2 இராஜாக்கள் 1 : 1 (OCVTA)
எலியாவும் அகசியா அரசனும் ஆகாப் அரசன் இறந்தபின்பு மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்.
2 இராஜாக்கள் 1 : 2 (OCVTA)
அப்பொழுது அரசன் அகசியா, சமாரியாவிலுள்ள அவனுடைய மேல்மாடியின் ஜன்னலின் வழியாய் கீழே விழுந்து காயப்பட்டிருந்தான். எனவே அவன் தனது ஆட்களை அனுப்பி, “எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் போய், நான் இந்த காயத்திலிருந்து சுகமாவேனா?” என்று கேட்டுவரும்படி சொன்னான்.
2 இராஜாக்கள் 1 : 3 (OCVTA)
ஆனால் யெகோவாவின் தூதன் திஸ்பிய ஊரைச்சேர்ந்த எலியாவை நோக்கி, “நீ சமாரியா அரசனின் தூதுவரைச் சந்தித்து அவர்களிடம், ‘இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் ஆலோசனை கேட்கப்போகிறீர்கள்?’ என்று கேள்.
2 இராஜாக்கள் 1 : 4 (OCVTA)
அதனால் யெகோவா சொல்வதாவது: ‘நீ படுத்திருக்கும் படுக்கையை விட்டு எழும்பவே மாட்டாய். நீ நிச்சயமாய் சாவாய்’ என்றும் சொல் என்றான்.” அப்படியே எலியா போனான்.
2 இராஜாக்கள் 1 : 5 (OCVTA)
தூதுவர்கள் அரசனிடம் திரும்பிவந்தபோது, அரசன் அவர்களிடம், “ஏன் திரும்பி வந்தீர்கள்?” என்று கேட்டான்.
2 இராஜாக்கள் 1 : 6 (OCVTA)
அதற்கு அவர்கள், “ஒரு மனிதன் எங்களைச் சந்திக்க வந்தான். அவன் எங்களைப் பார்த்து, ‘உங்களை அனுப்பிய அரசனிடம் நீங்கள் திரும்பிப்போய், யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமான பாகால் சேபூபிடம் விசாரிப்பதற்கு மனிதரை அனுப்புகிறாய்? எனவே நீ படுக்கும் படுக்கையை விட்டு எழும்பமாட்டாய். நிச்சயமாகவே நீ சாவாய்’ என்று சொல்லுங்கள் என்கிறான்” என்றார்கள்.
2 இராஜாக்கள் 1 : 7 (OCVTA)
அரசன் அவர்களிடம், “உங்களைச் சந்திக்க வந்து இதை உங்களிடம் கூறிய மனிதன் எப்படிப்பட்டவன்?” என்று கேட்டான்.
2 இராஜாக்கள் 1 : 8 (OCVTA)
அப்பொழுது அவர்கள், “அவன் கம்பளி உடையை அணிந்து, இடுப்பைச் சுற்றி தோல் பட்டியை கட்டியிருந்தான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவன் திஸ்பியனாகிய எலியாதான்” என்றான்.
2 இராஜாக்கள் 1 : 9 (OCVTA)
அதன்பின் அவன் ஒரு இராணுவத் தளபதியையும், அவனுடைய ஐம்பது மனிதரைக்கொண்ட ஒரு குழுவையும் எலியாவிடம் அனுப்பினான். தளபதி மலையின் உச்சியில் உட்கார்ந்துகொண்டிருந்த எலியாவிடம் போய், “இறைவனுடைய மனிதனே, ‘கீழே வா’ என்று அரசன் கூறுகிறார்” என்றான்.
2 இராஜாக்கள் 1 : 10 (OCVTA)
எலியா அதற்குப் பதிலாக தளபதியிடம், “நான் இறைவனுடைய மனிதனாயிருந்தால் பரலோகத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது மனிதரையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அப்படியே பரலோகத்திலிருந்து நெருப்பு விழுந்து தளபதியையும் அவன் மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது.
2 இராஜாக்கள் 1 : 11 (OCVTA)
அப்பொழுது அரசன் மற்றொரு தளபதியை ஐம்பது மனிதருடன் எலியாவிடம் அனுப்பினான். தளபதி அவனிடம், “இறைவனுடைய மனிதனே, உடனே கீழே வா என்று அரசன் சொல்கிறார்” என்றான்.
2 இராஜாக்கள் 1 : 12 (OCVTA)
எலியா அதற்குப் பதிலாக, “நான் ஒரு இறைவனுடைய மனிதனாயிருந்தால், பரலோகத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது மனிதரையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அப்படியே பரலோகத்திலிருந்து இறைவனுடைய நெருப்பு விழுந்து அவனையும் அவனுடைய ஐம்பது மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது.
2 இராஜாக்கள் 1 : 13 (OCVTA)
அப்பொழுது அரசன் மூன்றாம் தளபதியையும் ஐம்பது மனிதருடன் சேர்த்து அனுப்பினான். இந்த மூன்றாம் தளபதி மேலே ஏறிப்போய் எலியாவின்முன் முழங்காற்படியிட்டு, “இறைவனுடைய மனிதனே, என்னுடைய உயிருக்கும் உமது பணியாட்களான இந்த ஐம்பது மனிதருடைய உயிர்களுக்கும் சற்று இரக்கம் காட்டும்.
2 இராஜாக்கள் 1 : 14 (OCVTA)
இதோ பாரும், பரலோகத்திலிருந்து நெருப்பு விழுந்து முந்திய இரு தளபதிகளையும், அவர்களுடைய மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது. ஆனால் இப்போதோ என்னுடைய உயிருக்கு இரக்கம் காட்டும்” என்று கெஞ்சிக்கேட்டான்.
2 இராஜாக்கள் 1 : 15 (OCVTA)
அப்பொழுது யெகோவாவின் தூதன் எலியாவிடம், “அவனோடே கீழே இறங்கிப்போ. அவனுக்குப் பயப்படாதே” என்றான். எலியா உடனே எழுந்து அவனோடுகூட கீழே இறங்கி அரசனிடம் போனான்.
2 இராஜாக்கள் 1 : 16 (OCVTA)
அவன் அரசனிடம், “யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் விசாரிப்பதற்கு தூதுவரை அனுப்பினாய்? நீ இதைச் செய்தபடியினால், படுத்திருக்கும் படுக்கையை விட்டு எழும்பவே மாட்டாய். நீ நிச்சயமாய் சாவாய் என்கிறார்” என்றான்.
2 இராஜாக்கள் 1 : 17 (OCVTA)
எலியா கூறிய யெகோவாவின் வார்த்தையின்படியே அகசியா இறந்தான். அகசியாவுக்கு ஒரு மகனும் இல்லாதிருந்தபடியினால் அவன் சகோதரன் யோராம் அவனுக்குப்பின் அரசனானான். யூதா அரசன் யோசபாத்தின் மகனான யெகோராம் யூதாவை அரசாண்ட இரண்டாம் வருடத்திலே யோராம் இஸ்ரயேலின் அரசனானான்.
2 இராஜாக்கள் 1 : 18 (OCVTA)
அகசியா அரசனின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், இஸ்ரயேல் அரசர்களின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18