2 சாமுவேல் 21 : 1 (OCVTA)
கிபியோனியரை பழிவாங்கல் தாவீதின் ஆட்சிக்காலத்தில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு பஞ்சம் உண்டானது. எனவே தாவீது யெகோவாவின் முகத்தைத் தேடினான். அப்பொழுது யெகோவா, “சவுல் கிபியோனியரைக் கொலைசெய்தபடியால் அவனுக்காகவும், இரத்தக்கறைபடிந்த அவன் குடும்பத்தாருக்காகவுமே இப்பஞ்சம் ஏற்பட்டது” என்றார்.
2 சாமுவேல் 21 : 2 (OCVTA)
அப்பொழுது தாவீது அரசன் கிபியோனியரை அழைப்பித்து அவர்களோடு பேசினான். கிபியோனியர் இஸ்ரயேலைச் சேர்ந்தவர்களல்ல; ஆனால் அவர்கள் எமோரியரில் மீதமுள்ளவர்கள்; இஸ்ரயேலர் அவர்களை அழிக்காமல் விடுவதாக வாக்களித்திருந்தும், சவுல் இஸ்ரயேல்மேலும் யூதாமேலும் கொண்ட வைராக்கியத்தால் அவர்களை அழித்தொழிக்க முயற்சி செய்தான்.
2 சாமுவேல் 21 : 3 (OCVTA)
தாவீது கிபியோனியரிடம், “உங்களுக்காக நான் என்ன செய்யவேண்டும்? யெகோவாவினுடைய உரிமைச்சொத்தான நாட்டை நீங்கள் ஆசீர்வதிக்கும்படி நான் என்ன இழப்பீடு செய்யலாம்?” என்று கேட்டான்.
2 சாமுவேல் 21 : 4 (OCVTA)
அதற்குக் கிபியோனியர், “சவுலிடமோ, அவன் குடும்பத்தாரிடமோ வெள்ளியையும், தங்கத்தையும் கேட்பதற்கு எங்களுக்கு உரிமையில்லை. இஸ்ரயேலில் ஒருவனையும் கொலைசெய்யவும் எங்களுக்கு உரிமையில்லை” என்றார்கள். அதற்குத் தாவீது, “நான் உங்களுக்காக என்ன செய்யவேண்டும்?” என்றான்.
2 சாமுவேல் 21 : 5 (OCVTA)
அதற்கு அவர்கள் அரசனிடம், “நாங்கள் இஸ்ரயேல் நாட்டில் எவ்விடத்திலும் நிலைத்திருக்காதபடி, சவுல் எங்களில் அதிகம் பேரைக் கொலைசெய்து எங்களுக்கு விரோதமாய் சதியாலோசனை செய்து எங்களை அழித்தான்.
2 சாமுவேல் 21 : 6 (OCVTA)
எனவே அவனுடைய சந்ததியில் ஏழு ஆண் மக்களை எங்களுக்குக் கொடுக்கவேண்டும். நாங்கள் அவர்களைக் கொலைசெய்து யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட சவுலின் ஊரான கிபியாவிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களை வெளியே எறிவோம்” என்றார்கள். அதற்கு அரசன், “அவர்களை உங்களிடம் கொடுப்பேன்” என்றான்.
2 சாமுவேல் 21 : 7 (OCVTA)
ஆனாலும் தாவீது தானும் சவுலின் மகன் யோனத்தானும் யெகோவா முன்னிலையில் செய்துகொண்ட ஆணையின் நிமித்தம், சவுலின் பேரனும் யோனத்தானின் மகனுமான மேவிபோசேத்தைத் தப்பவிட்டான்.
2 சாமுவேல் 21 : 8 (OCVTA)
ஆனால் ஆயாவின் மகள் ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற மகன்களான அர்மோனி, மற்றொரு மேவிபோசேத் ஆகிய இருவரையும்; அத்துடன் சவுலின் மகள் மேராப் மேகோலாத்தியனான பர்சிலாயின் மகன் ஆதரியேலுக்கு பெற்ற ஐந்து மகன்களையும் தெரிந்தெடுத்து,
2 சாமுவேல் 21 : 9 (OCVTA)
அவர்களைக் கிபியோனியரிடம் கொடுத்தான். கிபியோனியர் அவர்களைக் கொலைசெய்து யெகோவாவுக்குமுன் இருந்த குன்றின்மேல் எறிந்தார்கள். அந்த ஏழு பேரும் ஒரேயடியாய் விழுந்தார்கள். வாற்கோதுமை அறுவடையின் தொடக்கத்தின் முதல் நாட்களிலேயே இக்கொலை நடந்தது.
2 சாமுவேல் 21 : 10 (OCVTA)
ஆயாவின் மகள் ரிஸ்பாள் ஒரு துக்கவுடையை தனக்கென கற்பாறையின்மேல் விரித்தாள். அவள் அறுவடை காலம் முடிந்து உடல்களின்மேல் மழை பெய்யும்வரை உடல்களை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ, இரவில் காட்டு விலங்குகளோ தொடவிடவில்லை.
2 சாமுவேல் 21 : 11 (OCVTA)
சவுலின் மறுமனையாட்டியான ஆயாவின் மகள் ரிஸ்பாள் இப்படிச் செய்ததை தாவீதுக்கு அறிவித்தார்கள்.
2 சாமுவேல் 21 : 12 (OCVTA)
அதை அறிந்த தாவீது கீலேயாத்திலுள்ள யாபேஸ் குடிமக்களிடம் சென்று சவுலின், அவன் மகன் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டுவந்தான். பெலிஸ்தியர் சவுலை கில்போவாவிலே வெட்டிக்கொன்று, பெத்ஷான் நகர சதுக்கத்திலே தூக்கிலிட்டிருந்தார்கள். அதை அங்கிருந்து இரகசியமாக கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார் கொண்டுபோயிருந்தார்கள்.
2 சாமுவேல் 21 : 13 (OCVTA)
அங்கிருந்து தாவீது, சவுலின் அவன் மகன் யோனத்தானுடைய எலும்புகளையும், அத்துடன் கொலைசெய்யப்பட்டு எறியப்பட்ட ஏழு பேரின் சேர்க்கப்பட்ட எலும்புகளையும் கொண்டுவந்தான்.
2 சாமுவேல் 21 : 14 (OCVTA)
தாவீதின் மனிதர் சவுலின், யோனத்தானின் எலும்புகளை, பென்யமீன் நாட்டு சேலா ஊரிலுள்ள சவுலின் தகப்பன் கீஷின் கல்லறையில் அடக்கம் செய்து, அரசன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்தார்கள். அதன்பின்பே இறைவன் நாட்டிற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டு அதற்கு பதிலளித்தார்.
2 சாமுவேல் 21 : 15 (OCVTA)
பெலிஸ்தியருக்கு எதிரான யுத்தம் பெலிஸ்தியருக்கும், இஸ்ரயேலருக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. தாவீது தன் வீரர்களுடன் பெலிஸ்தியரை எதிர்த்து யுத்தம்பண்ணச் சென்றான். தாவீது மிகவும் களைப்படைந்தான்.
2 சாமுவேல் 21 : 16 (OCVTA)
அப்பொழுது இஸ்பிபெனோப் என்னும் இராட்சத வழித்தோன்றலைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவனுடைய வெண்கல ஈட்டியின் எடை முந்நூறு சேக்கலாயிருந்தது. அவன் ஒரு புது வாளுடன், “தாவீதைக் கொல்லுவேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
2 சாமுவேல் 21 : 17 (OCVTA)
அதைக்கண்ட செருயாவின் மகன் அபிசாய் தாவீதுக்கு உதவியாக வந்து அந்த பெலிஸ்தியனான இராட்சதனை அடித்துக் கொன்றான். இதனால் தாவீதின் மனிதர் அவனிடம், “இஸ்ரயேலின் தீபம் அணைந்து போகாதபடி நீர் இனி ஒருபோதும் எங்களோடு யுத்தத்திற்கு வரவேண்டாம்” என ஆணையிட்டுச் சொன்னார்கள்.
2 சாமுவேல் 21 : 18 (OCVTA)
சிறிது காலத்திற்குப்பின் கோப் என்னும் இடத்தில் பெலிஸ்தியருடன் மற்றொரு யுத்தம் நடந்தது. அப்பொழுது ஊஷாத்தியனான சிபெக்காய் என்பவன் இராட்சத வழித்தோன்றலில் வந்த சாப் என்பவனைக் கொன்றான்.
2 சாமுவேல் 21 : 19 (OCVTA)
கோப் என்ற இடத்தில் பெலிஸ்தியரோடு இன்னொருமுறை சண்டை நடந்தது. பெத்லெகேமியனான யாரெயொர்கிமின் மகன் எல்க்கானான், கித்தியனான கோலியாத்தின் சகோதரனைக் கொன்றான். அந்த எதிரியின் ஈட்டி நெசவுத்தறி மரத்தைப்போல் பெரியதாயிருந்தது.
2 சாமுவேல் 21 : 20 (OCVTA)
காத்தில் நடந்த மற்றொரு போரில் பெருத்த சரீரமுடைய ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய கைகால்கள் ஒவ்வொன்றிலும் ஆறு ஆறு விரல்களாக இருபத்து நான்கு விரல்கள் இருந்தன. இவனும் இராட்சத வழித்தோன்றலைச் சேர்ந்தவன்.
2 சாமுவேல் 21 : 21 (OCVTA)
இவன் இஸ்ரயேலை நிந்தித்தபோது, தாவீதின் சகோதரனான சிமெயாவின் மகன் யோனத்தான் அவனைக் கொலைசெய்தான்.
2 சாமுவேல் 21 : 22 (OCVTA)
இவர்கள் நான்குபேரும் காத் ஊரிலுள்ள இராட்சத சந்ததிகள், அவர்கள் தாவீதின் கையினாலும் அவனுடைய மனிதர்களின் கைகளினாலும் கொல்லப்பட்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22