர்த்தரை எப்பொழுதும் என் கண்முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் எனது வலதுபக்கத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படமாட்டேன்.
அப்போஸ்தலர்கள் 2 : 26 (OCVTA)
ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.
அப்போஸ்தலர்கள் 2 : 27 (OCVTA)
ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்.
அப்போஸ்தலர்கள் 2 : 28 (OCVTA)
நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’† சங். 16:8-11 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்). என்பதே.
அப்போஸ்தலர்கள் 2 : 29 (OCVTA)
“சகோதரரே, இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். நமது முற்பிதாவான தாவீது இறந்து அடக்கம்பண்ணப்பட்டானே. அவனது கல்லறை இந்நாள்வரை இங்கே இருக்கிறதே.
அப்போஸ்தலர்கள் 2 : 30 (OCVTA)
ஆனால் தாவீது இறைவாக்கினனாய் இருந்ததால், தனது சந்ததியிலே ஒருவரை தனது அரியணையில் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அவன் அறிந்திருந்தான்.
அப்போஸ்தலர்கள் 2 : 31 (OCVTA)
நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான்.
அப்போஸ்தலர்கள் 2 : 32 (OCVTA)
இறைவன் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம்.
அப்போஸ்தலர்கள் 2 : 33 (OCVTA)
கிறிஸ்து இறைவனுடைய வலதுபக்கத்திற்கு உயர்த்தப்பட்டு, பிதா வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் இப்பொழுது காண்கிறபடியும் கேட்கிறபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை ஊற்றியிருக்கிறார்.
அப்போஸ்தலர்கள் 2 : 34 (OCVTA)
தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது: “நான் உமது பகைவரை
அப்போஸ்தலர்கள் 2 : 35 (OCVTA)
உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை, நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” ’‡ சங். 110:1 என்று சொன்னான்.
அப்போஸ்தலர்கள் 2 : 36 (OCVTA)
“ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் அனைவரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே இறைவன், கர்த்தரும் கிறிஸ்துவும் ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான்.
அப்போஸ்தலர்கள் 2 : 37 (OCVTA)
அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 38 (OCVTA)
அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் பெயரில் திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 39 (OCVTA)
இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள அனைவருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப்போகிற அனைவருக்கும் இது உரியது” என்றான்.
அப்போஸ்தலர்கள் 2 : 40 (OCVTA)
பேதுரு இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்தக் கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை எச்சரித்தான்.
அப்போஸ்தலர்கள் 2 : 41 (OCVTA)
பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 42 (OCVTA)
விசுவாசிகளின் ஐக்கியம் அவர்கள் அப்போஸ்தலருடைய போதித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பிட்குதலுக்கும், மன்றாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 43 (OCVTA)
அனைவரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன.
அப்போஸ்தலர்கள் 2 : 44 (OCVTA)
விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 45 (OCVTA)
அவர்கள் தங்கள் சொத்துக்களையும், பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய் பகிர்ந்துகொடுத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 46 (OCVTA)
ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகள்தோறும் அப்பம் பிட்டார்கள். அவர்கள் எளிய இருதயத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 47 (OCVTA)
அவர்கள் இறைவனைத் துதிக்கிறவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அவர்களின் எண்ணிக்கையுடனே சேர்த்துக்கொண்டு வந்தார்.
❮
❯