2 கொரிந்தியர் 5 : 1 (OCVTA)
நமது பரலோகக் குடியிருப்பு இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு.
2 கொரிந்தியர் 5 : 2 (OCVTA)
அதுவரைக்கும் நாங்கள் எங்கள் பரலோகக் குடியிருப்பை, தவிப்புடன் உடையைப்போல் அணிந்துகொள்ள வாஞ்சையாய் இருக்கிறோம்.
2 கொரிந்தியர் 5 : 3 (OCVTA)
ஏனெனில் நாம் அவ்விதம் உடுத்தியிருக்கும்போது, நாங்கள் நிர்வாணிகளாய் காணப்படமாட்டோம்.
2 கொரிந்தியர் 5 : 4 (OCVTA)
இந்த உடலாகிய கூடாரத்தில் இருக்கும்வரையில் நாங்கள் அவதியுற்றுத் தவிக்கிறோம். நாங்கள் செத்து உடையற்றவர்களாய் இருக்கவேண்டும் என்பதல்ல. நாங்கள் பரலோகக் குடியிருப்பை உடையைப்போல் அணிந்துகொள்ள வேண்டுமென்றே விரும்புகிறோம். அப்பொழுது சாகும் தன்மையுள்ள இந்த உடல் வாழ்வினால் ஆட்கொள்ளப்படும்.
2 கொரிந்தியர் 5 : 5 (OCVTA)
இந்த முக்கிய நோக்கத்திற்காகவே, இறைவன் எங்களை உண்டாக்கியிருக்கிறார். அவரே வரவேண்டியவற்றிற்கு உத்தரவாதமாக, தனது ஆவியானவரை நிலையான வைப்பாக எங்களுக்குத் தந்திருக்கிறார்.
2 கொரிந்தியர் 5 : 6 (OCVTA)
ஆகையால் நாங்கள் எப்பொழுதும் மனத்தைரியத்தோடு இருக்கிறோம். எங்கள் உடலாகிய வீட்டில் குடியிருக்கும் காலம்வரை, கர்த்தரிடமிருந்து புறம்பாயிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.
2 கொரிந்தியர் 5 : 7 (OCVTA)
ஏனெனில் நாம் காண்பதினால் அல்ல, விசுவாசிப்பதினாலேயே வாழ்கிறோம்.
2 கொரிந்தியர் 5 : 8 (OCVTA)
நாங்கள் மனத்தைரியத்துடனே இருக்கிறோம். ஆனால் இந்த உடலைவிட்டு வெளியேறி, கர்த்தரோடு குடியிருக்கவே அதிகமாய் விரும்புகிறோம்.
2 கொரிந்தியர் 5 : 9 (OCVTA)
எனவே நாங்கள் உடலில் குடியிருந்தாலும், அல்லது உடலைவிட்டு வெளியே போனாலும், அவருக்கு பிரியமாய் வாழ்வதையே எங்கள் குறிக்கோளாகும்.
2 கொரிந்தியர் 5 : 10 (OCVTA)
ஏனெனில், நாம் எல்லோருமே கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் அரியணைக்கு முன்பாக நிற்கவேண்டும். அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்த நன்மையினாலும் தீமையினாலும், அவற்றிற்கு ஏற்ற பலனைப் பெற்றுக்கொள்வோம்.
2 கொரிந்தியர் 5 : 11 (OCVTA)
ஒப்புரவாக்கும் ஊழியம் ஆகவே நாங்கள், கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் என்ன என்பதை அறிந்திருக்கிறபடியால், இறைவனிடம் திரும்பும்படி மனிதரை இணங்கவைக்க முயலுகிறோம். நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் நன்கு அறிவார். அதுபோலவே, உங்களுடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
2 கொரிந்தியர் 5 : 12 (OCVTA)
நாங்களோ மறுபடியும் எங்களை உங்களுக்கு முன்பாக சிபாரிசு செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் எங்களைக் குறித்து நீங்கள் பெருமையடையத்தக்க ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம். அப்போது இருதயத்தில் இருப்பதைப் பார்க்கிலும், வெளித்தோற்றத்தில் காணப்படுவதைக் குறித்து பெருமையடைவோருக்கு நீங்களே தகுந்த பதில் கூறமுடியும்.
2 கொரிந்தியர் 5 : 13 (OCVTA)
நாங்கள் பைத்தியக்காரராக இருக்கிறோம் என்றால், இறைவனுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம். நாங்கள் தெளிந்த மனதையுடையவர்களாக இருக்கிறோம் என்றால், உங்களுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 5 : 14 (OCVTA)
கிறிஸ்துவின் அன்பு எங்களை வலியுறுத்தி ஏவுகிறது. ஏனெனில், நம் எல்லோருக்காகவும் ஒருவர் இறந்தார்; இதனால் நாம் எல்லோருமே இறந்தோம் என்று நாங்கள் நிச்சயமாகவே நம்புகிறோம்.
2 கொரிந்தியர் 5 : 15 (OCVTA)
அவர் எல்லோருக்காகவுமே இறந்தார், இதனால் வாழ்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழக்கூடாது. அவர்கள் தங்களுக்காக இறந்து, மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழவேண்டும்.
2 கொரிந்தியர் 5 : 16 (OCVTA)
எனவே, இனிமேலும் நாங்கள் உலக நோக்கத்தின்படி ஒருவரையும் மதிப்பீடு செய்வதில்லை. முன்பு கிறிஸ்துவையும் நாங்கள் அப்படியே மதிப்பிட்டோம். ஆனால் இனி ஒருபோதும், நாங்கள் அவரை அவ்வாறு மதிப்பிடுவதில்லை.
2 கொரிந்தியர் 5 : 17 (OCVTA)
ஆகவே, யாராவது கிறிஸ்துவில் இருந்தால், புதிய படைப்பு வந்திருக்கிறது: பழையவைகள் ஒழிந்து போனது, எல்லாம் புதியவைகள் ஆனது.
2 கொரிந்தியர் 5 : 18 (OCVTA)
இவையெல்லாம் இறைவனிடமிருந்தே வருகிறது. அவரே கிறிஸ்துவின் மூலமாய், எங்களைத் தம்முடனே ஒப்புரவாக்கிக் கொண்டார். அவரே, இந்த ஒப்புரவாக்குகின்ற ஊழியத்தையும் எங்களுக்குக் கொடுத்தார்:
2 கொரிந்தியர் 5 : 19 (OCVTA)
“இப்பொழுது இறைவன் மனிதருடைய பாவங்களை அவர்களுக்கெதிராகக் கணக்கு வைக்காமல், கிறிஸ்துவின் மூலமாக உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கினார்.” இந்த ஒப்புரவாக்கும் செய்தியையே, அவர் எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
2 கொரிந்தியர் 5 : 20 (OCVTA)
ஆகவே இறைவன், எங்கள் மூலமாகவே தமது வேண்டுகோளைத் தெரிவிக்கிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்கிறோம். ஆகவே நீங்கள் இறைவனுடன் ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பாக நாங்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.
2 கொரிந்தியர் 5 : 21 (OCVTA)
நமக்காக இறைவன் பாவமே இல்லாதவரை பாவமாக்கினார். நாம் அவரில் இறைவனின் நீதியாகும்படிக்கே அவர் இப்படிச் செய்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21